Published:Updated:

தொலைந்து போனவர்களை கண்டுபிடிக்க 5 தனிப்படைகள்

தொலைந்து போனவர்களை கண்டுபிடிக்க 5 தனிப்படைகள்
தொலைந்து போனவர்களை கண்டுபிடிக்க 5 தனிப்படைகள்
தொலைந்து போனவர்களை கண்டுபிடிக்க 5 தனிப்படைகள்

கிருஷ்ணகிரி: காணாமல் போய் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கும் 76 நபர்களை கண்டுபிடிக்க கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி 5 தனிப்படைகளை அமைத்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அவ்வப்போது இளம்பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள், குழந்தைகள், சிறுவர், சிறுமியர், முதியவர்கள் என பலரும் அவ்வப்போது காணாமல் போவதுண்டு. அப்படி காணாமல் போனவர்களின் உறவினர்கள் போலீசில் புகார் கொடுத்ததின் பேரில் ஒருசிலர் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் 2004ஆம் ஆண்டிலிருந்து இன்றைய தேதி வரை காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டும் 76 நபர்களைப் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லாததால் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கிறது. இந்த 76 பேரும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரும் கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, பர்கூர், ஊத்தங்கரை ஆகிய ஐந்து காவல் சரக எல்லைகளில் ஏதாவது ஒன்றைச் சார்ந்தவர்கள்.

தொலைந்து போனவர்களை கண்டுபிடிக்க 5 தனிப்படைகள்

இதுதவிர 2004ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குள் 38 அடையாளம் தெரியாத சடலங்கள் போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த சடலங்கள் குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு அடக்கம் செய்யப்பட்டு விட்ட நிலையிலும் இறந்தவர்கள் யார் என்ற விபரமும் இதுவரை கண்டுபிடிக்கப்படாமலே இருக்கிறது.

##~~##
இந்த விவகாரங்கள் தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி.யான செந்தில்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் ஒவ்வொரு சரகத்துக்கும் ஒரு தனிப்படை வீதம் மொத்தம் 5 தனிப்படைகளை எஸ்.பி. ஏற்படுத்தி உள்ளார். இந்த தனிப்படையினர் தீவிரமாக செயல்பட்டு, காணாமல் போய் இதுவரை கிடைக்காதவர்கள் மற்றும் அடையாளம் தெரியாத பிணங்களாக கைப்பற்றப்பட்டவர்கள் ஆகியோர் குறித்த விபரங்களை விரைவாக திரட்டி மாவட்ட காவல்துறைக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று எஸ்.பி உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த தனிப்படையின் செயல்பாடுகளை அந்தந்த சரக டி.எஸ்.பி.க்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
குடும்ப உறுப்பினர்களை தொலைத்துவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு நடையாக நடந்து அலுத்துப் போனவர்கள் மத்தியில் மாவட்ட எஸ்.பி.யின் இந்த புது முயற்சி நம்பிக்கையை உண்டாக்கியுள்ளது.
எஸ்.ராஜாசெல்லம்