Published:Updated:

``எங்களுக்கும் சொந்தவீடு... நினைக்கும்போதே நெஞ்சம் நிறையுது" - கரூர் துப்புரவுப் பணியாளர்கள்!

"துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகள், நல்ல முறையில் படித்து அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டும்.  நகராட்சிகளைப் போன்றே பேரூராட்சிகளிலும் இதுபோன்ற வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்!"

``எங்களுக்கும் சொந்தவீடு... நினைக்கும்போதே நெஞ்சம் நிறையுது" - கரூர் துப்புரவுப் பணியாளர்கள்!
``எங்களுக்கும் சொந்தவீடு... நினைக்கும்போதே நெஞ்சம் நிறையுது" - கரூர் துப்புரவுப் பணியாளர்கள்!

ந்தப் பூமியில் வாழும் அனைவருக்கும் உள்ள மிகப்பெரிய ஆசை, `சொந்தமா ஒரு வீடு கட்டணும்' என்பதாகத்தான் இருக்கும். இதைத்தான், `எலி வளையானாலும் தனிவளை வேண்டும்' என்பார்கள். மேலும், `வீட்டைக் கட்டிப்பார்; கல்யாணம் பண்ணிப்பார்' என்றும் சொல்வார்கள். என்றாலும், தங்குவதற்கு ஒரு குடிசைகூட இல்லாமல் நகரங்களிலும், மாநகரங்களிலும் பிளாட்பார்ம்களில் தூங்கிக் கொண்டிருக்கும் ஒருத்தரையேனும் நாம் பார்க்காமல் இருந்ததில்லை. அதுபோன்று, `நம் வாழ்நாளில் சொந்தமா ஒரு வீடு என்பதே லட்சியம்' என்று கனவு கண்ட கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த துப்புரவுப் பணியாளர்கள் 640 பேரின் கனவு பலிக்கப் போகிறது.

ஆம்... அவர்களுக்கு கான்கிரீட் வீடு கிடைக்கப் போகிறது. கரூர் நகராட்சிக்குட்பட்ட தோரணகல்பட்டியில் அவர்களுக்காக அடுக்குமாடி குடியிருப்புகள், பிரமாண்டமாக எழும்பிக் கொண்டிருக்கிறது. ``இவ்வளவு பேருக்கும் ஒரே இடத்தில் வீடுகள் கிடைக்க இருப்பது தமிழகத்தில் இதுவே முதல்முறை" என்று சிலாகிக்கிறார்கள் அவர்கள். கரூரில் தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தால் கட்டப்பட்டுவரும் வீடுகளின் கட்டுமானப் பணிகளை, தேசியத் துப்புரவுப் பணியாளர்கள் மறுவாழ்வு ஆணையத்தின் உறுப்பினர் ஜெகதீஷ் கிர்மானி ஆய்வு மேற்கொண்டார். பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் அன்பழகன் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் துப்புரவுப் பணியாளர்களுக்காகச் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து அவர் கேட்டறிந்தார்.

துப்புரவுப் பணியாளர்களின் குழந்தைகளுக்குக் கல்வி உதவித்தொகை முறையாக வழங்கப்படுகிறதா, துப்புரவுத் தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு தாட்கோ மூலமும், வங்கிகள் மூலமும் கடனுதவி வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் அப்போது அவர் விரிவாகக் கேட்டறிந்தார். தவிர, கரூர், குளித்தலை நகராட்சிகள் மற்றும் அனைத்துப் பேரூராட்சிகளிலும் இருந்து வந்திருந்த துப்புரவுப் பணியாளர்களுடன் கலந்துரையாடி, திட்டங்களின் பயன்கள் முறையாகக் கிடைக்கிறதா என்று கேட்டறிந்தார். 

