Published:Updated:

`மிகுந்த மனஉளைச்சலில் இருக்கிறேன்!'- போராட்டக்காரர்களுக்கு எதிராக பொங்கிய வி.ஏ.ஓ

`மிகுந்த மனஉளைச்சலில் இருக்கிறேன்!'- போராட்டக்காரர்களுக்கு எதிராக பொங்கிய வி.ஏ.ஓ
`மிகுந்த மனஉளைச்சலில் இருக்கிறேன்!'- போராட்டக்காரர்களுக்கு எதிராக பொங்கிய வி.ஏ.ஓ

``லஞ்சம் கேட்கும் வி.ஏ.ஓ மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி பலதடவை உயரதிகாரிகளுக்கு புகார் அளித்தோம். நடவடிக்கை இல்லை. அதனால், எருமையை வி.ஏ.வாக சித்திரித்து, `லஞ்சம் வாங்காமல் சான்றிதழ் வழங்கு'ன்னு போராட்டம் நடத்தினோம்" என்றபடி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் வித்தியாசமாக போராட்டம் நடத்திய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சம்பந்தபட்ட வி.ஏ.ஓ பாஸ்கர் ராஜ், ``கோயில் நிலத்தை தனிநபர் பேரில் பட்டா போடப் பார்த்தார்கள். அதற்கு நான் கையெழுத்துப் போடாததால், 'லஞ்சம் கேட்டார்'னு எனக்கு எதிராக போராட்டம் பண்ணி, என் பெயருக்கு இழுக்கு ஏற்படுத்திவிட்டார்கள்" என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் இருக்கிறது பழைய ஜெயங்கொண்டம். இந்தக் கிராமத்தின் நிர்வாக அலுவலராக பாஸ்கர் ராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர்தான் பொதுமக்களிடம் எல்லா சான்றுகளுக்கும் லஞ்சம் கேட்பதாக குற்றம்சாட்டி, கிராம நிர்வாக அலுவலகத்துக்கு எதிரிலேயே எருமையிடம் மனு கொடுக்கும் போராட்டத்தை நடத்தினர். எருமையை அலங்கரித்து, அதன் உடம்பில் வி.ஏ.ஓ பாஸ்கர் ராஜ் என்று எழுதிய பேப்பரை கட்டிவிட்டிருந்தனர். அதோடு, வி.ஏ.ஓ மீதான புகார் மனுவை அந்த எருமையிடம் நீட்டி, `வி.ஏ.ஓ மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி உயரதிகாரிகளிடம் பலதடவை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கலை. அதனால், எருமை மாட்டை வி.ஏ.ஓவாக சித்திரித்து, `லஞ்சம் வாங்காமல் சான்றிதழ் கொடு' என்றபடி, மனுவை நீட்டினர். இந்தப் போராட்டம் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் முத்துச்செல்வன் தலைமையில் நடைபெற்றது.

கடந்த 22.2.2019 அன்று விகடன் இணையதளத்தில், 'லஞ்சம் வாங்காம சான்றிதழ் கொடுக்கணும்' - கரூரில் வி.ஏ.ஓ-வுக்கு எதிராக எருமையிடம் மனு கொடுத்த விவசாயிகள்!' என்ற தலைப்பில் செய்தி எழுதி இருந்தோம். இந்தச் செய்தி பழைய ஜெயங்கொண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நம்மை தொடர்புகொண்ட வி.ஏ.ஓ பாஸ்கர் ராஜ், ``நான் இந்த வேலையை மக்களுக்கு சேவை செய்யக்கூடிய கிடைச்ச வாய்ப்பா நினைச்சு செய்றேன். ஆனா, என்மீது அபாண்டமான பழியை சுமத்தியுள்ளார்கள். இதனால், நான் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன். நடந்தது என்னன்னா, அந்த ஊர்ல சோழீஸ்வரர், விஸ்வநாதர் திருக்கோயில்கள் இருக்கு. இந்தக் கோயிலுக்குச் சொந்தமான 2.40 ஏக்கர் நிலமிருக்கு. அதுல, ஒரு ஏக்கர் நிலத்தை பழைய ஜெயங்கொண்டத்தைச் ஒருத்தர் பெயரில் பட்டா போட வலியுறுத்தி, என்னிடம் கையெழுத்துக் கேட்டார்கள். நான் முடியாதுன்னு மறுத்ததும், `லஞ்சம் கேட்டார்'ன்னு எதுக்கு கேட்டேன்னு குறிப்பிடாம, மொட்டையா ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து, எனக்கு எதிராக இப்படி ஒரு போராட்டத்தை அந்த நபர்களுக்கு சார்பாக நடத்திவிட்டார்கள். எனக்கு ஏற்பட்டுள்ள மன உளைச்சலுக்கு அவங்க தகுந்த பதிலை சொல்லியே ஆகணும்" என்றார்.