Published:Updated:

கால்நடை பராமரிப்பு உதவியாளர் நேர்காணல் திடீர் ரத்து!- பங்கேற்க வந்தவர்கள் ஏமாற்றம்

கால்நடை பராமரிப்பு உதவியாளர் நேர்காணல் திடீர் ரத்து!- பங்கேற்க வந்தவர்கள் ஏமாற்றம்
கால்நடை பராமரிப்பு உதவியாளர் நேர்காணல் திடீர் ரத்து!- பங்கேற்க வந்தவர்கள் ஏமாற்றம்

நெல்லை மாவட்டத்தில் உள்ள கால்நடைத்துறையில் பணியாற்றுவதற்குக் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பங்கேற்க வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

கால்நடைத் துறையின் சார்பாக நெல்லை மாவட்டத்தில், கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் இன்று (22-ம் தேதி) முதல் மார்ச் 4-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. சிகிச்சைக்காக விவசாயிகள் மருத்துவமனைக்குக் கொண்டுவரக்கூடிய ஆடு, மாடுகளைப் பிடித்துக் கட்டுதல், கால்நடை மருத்துவர் கால்நடைகளுக்குச் சிகிச்சை அளிக்கும்போது அவருக்குத் தேவைப்படும் கருவிகள், மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொடுத்து உதவி செய்வது, கால்நடைகள் போடும் சாணத்தை அள்ளி அப்புறப்படுத்துவது போன்ற பணிகளைச் செய்வது ஆகியவையே கால்நடை உதவியாளரின் பணிகள்.

இந்தப் பணிக்கு 18 வயது பூர்த்தியடைந்த பத்தாம் வகுப்புத் தேர்வில் தோல்வியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்தப் பணிக்காக முதுகலைப் பட்டப்படிப்புப் படித்தவர்கள், பொறியியல் பட்டதாரிகள் எனப் பலரும் விண்ணப்பித்திருந்தனர். பெண்களும் இந்தப் பணிக்காக ஆர்வத்துடன் விண்ணப்பித்திருந்தனர். அதனால் நேர்காணல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட பள்ளி வளாகத்தில் காலை முதலாகவே ஏராளமானோர் வரத் தொடங்கினர். 

மாவட்டத்தின் கடைக்கோடிப் பகுதிகளில் இருந்தும் கூட ஆண்களும் பெண்களும் வந்திருந்தனர். நேர்காணல் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பள்ளிக்கு வந்த பின்னர், நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்பைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதில், தேர்வுகள் தள்ளி வைக்கப்படுவதாகவும் மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அரசு வேலையில் சேர்ந்து விடலாம் என்கிற நம்பிக்கையுடன் வந்திருந்தவர்கள், அந்த அறிவிப்பைக் கண்டு ஏமாற்றம் அடைந்தனர். 

இது பற்றி நேர்முகத் தேர்வுக்கு வந்தவர்கள் கூறுகையில், ``இந்தப் பணிக்காக ஏற்கெனவே விண்ணப்பம் செய்திருந்தவர்களுக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது. அதனால் இன்று ஆர்வத்தோடு வந்திருந்தோம். ஆனால், இங்கே வந்து பார்த்த பிறகே தேர்வைத் தள்ளி வைத்திருக்கும் விவரம் தெரியவந்தது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வெளியான அறிவிப்பு ஒருநாளுக்கு முன்பாகவே வெளியிடப்பட்டிருந்தால் வெளியூர்களில் இருப்பவர்களுக்குத் தெரியவந்திருக்கும். நீண்ட தூரத்தில் இருந்து நாங்கள் இங்கே வந்து அலைய வேண்டிய அவசியம் இருந்திருக்காது’’ என்று வருத்தப்பட்டனர்.