Published:Updated:

தலைவர் அறையை சொகுசு படுத்த மூன்று லட்சம்!

தலைவர் அறையை சொகுசு படுத்த மூன்று லட்சம்!
தலைவர் அறையை சொகுசு படுத்த மூன்று லட்சம்!

மதுரை: மதுரை, அரசு போக்குவரத்துக் கழகத்தில் உள்ள தொழிலாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்க தலைவர் அறையை சொகுசு படுத்த மூன்று லட்சத்தை விரையம் செய்திருக்கிறார்கள்.

கூட்டுறவு சங்க பொறுப்புகளில் அள்ளித் தட்டிவிடலாம் என்பதற்காக பல இடங்களில் கட்சி பொறுப்பாளர்களுக்கு லட்சங்களை கப்பம் கட்டி அ.தி.மு.க.வினர் பொறுப்புக்கு வந்திருக்கிறார்கள். வந்ததுமே அவர்களின் டாம்பீக லீலைகள் தொடங்கி விட்டன.

##~~##
உதாரணத்திற்கு ஒன்று. மதுரையில் அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் தலைவராக அடிதடிகளுக்கு மத்தியில் பதவிக்கு வந்தார் அ.தி.மு.க வின் ஜெயக்கொடி. இந்தச் சங்கத்தில் உள்ள தலைவர் அறையை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தான் ஒன்றரை லட்ச ரூபாய் செலவு செய்து மராமத்து செய்தார்கள்.

இந்த நிலையில், ஜெயக்கொடி தலைவராக வந்ததும், 'இதெல்லாம் செல்லாதுப்பா... தலைவர் ரூம் ஹைடெக்கா இருக்கணும்ல" என்று சொல்லி அதற்காக சங்க பணத்திலிருந்து மூன்று லட்சத்தை மொய் எழுதி இருக்கிறார். மதுரை கலெக்டர் அறையில் கூட சாதாராண டேபிள் தான் போட்டிருக்கிறார்கள். அதை எல்லாம் மிஞ்சுகிற வகையில் தனது அறையில், 40 ஆயிரம் ரூபாய்க்கு எக்ஸிக்யூட்டீவ் டேபிள் வாங்கிப் போட்டிருக்கிறாராம் ஜெயக்கொடி. அந்த அறைக்கு ஒரு டன் ஏ.சி.யே போதுமானது என்றாலும், புதிதாக இரண்டு டன் ஏ.சி. வாங்கி பொறுத்தி இருக்கிறார்களாம்.

மறுபடியும் தெரிந்து கொள்ளுங்கள் மக்களே... அண்ணன் தலைவராக வந்திருப்பது சிக்கன நாணய சங்கத்திற்கு!

-ஸ்ரீமதி