Published:Updated:

‘தீவிரவாதிகளுக்காகவா போராடுறோம்; ஏன் அனுமதி மறுக்கிறார்கள்’ - ஈரோடு எஸ்.பியை சுற்றும் சர்ச்சை!

‘தீவிரவாதிகளுக்காகவா போராடுறோம்; ஏன் அனுமதி மறுக்கிறார்கள்’ - ஈரோடு எஸ்.பியை சுற்றும் சர்ச்சை!
‘தீவிரவாதிகளுக்காகவா போராடுறோம்; ஏன் அனுமதி மறுக்கிறார்கள்’ - ஈரோடு எஸ்.பியை சுற்றும் சர்ச்சை!

‘டாஸ்மாக், லாட்டரி சீட்டு விவகாரம் போன்றவற்றை கண்டும் காணாமல் விடுகிறார், அரசியல் பிரமுகர்களின் சொல்லுக்குச் செயலாக இருக்கிறார். சக போலீஸார் அதிகாரிகளையே ஒருமையில் பேசுகிறார்’ என ஈரோடு எஸ்.பி சக்தி கணேஷ் மீது எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் சூழலியல் போராளியான முகிலன் மாயமானதையடுத்து சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் எனக் கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்டோர் இணைந்து ஈரோட்டில் ‘முகிலன் மீட்பு கூட்டியக்கம்’ என்ற அமைப்பு ஒன்றை உருவாக்கினர். இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் ‘முகிலன் எங்கே?’ என்ற கேள்வியோடு ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே மார்ச் 2-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால், கடைசி நேரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது என போலீஸார் அனுமதியை மறுக்க, கொதித்துப் போன கூட்டமைப்பினர் ஈரோடு பெரியார் மன்றத்தில் ஒன்று கூடினர்.

‘தமிழகத்தின் சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்காகப் போராடிய ஒருவர் மாயமாகிக் கிட்டத்தட்ட 15 நாட்களாயிருக்கிறது. இன்னும் அவர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. அப்படியிருக்க அவர் எங்கிருக்கிறார் என்ற கேள்வியைக் கூட எழுப்பக்கூடாது என போலீஸார் செயல்படுவது எந்த வகையில் நியாயம். ஈரோடு எஸ்.பி சக்தி கணேஷ் பொறுப்பேற்றதில் இருந்தே இதுமாதியான பல கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு அனுதியை மறுத்து வருகிறார். அமைதியாக அறவழியில் போராடக் கூட அனுமதி மறுப்பதில் நியாயமில்லை. தமிழகத்திற்கே சுயமரியாதையை கற்றுத்தந்த பெரியார் மண்ணில் நடக்கும் இந்தக் கொடுமையை இனியும் நாம் சும்மாக விட்டுவிடக் கூடாது. நாம் என்ன தீவிரவாதிகளுக்காகவே போராடுகிறோம். முகிலன் என்ன கைகளில் துப்பாக்கிகளை ஏந்தி, வெடிகுண்டுகளை வீசியா போராடினார்’. 

‘சமீபத்தில் ஏழுபேர் விடுதலைக் குறித்து மக்களைச் சந்திக்க வந்த பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் ஈரோடு வந்திருந்தார். அந்த கூட்டத்திற்கும் அனுமதி மறுக்க, கடைசியில் தனியார் ஓட்டலில் அதனை நடத்தினோம். அரசியல் கட்சிகள், அமைப்புகள் என யாருக்கும் போராட அனுமதியை எஸ்.பி வழக்க மறுக்கிறார். ஜனநாயக நாட்டில் மக்கள் அநீதிக்கு எதிராகப் போராடுவதை மறுப்பதா.... அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 19, இந்தியக் குடிமக்களுக்கு வழங்கியுள்ள பேச்சுரிமை, கருத்துரிமை இவற்றைப் பறிப்பது சட்டவிரோதமானது. இனியும் எஸ்.பி சக்தி கணேஷ் இப்படிச் செயல்பட்டால், அவரை நீக்குமாறு போராட்டத்தில் இறங்குவோம்’ எனத் தீர்மானம் ஒன்றை இயற்றினர். 

அதோடு, கூட்டம் நடைபெற்ற பெரியார் மன்றத்தில் இருந்து, ஈரோடு எஸ்.பி அலுவலகம் வரை நடைப்பயணமாக வந்து ஈரோடு எஸ்.பி அலுவலகத்தில் எஸ்.பி மீதே புகார் மனு அளித்தனர். ஆனால் எஸ்.பி சக்தி கணேஷ், அலுவல் பணி காரணமாக முன் கூட்டியே சென்றுவிட்டதாகக் கூறப்பட்டது. ஈரோடு எஸ்.பி அலுவலகத்திலேயே எஸ்.பி மீது புகாஅர் மனு அளிக்க வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து ஈரோடு எஸ்.பி சக்தி கணேஷ் அவர்களிடம் பேசினோம். "ஒரு போராட்டமோ அல்லது கூட்டங்களோ நடத்துவதற்கு, அந்த சூழ்நிலைக்கு ஏற்ப லோக்கல் போலீஸார் முடிவு செய்து அனுமதி கொடுக்கின்றனர். இதில் நான் அனுமதி மறுப்பதற்கு என்ன இருக்கிறது. என் மீது புகார் சொல்வதெல்லாம் உண்மையாகிவிட முடியாது. நாங்கள் போற்றுதலுக்கும் தூற்றுதலுக்கும் ஆளானவர்கள். இதையெல்லாம் நினைத்து நாங்கள் வருத்தப்பட்டுக் கொண்டிருக்க முடியாது" என்றார்.