Published:Updated:

``கறவை மாடுகள் வழங்குவதில் ஊழல்” - கொதித்தெழுந்த தேனி மாவட்ட கிராம மக்கள்!

``கறவை மாடுகள் வழங்குவதில் ஊழல்” - கொதித்தெழுந்த தேனி மாவட்ட கிராம மக்கள்!
``கறவை மாடுகள் வழங்குவதில் ஊழல்” - கொதித்தெழுந்த தேனி மாவட்ட கிராம மக்கள்!

கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு தமிழக அரசின் இலவச கறவை மாடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில், இத்திட்டத்தில் ஊழல் நடந்திருப்பதாக நேற்று (25/02/2019) தேனி மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் முறையிட்டனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ளது தெப்பம்பட்டி கிராமம். இங்கே உள்ள ஊராட்சி நிர்வாகிகள் சிலர், அதிகாரிகளை கைக்குள் வைத்துக்கொண்டு இலவச கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தில் ஊழல் செய்துவருவதாக அக்கிராம மக்கள் குற்றம்சாட்டினர். இது தொடர்பாக அவர்கள் தெரிவிக்கும்போது, ``குறிப்பிட்ட சிலரிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு, வசதி படைத்தவர்களுக்கு இலவச கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் மாடுகளை வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். இது தொடர்பாகக் கேட்டபோது, எங்களுக்கு உயர் அதிகாரிகள் எல்லோரும் பழக்கம். அவர்களுக்குத் தெரியாமல் இது நடக்கவில்லை. எங்களை எதுவும் செய்ய முடியாது என்று கூறுகிறார்கள். மேலும், பலருக்கு மாடுகள் வழங்கப்பட்டதாகப் பொய் கணக்கு எழுதி வைத்திருப்பதாகத் தகவல் கிடைக்கிறது. மாவட்ட நிர்வாகம் இதில் உடனடியாகத் தலையிட்டு, ஏழைப் பெண்களுக்கு கறவை மாடுகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்” என்றனர்.

இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சித்தலைவர் உறுதியளித்துள்ளார். இது தொடர்பாக கால்நடைப் பராமரிப்புத் துறையின் மாவட்ட இணை இயக்குநர் ராமரிடம் கேட்டபோது, ``யாருக்கு மாடு வழங்க வேண்டும் என்பதை ஐந்து நபர்கள் கொண்ட குழு முடிவுசெய்யும். அதைத் தொடர்ந்து, மாடுகள் பெற இருக்கும் நபர்கள் பட்டியல் எங்களிடம் வரும். அதன் அடிப்படையில்தான் மாடுகளைக் கொடுப்போம். இதில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்பு இல்லை” என்றார்.