Published:Updated:

அத்துவானக் காட்டில் ஓர் அதிசயம் - வழிப்போக்கர்கள் இளைப்பாறக் கிராம மக்களின் அசத்தல் முயற்சி!

துரை.வேம்பையன்
அத்துவானக் காட்டில் ஓர் அதிசயம் - வழிப்போக்கர்கள் இளைப்பாறக் கிராம மக்களின் அசத்தல் முயற்சி!
அத்துவானக் காட்டில் ஓர் அதிசயம் - வழிப்போக்கர்கள் இளைப்பாறக் கிராம மக்களின் அசத்தல் முயற்சி!

சுயநலவாதிகள், தன் நலம் எனச் சுயநலமாக யோசிப்பவர்கள் மலிந்துவிட்ட காலம் இது. இப்படிப்பட்ட காலத்தில், வெயிலில் பயணித்து வருபவர்கள் அமர்ந்து இளைப்பாறிவிட்டுப் போவதற்காக யாருமற்ற அத்துவானக் காட்டில் நாட்டு ஓடுகளால் குடில் அமைத்து, அசத்தியுள்ளனர் ஒரு கிராம மக்கள்.

கரூர் மாவட்டத்திலேயே வெயில் அதிகம் அடிக்கும் ஒன்றியம் க.பரமத்தி. கடந்த இரண்டு வருடங்களாக 110 டிகிரியை தாண்டி வெயில் அடித்து, வெயில் மாவட்டமான வேலூரை பின்னுக்குத் தள்ளிவிட்டு, இந்த க.பரமத்தி பகுதி வெயில் ரேட்டிங்கில் முன்னுக்கு வந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், இந்த க.பரமத்தியில் இருந்து சின்னதாராபுரம் வரையில் உள்ள சாலையின் இடையில் இருக்கிறது தெம்மாண்டபாளையம். இந்தக் கிராமம் சாலையை விட்டு இரண்டு கிலோ மீட்டர் தூரம் உள்ளே தள்ளி இருக்கிறது. அதனால், இந்தச் சாலைப் பகுதியை தெம்மாண்டபாளையம் பிரிவு என்று அழைக்கிறார்கள். இந்தச் சாலைப் பகுதியில்தான் தெம்மாண்டப்பாளையத்தைச் சேர்ந்த கிராம மக்கள், தங்களுக்குள் நிதி வசூல் செய்து, நாட்டு ஓடுகளால் ஆன குடிலை அமைத்திருக்கிறார்கள். 

அதற்கு முன்னே பந்தலையில் அமைத்திருக்கிறார்கள். இந்தக் குடிலை சிமென்டுக்குப் பதிலாகச் சுண்ணாம்பைக் கொண்டு அமைத்திருப்பதால், இந்தக் குடில் திண்டில் அமர்ந்தால், சில்லென்று இருக்கிறது. இந்தப் பகுதியைச் சுற்றி, ஆள் அரவம் இல்லை. வெறும் கருவேலம் மரங்களும், புதர்களும்தான் உள்ளன. இதுபற்றி, நம்மிடம் பேசிய அந்தக் கிராம இளைஞர் ஒருவர், ``இதை இன்னைக்கு நேத்து நாங்க அமைக்கலை. இந்த வழியாகப் பயணிப்போரின் நலன் கருதி பல வருடங்களுக்கு முன்பே அமைச்சுட்டோம். க.பரமத்தியில் இருந்து சின்னதாராபுரம் 20 கிலோமீட்டர்ல இருக்கு. இதற்கிடையில் பயணம் செய்து வரும் மக்கள் பெரும்பாலும் பொட்டல்காட்டைத்தான் பார்க்க நேரும். 

அதனால், அவர்கள் சற்று இளைப்பாற வசதியாக எங்க ஊர் பெரியவர்கள் இதை அமைச்சாங்க. இதனால், இந்த வழியாகப் போகும் வழிப்போக்கர்கள் பயனடைஞ்சாங்க. ஆரம்பத்துல எங்க ஊர் சார்பாக இங்க ரெண்டு பெரிய பானைகள் வச்சு, தண்ணீர் நிரப்பி வந்தோம். வழிப்போக்கர்களின் தாகம் தீர்க்கவே அப்படி செஞ்சோம். ஆனா, சில விஷமிகள் மட்டும் இந்தப் பானை தண்ணீரைக் கொண்டு டாஸ்மாக் சரக்கு அடிச்சதோடு, இங்கேயே படுத்துக் கிடந்தாங்க. 

வாந்தி எடுத்து வச்சாங்க. காலி மது பாட்டில்களை இங்கேயே வீசினாங்க. இதனால், வழிப்போக்கர்கள் இங்க இளைப்பாற அஞ்சி, நொந்து போனாங்க. அதனால், தற்காலிகமாகப் பானைகளை வைக்காம தவிர்த்திருக்கிறோம். 'மது அருந்தத் தடை செய்யப்பட்டுள்ளது'னு போர்டு வச்சுருக்கோம். கூடவே, இப்பவும் இந்தப் பகுதி மக்கள் தலைச்சுமையாக பொருள்களைத் தூக்கிக்கொண்டு பயணிக்கிறார்கள். அவர்களுக்கும் உதவும் விதமா, இந்த ஓட்டுக் குடிலுக்கு முன்பு சுமைதாங்கி கல்லையும் அமைத்திருக்கிறோம். இந்த வழியா பயணிப்போர்களுக்கு எங்க கிராமத்தால் ஆன சின்ன உதவி" என்றார்.