Published:Updated:

`ஒரு மாதத்தில் 150 பேருக்கு டெங்கு பாதிப்பு'- கடலூர் நகரைக் கலங்கடிக்கும் கொசுத் தொல்லை!

கடலூரில் பருவமழை தொடங்கிய நிலையில், பரவலாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு. நகரில் குவியல் குவியலாகக் குப்பைகள், குளம்போல் தேங்கி நிற்கும் கழிவு நீர், கொசுத் தொல்லை நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனப் பொதுமக்கள் குற்றச்சாட்டு.

கழிவு நீர்
கழிவு நீர் ( எஸ்.தேவராஜன் )

கடலூரில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவுகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்காக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் தனி சிகிச்சை வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

குப்பைகள்
குப்பைகள்
எஸ்.தேவராஜன்
Vikatan

மேலும், ‘ஏடிஎஸ்’ வகை கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சலுக்கு கடலூர் மாவட்டம் முழுவதும் இந்த மாதம் இதுவரை 150-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருப்பதாக அரசுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாவட்டம் முழுவதும் 1 ஆயிரத்து 500 பேர் பல்வேறு காய்ச்சலால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பருவமழை தொடங்குவதற்கு முன்பே, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் டெங்கு அறிகுறிகளுடன் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். பருவமழை தொடங்கிய நிலையில், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடலூர் நகரின் முக்கிய வீதிகளில், அதாவது போஸ்ட் ஆபீஸ் அருகில், அரசு மருத்துவமனை அருகில் உள்ள இடங்களில் குவியல் குவியலாக குப்பைகள் அள்ளப்படாமல் கிடக்கின்றன.

கழிவு நீர்
கழிவு நீர்
எஸ்.தேவராஜன்

மேலும் கஸ்டம்ஸ் சாலை, சாவடி, நத்தப்பட்டு போன்ற இடங்களிலும் கழிவுநீர் குளம் போல தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்திவருகிறது. இதனால் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி காய்ச்சல், மலேரியா, டெங்கு போன்ற நோய்களால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.

இதுதொடர்பாக முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் ராஜேந்திரனிடம் பேசியபோது, "கடலூர்ல டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று விளம்பரப்படுத்துராங்களே தவிர, அதற்கான நடவடிக்கை ஏதும் இல்லை. நகரில் முக்கிய சாலைகளில்கூட அதிக அளவில் மழைத் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதேபோல், கழிவுநீரும் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்திவருகிறது. நகரில் அதிக அளவில் காய்ச்சலால் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு மருத்துவமனையில் இதற்கென தனி வார்டு ஒதுக்கி, அதிக அளவில் மருத்துவர்களை நியமித்து, உரிய சிகிச்சை அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

ராஜேந்திரன்
ராஜேந்திரன்
எஸ்.தேவராஜன்

இதுகுறித்து நத்தப்பட்டு பகுதியைச் சேர்ந்த சுமதி, "நாங்க இந்தப் பகுதியில் 25 வருஷமா வசிக்கிறோம். இங்க தண்ணீர் அதிகமா தேங்கி நிற்கிறது. குப்பை சரியா அல்லப்படாம அங்கங்கே மலைபோல குவிஞ்சுகிடக்கு. இரவு நேரத்துல ஒரே கொசு தொல்லையா இருக்கு. நிறைய பேருக்கு காய்ச்சல் வந்து பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில சிகிச்சை எடுத்துக்கிட்டுவர்றாங்க. யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கல, கொசு மருந்து கூட அடிக்கல" என்றார் வேதனையுடன்.