Published:Updated:

`லஞ்சம் வாங்கச் சொல்லி டார்ச்சர்?' - உயிரை மாய்த்துக்கொண்ட கால்நடை மருத்துவர்

`லஞ்சம் வாங்கச் சொல்லி டார்ச்சர்?' - உயிரை மாய்த்துக்கொண்ட கால்நடை மருத்துவர்
`லஞ்சம் வாங்கச் சொல்லி டார்ச்சர்?' - உயிரை மாய்த்துக்கொண்ட கால்நடை மருத்துவர்

திருத்தணி அருகே கால்நடை மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்ததற்கு காரணமான கால்நடை உதவி இயக்குநர் மகேந்திரன் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும், அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு கால்நடை உதவி மருத்துவ சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர். 


திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள ஆர்.கே பேட்டை அடுத்த பாலாபுறம் கால்நடை மருத்துவமனையில் வேலை பார்த்தவர் டாக்டர் சிவா. இவர் நேற்று இரவு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு கால்நடை மருத்துவ உதவி இயக்குநர் மகேந்திரன் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருத்தணி தர்மராஜா கோயில் தெருவில் உள்ள கால்நடை உதவி இயக்குநர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கால்நடை உதவி மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில்  மாநில பொதுச் செயலாளர் தணிகைவேல் தலைமையில் காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர் மற்றும் சென்னை உட்கோட்டத்தில் உள்ள பல்வேறு பகுதியிலிருந்து கால்நடை மருத்துவ உதவி மருத்துவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒருங்கிணைந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். 

ஆர்ப்பாட்டத்தில் `` கால்நடை மருத்துவர் சிவாவின் மரணம் தற்கொலை அல்ல, திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பல நெருக்கடிகள் கொடுத்து அவர் இறப்பதற்குக் காரணமாக இருந்தவர் மகேந்திரன் தான். அவர் இறந்ததற்கு  முழுப் பொறுப்பு மகேந்திரன் தான். சிவா பணி செய்யும் பொழுது தொடர் இடையூறுகளைக் கொடுத்து அவரை லஞ்சம் வாங்கச் சொல்லியும் அவருக்குப் பல நெருக்கடிகள் கொடுத்து பணம் வாங்க வற்புறுத்திப் பணி செய்யவிடாமல் தடுத்து அவருக்கு பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்திய மகேந்திரன் தான் அவர் தற்கொலை செய்துகொள்ள காரணம். கால்நடை உதவி இயக்குநர் டாக்டர் மகேந்திரன் மீது மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுத்து அவரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும். அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்குத் தமிழ்நாடு கால்நடை உதவி மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை வைக்கிறது" என்றனர். 

மேலும் இறந்த மருத்துவர் சிவாவின் குடும்பத்துக்கு இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை தமிழக அரசுக்கு இந்த ஆர்ப்பாட்டத்தில் இவர்கள் வைத்தார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் ``அரசு திட்டங்கள் மூலம் ஆடுகள் மாடுகள் வாங்குவதில் பயனாளிகளிடமும் மற்றும் இடைத்தரகர்கள் மூலம் லஞ்சம் வாங்கச் சொல்லி தமிழகம் முழுவதும் கால்நடை மருத்துவ உயர் அதிகாரிகள் வற்புறுத்தி லஞ்சம் வாங்கத் தூண்டுவதாகவும், அரசியல்வாதிகள் தலையீடு அதிகாரிகள் அழுத்தத்தால் கால்நடை மருத்துவத் துறையில் மருத்துவராக நாங்கள் பணி செய்வது மிகவும் கஷ்டமாக உள்ளது" என்று தமிழ்நாடு கால்நடை உதவி மருத்துவர்கள் சங்கம் மாநில பொதுச் செயலாளர் தணிகைவேல் செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.

கால்நடை மருத்துவர் சிவாவின் மரணத்துக்கு நியாயம் கேட்டு வேலூர் மாவட்டம் சோளிங்கர் அரசு மருத்துவமனை முன்பு உடலை வாங்காமல் அவரின் உறவினர்கள் அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும், சிவாவின் குடும்பத்துக்கு நீதி வழங்க வேண்டும் மற்றும் மரணத்துக்குக் காரணமான கால்நடை உதவி இயக்குநர் மகேந்திரனைக் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை அதிகாரிகள் சமரசம் செய்து அனுப்பிவைத்தனர். சாலைமறியலால் மருத்துவமனை முன்பு போக்குவரத்து நெரிசலும் பரபரப்பும் ஏற்பட்டது.