Published:Updated:

கொடநாடு வழக்கு - சயான், வாளையார் மனோஜ் கேரளாவில் கைது!

ரா.சதீஸ்குமார்
கொடநாடு வழக்கு - சயான், வாளையார் மனோஜ் கேரளாவில் கைது!
கொடநாடு வழக்கு - சயான், வாளையார் மனோஜ் கேரளாவில் கைது!

கொடநாடு கொலை வழக்கில் ஜாமீன் ரத்து செய்யப்பட்டு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட சயான், வாளையார் மனோஜ் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ம் தேதி 11 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் நுழைய முயற்சி செய்தபோது, அங்கு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதுர் அவர்களை தடுக்க முயன்றார். அவரை, கொலை செய்த அந்தக் கும்பல் பங்களாவுக்குள் நுழைந்தது. அங்கிருந்து சில ஆவணங்களை எடுத்துச் சென்றதாக கூறப்பட்டது. இந்தக் கொலை கும்பலைச் சேர்ந்த முக்கிய குற்றவாளி கனகராஜ் சாலை விபத்தில் மரணமடைந்தார். சயான், வாளையார் மனோஜ் உட்பட மற்ற 10 பேரை கோத்தகிரி போலீஸார் கைது செய்தனர். இவ்வழக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் தொடர்புடைய 10 பேரும் ஜாமீ்ன் பெற்று மாதம்தோறும் நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தனர். இந்த நிலையில், இவ்வழக்கில் புதிய திருப்பமாக கடந்த ஜனவரி மாதம் சயான் மற்றும் வாளையார் மனோஜ் பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேலுடன் இணைந்து  டெல்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து கொடநாடு விவகாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் தொடர்பு உள்ளது என தெரிவித்தனர். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, இவர்கள் இருவரையும் டெல்லியில் கைது செய்த போலீஸார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஆனால், நீதிமன்றம் சிறையில் அடைக்க மறுத்துவிட்டது. 

இந்த நிலையில், சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோரின் ஜாமீன் மனு ரத்து செய்ய வேண்டும் என ஊட்டியில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்த வந்த நிலையில், கடந்த மாதம் 8-ம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது சயான், வளையார் மனோஜ் ஆகியோர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதைத்தொடர்ந்து சயான், வளையார் மனோஜ் ஆகியோரின் ஜாமீன் ரத்து செய்து நீதிபதி வடமலை உத்தரவிட்டார். மேலும், இருவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்தார். இதைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்த சயான், வாளையார் மனோஜ் ஆகியோரை கைது செய்ய போலீஸார் தீவிரம் காட்டி வந்தனர். இந்த நிலையில், ஜாமீன் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து இவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் பிப்ரவரி 25-ம் தேதி வரை சயான், வாளையார் மனோஜ் ஆகியோரை கைது செய்யத் தடை விதித்தது. 

அதன் பின்னர் எவ்வித உத்தரவும் வழங்கப்படாத நிலையில், தலைமறைவாக உள்ள சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோர் கேரளாவில் பதுங்கியருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து, நீலகிரியில் இருந்து கேரளா விரைந்த மூன்று தனிப்படை போலீஸார், கேரளாவில் பதுங்கியிருந்த சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோரைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் ஊட்டி அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.