Published:Updated:

``சித்திரைத் திருவிழா நாளில் தேர்தலா?” - மதுரை மக்கள் அதிர்ச்சி

``சித்திரைத் திருவிழா நாளில் தேர்தலா?” - மதுரை மக்கள் அதிர்ச்சி
``சித்திரைத் திருவிழா நாளில் தேர்தலா?” - மதுரை மக்கள் அதிர்ச்சி

'தென் மாவட்ட மக்கள் அதிகமாகப் பங்குபெறும் சித்திரைத் திருவிழாவைத் தேர்தல் ஆணையம்  கண்டுகொள்ளவில்லை' என்ற குரல் மதுரை மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மக்களவைத் தேர்தல் நாடுமுழுவதும் வரும் ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி ஏழு கட்டமாக நடக்கிறது. தமிழகத்தில், ஏப்ரல் 18 -ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

வழக்கமாக, தேர்தல் நடத்தும் தொகுதிகளின் முக்கியத் திருவிழா நாள்களைக் கணக்கிட்டுத்தான் தேதிகளை அறிவிக்கும் தேர்தல் ஆணையம்.  அதுதான் ஆணையத்தின் நடைமுறை. ஆனால், இந்த ஆண்டு சித்திரைத் திருவிழாவின் தேரோட்டமும் எதிர்சேவையும் நிகழும் முக்கிய தினத்தன்று தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது, மதுரை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. .

இதுகுறித்து ஆன்மிகச் சொற்பொழிவாளர் சண்முகத் திருக்குமரன் கூறியது, ``உலகப் புகழ் திருவிழா இது. இந்த தினத்தில் தேர்தல் நடத்துவதால், வாக்கு சதவிகிதம் குறைவதற்குப் பெருமளவு வாய்ப்பு உள்ளது. வருகின்ற பக்தர்களும் பொதுமக்களும் தேர்தலைவிட திருவிழாவுக்குத்தான் அதிக முக்கியத்துவம் தருவார்கள். அது மட்டுமல்லாது, திருவிழாவில் அன்னதானம், நீர்மோர் உள்ளிட்டவற்றை வழங்குவதிலும் தேர்தலால் சிக்கல் ஏற்படும். பொதுமக்களின், ஆன்மிக அன்பர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, ஆணையம் தனது தேர்தல் தேதி அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும். வேறு தேதியில்  மாறுதல்செய்ய ஆணையத்துக்குப் பரிந்துரைக்க வேண்டும்" என்றார்.

மேலும், மதுரை மட்டுமின்றி வைகை மாவட்டங்களான பரமக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் திருவிழா நடைபெறும். அந்நாள்களில், தென்மாவட்டம் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் பெருந்திரளாகக் கூடுவர். எனவே, பண்பாடும் பக்தியும் சார்ந்த இந்த மிக முக்கியமான திருவிழா நாளன்று தேர்தலை நடத்துவது எந்த விதத்திலும் பொருத்தமாகாது. 

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிமிடத்தில் இருந்து, 'திருவிழா நேரத்தில் தேர்தலை  வச்சிட்டாங்களே' என்ற பேச்சுதான் மதுரை முழுவதும் உலவுகிறது. தேர்தல் தேதியை பரிசீலிக்க வேண்டுமென்று மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சித் தலைவர் சோலைக்கண்ணனும் கோரிக்கை வைத்திருக்கிறார்.

தேர்தல் வாக்கு சதவிகிதத்தை உயர்த்த நினைக்கும் தமிழகத் தேர்தல் ஆணையமும் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையமும், இதை கவனத்தில் கொண்டு,  மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிவாழ் பக்தர்கள் கோரிக்கை வைத்துவருகின்றனர்.