Published:Updated:

பெங்களூரு விமானக் கண்காட்சி பார்க்கிங்கில் பயங்கர தீ விபத்து! - 300 கார்கள் தீயில் எரிந்து நாசம்

பெங்களூரு விமானக் கண்காட்சி பார்க்கிங்கில் பயங்கர தீ விபத்து! - 300 கார்கள் தீயில் எரிந்து நாசம்
பெங்களூரு விமானக் கண்காட்சி பார்க்கிங்கில் பயங்கர தீ விபத்து! - 300 கார்கள் தீயில் எரிந்து நாசம்

பெங்களூரில் விமான கண்காட்சி நடைபெறும் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 300-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் எரிந்து சாம்பலாகின.

12-வது சர்வதேச விமான கண்காட்சி பெங்களூரின் எலங்கா பகுதியில் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. இதைப் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். இந்தியாவில் பெங்களூரில் மட்டுமே இந்தப் பிரமாண்ட விமான கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் உள்நாட்டுப் போர் விமானங்கள், வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட விமானங்கள் ஆகியவை இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. இதில் முதல் 3 நாள்கள் உள்நாட்டு தொழில் முனைவோர்களுக்காக விமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெறும் எனக் கூறப்பட்டது. பொதுமக்கள் 23, 24-ம் தேதிகளில் கண்காட்சியை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. 

விமானக் கண்காட்சியை காண இன்றைய தினம் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். இந்த நிலையில், வாகன நிறுத்துமிடத்தில் இருந்து புகை கிளம்பியது. எதிர்பாராத இந்தத் தீ விபத்தில் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த 300-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் எரிந்து சாம்பலாகின. உரிமையாளர்களின் கண்முன்னே கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள்  தீக்கிரையாகின. இதையடுத்து தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர். வாகன நிறுத்துமிடத்தில் புற்கள் காய்ந்து இருந்ததால் தீயானது மளமளவென அப்பகுதி முழுவதும் பரவத் தொடங்கியது. வாகனங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் இருந்ததால். தீ கொழுந்துவிட்டு எரிகிறது. இதனால் தீயை அணைக்கும் பணி சவாலானதாக இருக்கிறது. தீ விபத்து காரணமாக கண்காட்சி நடைபெறும் இடம் முழுவதும் புகை மூட்டமாகக் காணப்படுகிறது. தீயணைப்பு வீரர்கள் சேதமடையாத வாகனங்களை அப்புறப்படுத்தினர். இந்த விபத்தில் உயிர்ச்சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை.

இதுகுறித்து பேசியுள்ள அதிகாரிகள், ``வெப்பம் தாங்காமல் புற்களில் தீ பற்றியுள்ளது. நுழைவுவாயில் 5-ல் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்களில் தீ பரவியதால் இது பெரும் விபத்தாக முடிந்துள்ளது. இந்தத் தீ விபத்தில் சுமார் 300 வாகனங்கள் தீயில் எரிந்து சேதமாகியுள்ளன” என்றார்.