Published:Updated:

`நீண்டகால எதிர்பார்ப்பு’ - திருவாரூரில் நாளை திறக்கப்படுகிறது புதிய பேருந்து நிலையம்

`நீண்டகால எதிர்பார்ப்பு’ - திருவாரூரில் நாளை திறக்கப்படுகிறது புதிய பேருந்து நிலையம்
`நீண்டகால எதிர்பார்ப்பு’ - திருவாரூரில் நாளை திறக்கப்படுகிறது புதிய பேருந்து நிலையம்

திருவாரூர் விலமலில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கானொலி காட்சி மூலம் நாளை திறந்து வைக்கிறார். இந்த அறிவிப்பால் திருவாரூர் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். 
 

திருவாரூர் நகரப் பகுதியில் ஏற்கெனவே செயல்பட்டு வரும் பழைய பேருந்து நிலையம், சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. ஆரம்பகாலங்களில் போக்குவரத்து குறைவாக இருந்ததால், பழைய பேருந்து நிலையத்தில் உள்ள இடம் போதுமானதாக இருந்தது. காலப்போக்கில் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகமானதால் இட நெருக்கடி ஏற்பட்டு போக்குவரத்து நெரிசலால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வந்தார்கள். இங்கு பேருந்துகள் சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டது. திருவாரூர் நகரத்தின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு பேருந்து நிலையம் வழியாக கடந்து செல்லும் மக்களின் பொது போக்குவரத்தும் நாளுக்கு நாள் அதிகமானது.

இதனால் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என இங்குள்ள அனைத்து தரப்பு மக்களும் நீண்டகாலமாக கோரிக்கை வைத்து வந்தார்கள். ஆனால், இது நிறைவேற்றப்படாமலே இருந்தது. இந்நிலையில்தான் 2013-ம் ஆண்டு விலமலில் புதிய நிலையம் அமைப்பதற்கான பணி தொடங்கியது. அடுத்த ஓரிரு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படும் என மக்கள் நம்பிக்கையோடு இருந்தார்கள். ஆமை வேகத்தில் பணிகள் மந்தமாக நடைபெற்றதால் ஆறு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்பதுனாலேயே அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, இதை கிடப்பில் போட்டுள்ளதாக பரவலாக பேசப்பட்டது. இந்த நிலையில்தான் புதிய பேருந்து நிலையம் பிப்ரவரி 27-ம் தேதி திறக்கப்படும் என திடீர்  அறிவிப்பு வெளியானது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை கானொலி காட்சி மூலம் இதைத் திறந்து வைக்கிறார்.