இந்தச் சூழலில் துப்புரவுப் பணியாளர்கள் சிலரிடம் பேசினோம். ``ஊரை எல்லாம் சுத்தப்படுத்துற மகத்தான வேலையைச் செய்றோம். ஆனா, யாரிடமும் எங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைச்சதில்லை. எங்களை ஒரு மனிதராகவே யாரும் பார்ப்பதில்லை. எங்களைக் கண்டால் மூக்கைப் பொத்தியபடி ஒதுங்கிப் போவோரே அதிகம். ஆனா, நாங்க சுத்தப்படுத்தலேன்னா, அவங்க வசிப்பிடம் குப்பையும், கூளமும் நிறைந்து துர்நாற்றமாகிடும் என்பதை அவர்கள் உணர்வதில்லை. சம்பளமும் எங்களுக்கு அதிகம் கிடையாது. எங்களில் அநேகம் பேருக்குச் சொந்தமா வீடுகூட இல்லை. இந்நிலையில்தான், கரூரில் ஏற்கெனவே கலெக்டரா இருந்த கோவிந்தராஜ், எங்களைத் தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்தினார்.

கரூர் மாவட்டம் முழுக்க டெங்கு கொசு ஒழிப்பைச் சிறப்பாகச் செய்வதற்கு வழிவகுத்தார். சாக்கடைகளைச் சரிசெய்ய வைத்தார். அந்தப் பணிகள் முடிந்ததும், கரூர் மாவட்டம் முழுவதும் உள்ள துப்புரவுப் பணியாளர்களை அழைத்து எங்களுக்கு விருந்து கொடுத்து உபசரித்தார். வேறெந்த கலெக்டரும் எங்களுக்கு இப்படிச் செஞ்சதில்லை. மதிச்சதும் இல்லை. அதேபோல், எங்களுக்குச் சொந்தமா வீடு கட்டிக் கொடுப்பதற்காக, இந்தத் திட்டத்தைக் கடுமையாகப் போராடி, கரூருக்குப் பெற்றுத் தந்தார். அவரைத் தொடர்ந்து இப்போதுள்ள கலெக்டரும் எங்களுக்குப் பல உதவிகளைச் செய்றார். வீடு இல்லாமல் பல ஆண்டுகளாகத் தவித்த நாங்க, இப்போ சொந்த வீடு கிடைச்சு குடியேறப் போறோம்னு, நினைச்சா, எங்க  நெஞ்சம் நிறையுது. மழை, வெயில், புயல்னு நாங்க வீடு இல்லாமல் தத்தளித்த காலங்கள் போய், எங்களுக்கும் குடியிருக்க சொந்த வீடு கிடைக்கப்போகுது. இதனால, நாங்க மனசு முழுக்க சந்தோஷத்தோட இருக்கோம் சார்" என்று மகிழ்ச்சிப் பெருக்குடன் தெரிவித்தனர். 

துப்புரவுப் பணியாளர்களுக்கு வீடு கட்டும் திட்டத்தைச் சிறப்பாக நிறைவேற்றி வருவதற்காக மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுக்குத் தேசியத் துப்புரவுப் பணியாளர் மறுவாழ்வு ஆணையத்தின் உறுப்பினர் ஜெகதீஷ் கிர்மானி நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டினார். 

பின்னர் பேசிய ஜெகதீஷ் கிர்மானி, ``தமிழ்நாட்டில் குறிப்பாக கரூர் மாவட்டத்தில் துப்புரவுப் பணியாளர்களுக்கான திட்டங்கள், சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. துப்புரவுத் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து தருவது ஒவ்வோர் அரசு அலுவலரின் கடமையாகும். அரசின் திட்டங்கள், தொழிலாளர்களைச் சென்று சேர்வதற்கு உரிய அனைத்து உதவிகளையும் மேற்கொள்ள வேண்டும். அதேபோல், பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, பாதுகாப்பு உபகரணங்களைக் கட்டாயம் பயன்படுத்தவேண்டும். அதுபோன்று பயன்படுத்தாத தொழிலாளர்கள், இந்திய அளவில் பணி ஓய்வு பெறும் முன்பே உடல்நலக்குறைவுக்கு ஆளாகிறார்கள். அந்த நிலையைத் தவிர்க்க வேண்டும். துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகள், நல்ல முறையில் படித்து அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டும்.  நகராட்சிகளைப் போன்றே பேரூராட்சிகளிலும் இதுபோன்ற வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என்றார்.

கிராமமாக இருந்தாலும், நகரமாக இருந்தாலும் சுற்றுப்புறம் தூய்மையாக இருந்தால் மட்டுமே அனைவரும் ஆரோக்கியமாக வாழ முடியும். அத்தகைய பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுத்து, அவர்களையும் முன்னேற்றுவோம்.