Published:Updated:

அரியலூரில் பா.ம.க.வினர் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

அரியலூரில் பா.ம.க.வினர் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
அரியலூரில் பா.ம.க.வினர் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
அரியலூரில் பா.ம.க.வினர் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

அரியலூர்: அரியலூர் மாவட்ட பா.ம.க.வினர் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்திருப்பது பா.ம.க.வினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மரக்காணம் கலவரத்திற்கு பிறகு தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய வழக்கில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், பா.ம.க.வின் முன்னணி நிர்வாகிகளான காடுவெட்டி குரு, அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி உள்ளிட்ட கட்சியினர் பலர் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறியது. அரியலூர் மாவட்டத்திலும் பஸ்கள் மற்றும் கடைகள் மீது கல்வீச்சு நடந்ததால் செந்துறை, ஜெயங்கொண்டம் பகுதிகளுக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இதன்பின் தமிழகத்தின் பல பகுதிகளிலும் பா.ம.க.வினர் தேசிய பாதுகாப்பு சட்டம், குண்டர் தடுப்புச்சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஆனால், அரியலூர் மாவட்டத்தில் காடுவெட்டி குருவிற்கு பிறகு யார் மீதும் குண்டர் தடுப்புச் சட்டமோ, தேசிய பாதுகாப்பு சட்டமோ பாயவில்லை. இந்நிலையில் இன்று, பேருந்துகள் மீது கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபட்டதாக அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி ஈரபோகம் கிராமத்தைச் சேர்ந்த பா.ம.க. மாவட்ட துணைத்தலைவரான வேலு என்ற வேலுச்சாமி என்பவரையும், சின்னவளையம் கிராமத்தைச் சேர்ந்த பா.ம.க. பிரமுகர் கமல் என்ற கமலஹாசன் என்பவரையும் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட வேலு மற்றும் கமல் ஆகிய இருவர் மீதும் ஏற்கனவே கொலை முயற்சி வழக்கு, அரசு பேருந்து மீது கல்வீசியது உள்ளிட்ட 9க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட எஸ்.பி. பிரபாகரன் பரிந்துரையின்படி, அரியலூர் கலெக்டர் ரவிக்குமார் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைக்க  உத்தரவிட்டார்.

இன்னும் கைது நடவடிக்கை தொடருமா? என்ற அச்சத்தில் அரியலூர் பா.ம.க.வினர் உறைந்திருக்க, நேற்று இரவு கும்பகோணத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு விரைவு பேருந்து மீது அரியலூர் மாவட்டம் மீன் சுருட்டியை அடுத்த மெய்க்காவல்புத்தூர் என்ற இடத்தில் மர்ம நபர்கள் கல்வீச்சு நடத்தியுள்ளனர். இதில் அந்த பேருந்து கண்ணாடிகள் உடைந்தன.

##~~##
இதை தொடர்ந்து அரசு பேருந்து ஓட்டுனர் கார்த்திகேயன் கொடுத்த புகாரையடுத்து, வளகனேரியைச் சேர்ந்த ராஜ்குமார் மற்றும் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த முகத்திரையான் குப்பத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் ஆகிய 2 பேரையும் கைது செய்துள்ளது மீன்சுருட்டி போலீஸ்.
ஒரு பக்கம் பா.ம.க.வினர் கைது, இன்னொரு பக்கம் பேருந்து கண்ணாடி உடைப்பு என அரியலூர் மாவட்டத்தில் மீண்டும் பதற்றத் தீ பற்றிக் கொள்ள ஆரம்பித்திருப்பது வேதனை அளிக்கிறது. .
சி.ஆனந்தகுமார்