Published:Updated:

``என்னை தெளிய வைத்து தெளிய வைத்து துவைக்கிறார் செந்தில் பாலாஜி!” -கரூரில் உதயநிதி கலகல

``என்னை தெளிய வைத்து தெளிய வைத்து துவைக்கிறார் செந்தில் பாலாஜி!” -கரூரில் உதயநிதி கலகல
``என்னை தெளிய வைத்து தெளிய வைத்து துவைக்கிறார் செந்தில் பாலாஜி!” -கரூரில் உதயநிதி கலகல

``நாங்க குடும்ப அரசியல் பண்றோம். கலைஞர், அதற்கு பிறகு ஸ்டாலின், அந்த வரிசையில் இப்போது உதயநிதி ஸ்டாலின் என முதல்வர் என்று சொல்லிக்கொள்கிற ஒருவர் சொல்கிறார். ஆமாம், நான் வரிசையில்தான் நிற்கிறேன். கூட்டத்தில் உள்ள உங்கள் பின்னே, ஒரு தொண்டனாக, உங்களில் ஒருவனாகதான் நிற்கிறேன்" என்று கரூரில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.


 

தி.மு.க தலைவர் ஸ்டாலினின் 66-வது பிறந்தநாள் விழாவைக் கொண்டாடும்விதமாக, கரூர் மாவட்ட பொறுப்பாளர் செந்தில்பாலாஜி முரசொலி நிர்வாக மேலாண்மை இயக்குநர் உதயநிதி ஸ்டாலினை கரூருக்கு அழைத்து வந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினார். பிரமாண்ட ரத்ததான முகாம், கிரிக்கெட், மாரத்தான், ரேக்ளா ரேஸ் என்று ஏகப்பட்ட போட்டிகளை நடத்தி, உதயநிதி ஸ்டாலின் கைகளால் பரிசு வழங்க வைத்தார். ரூ.30 லட்ச மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். கூட்டத்துக்கு வந்த இளம்பெண்கள் பலர் அவரோடு செல்ஃபி எடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டினர். அதோடு, மாலை ஒரு பள்ளி மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு 20,000 -க்கும்  மேற்பட்டவர்களை கூட்டி, உதயநிதி ஸ்டாலினை மிரள வைத்தார். 


 

பின்னர் பேசிய உதயநிதி, ``நான் பேசாமல் உங்க முகத்தை கொஞ்ச நேரம் பார்த்துக்கிட்டு இருக்கலாம் போல இருக்கு. செந்தில்பாலாஜி இத்தகைய எழுச்சிமிக்க கூட்டத்தை கூட்டி இருக்கிறார். அவர் பேசும்போது சொன்னார், 'அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் தலைமை எந்த வெற்றி வேட்பாளரை நிறுத்தினாலும், அவரை அமோகமாக ஜெயிக்க வைப்பேன்'னு சொல்லிக்கிறார். ஆனா, இங்கே கூடிய கூட்டமே அரவக்குறிச்சி தொகுதியில் அவரது வெற்றியை உறுதி செய்திருக்கிறது. அவரது வெற்றி விழாவுக்கும் என்னை அழைக்க வேண்டும். ஆனால், அப்போதாவது கொஞ்சம் ஃப்ரீயா விடனும். இன்னைக்கு காலையில் இருந்து என்னை தெளிய வைத்து தெளிய வைத்து துவைக்கிறார். காலையில் இருந்து ரேக்ளா ரேஸ், கிரிக்கெட் போட்டி, ரத்ததான முகாம் என்று என்னை விடாமல் அழைத்துப் போனவர், ஹோட்டலில் ஓய்வு எடுக்கப் போன என்னை ஒரு மணி நேரத்திலேயே, 'ஒரு மீட்டிங் இருக்கு'னு அழைத்து வந்துவிட்டார். அவரது அந்த அபார உழைப்பு ஆச்சர்யம் தருது. 


 

இதுபோல், ஒவ்வொரு மாவட்டப் பொறுப்பாளர்களும் செயல்பட்டால், 40 தொகுதிகளிலும் தி.மு.க வெல்லும். அப்புறம், முதல்வர் என்று தன்னைத்தானே சொல்லிகொள்கிற எடப்பாடி, எங்க போனாலும் எனக்கு கூடுற கூட்டத்தைப் பார்த்து வயிறு எரிந்து, என்னைப் பற்றியே பேசுகிறார். முந்தாநாள் நடந்த ஒரு கூட்டத்தில்கூட, `தி.மு.க குடும்ப கட்சி. கலைஞர் வந்தார், அடுத்து ஸ்டாலின் வந்தார். இப்போ உதயநிதி வந்திருக்கிறார்'னு பேசி இருக்கிறார். என்னைப் பற்றி எது வேண்டுமானாலும் பேசுங்கள் பதில் சொல்கிறேன். ஆனா, கலைஞரைப் பற்றியோ, ஸ்டாலின் பற்றியோ பேச உங்களுக்கு துளியும் தகுதி இல்லை. அவர்கள் தங்களது அபார உழைப்பால்தான் தலைமை பொறுப்புக்கு வந்தார்கள். உங்களைப் போல அந்தம்மா கால்லயே பத்து மாதக் குழந்தைபோல டேபுளுக்கு அடியில் தவழ்ந்தெல்லாம் பதவி வாங்கலை. நானும் வரிசையில் நிக்கிறேன்தான். ஆனால், இந்தக் கூட்டத்தில் கடைசியாக, உங்களில் ஒருவனாக, ஒரு சாதாரண தொண்டனாகதான் நிக்கிறேன். கட்சிக்காக உழைக்கக் காத்திருக்கிறேன். அப்புறம், முன்னாடி அ.தி.மு.க முக்கிய புள்ளிகளை ஒருத்தர் டயர் நக்கின்னு சொன்னார். ஆனா, அவர்கள் இப்போது கூட்டணிக்காக ஒன்றுகூடி இருக்கிறார்கள். அந்த டயர் நக்கி யார்ன்னு நான் சொல்லணுமா. அது ஒரு மானங்கெட்ட கூட்டணி" என்று வெளுத்து வாங்கினார்.