Published:Updated:

`போலீஸ் ஸ்டேஷனிலே வந்து அடிக்கிறாங்க!’ - கலெக்டர் ஆபீஸூக்கு மண்ணெண்ணெயுடன் வந்த பெண் கண்ணீர்

`போலீஸ் ஸ்டேஷனிலே வந்து அடிக்கிறாங்க!’ - கலெக்டர் ஆபீஸூக்கு மண்ணெண்ணெயுடன் வந்த பெண் கண்ணீர்
`போலீஸ் ஸ்டேஷனிலே வந்து அடிக்கிறாங்க!’ - கலெக்டர் ஆபீஸூக்கு மண்ணெண்ணெயுடன் வந்த பெண் கண்ணீர்

திருவாரூர் மாவட்டம், திருக்கருக்காவூரிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்த பெண் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய்யோடு வந்துள்ளார். ஆட்சியர் அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அவரை மடக்கிப் பிடித்தனர்.

திங்கள்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மக்களின் கோரிக்கை மனுக்கள் பெறப்படுவது வழக்கம். அதுபோல் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் வாங்கப்பட்டு வந்தன. அப்போது திருக்கருக்காவூரிலிருந்து மனு கொடுக்க வந்த பவானி என்ற 40 வயதுடைய பெண்ணொருவர் ஒரு லிட்டர் மண்ணெண்ணெயோடு வந்துள்ளார். மனு நாள் என்பதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாயில்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் பவானியைச் சோதனை செய்தனர். அப்போது நிற்காமல் உள்ளே வந்த பவானியைப் போலீஸார் மடக்கிப்பிடித்து சோதனை செய்துள்ளனர். பவானியிடம் மண்ணெண்ணெய் இருப்பது தெரியவந்துள்ளது. பிறகு அவரைப் பிடித்து விசாரித்த காவலர்கள் மண்ணெண்ணெயை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரிடம் பேசிய காவலர்கள், ``உங்களுடைய கோரிக்கைகளை மனு மூலமாக எழுதி மாவட்ட ஆட்சியரிடம் கொடுங்கள். உங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்" எனக் கூறினர்.

இதுபற்றி பவானியிடம் விசாரித்தபோது, ``நான் திருக்கருகாவூரில் உள்ள ஒரு பள்ளியில் சத்துணவு சமைக்கும் பணியாளராக வேலை பார்க்கிறேன். என் கணவர் சென்னையில் ஓர் அங்காடியில் பணிபுரிகிறார். நானும் என் கணவரும் சேர்ந்து 10 வருடங்களுக்கு முன்பு 22,000 ரூபாய் கொடுத்து அனந்த சுப்பிரமணி என்பவரிடமிருந்து இடம் வாங்கினோம்.

ஆனால், தற்போது அந்த இடத்துக்கு அருகிலுள்ள புகழேந்தி என்பவர் வேலி போட்டுத் தகராறு செய்து வருகிறார். இதுபற்றி நான் காவல் நிலையங்களில் புகார் தெரிவித்தும் எந்தப் பயனும் இல்லை. ஆனால், என்மீது புகழேந்தி கொடுத்த புகாரின் பேரில் என்னைக் காவல் நிலையத்துக்கு வரவழைத்துப் பேசினர். அப்போது அங்கு வந்திருந்த காவலர்கள் சிலர் காவல் நிலையத்தின் உள்ளேயே என்னை அடித்துத் துன்புறுத்தினர். அதைக்கூட கண்டுகொள்ளாமல் இந்தக் காவலர்கள் நின்றுகொண்டிருந்தார்கள்.

இதுபோன்ற பல அச்சுறுத்தல்களை நான் தினம் தினம் சந்தித்து வருகிறேன். நான் பள்ளிக்கு வேலைக்குச் செல்வதா இல்லை தினம் காவல்நிலையத்துக்கு ஏறி இறங்குவதா என எனக்குத் தெரியவில்லை. அதனால்தான் இறுதிக் கட்டமாக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்துள்ளேன். இதிலும் நியாயம் கிடைக்கவில்லை என்றால் என் உயிரை மாய்த்துக்கொள்ளலாம் என முடிவு செய்துதான் மண்ணெண்ணெய்யோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தேன். ஆனால், காவலர்கள் என்னைத் தடுத்து நிறுத்தி என்னிடம் இருந்த மண்ணெண்ணெய்யை பிடுங்கிக் கொண்டனர். எனவே, தற்போது நான் எனது கோரிக்கைகளை மனுவாக எழுதி மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்க முடிவெடுத்துள்ளேன்" எனக் கூறிச் சென்றார்.