Published:Updated:

தாலுக்கா ஆவணங்களை திருடி போலி பட்டா கொடுத்த முன்னாள் சர்வேயர் - தஞ்சை திடுக்!

தாலுக்கா ஆவணங்களை திருடி போலி பட்டா கொடுத்த முன்னாள் சர்வேயர் - தஞ்சை திடுக்!
தாலுக்கா ஆவணங்களை திருடி போலி பட்டா கொடுத்த முன்னாள் சர்வேயர் - தஞ்சை திடுக்!

தஞ்சாவூர்: தாலுக்கா ஆவணங்களை திருடி பணம் குவித்த குற்றத்திற்காக முன்னாள் சர்வேயர் பக்கிரிசாமி கைதாகி இருப்பது தஞ்சை பகுதியை கிடுகிடுக்க வைத்திருக்கிறது!
 

தாலுக்கா ஆவணங்களை திருடி போலி பட்டா கொடுத்த முன்னாள் சர்வேயர் - தஞ்சை திடுக்!

நிமிஷத்தில் கோடிகளை புரட்டும் ரியல் எஸ்டேட் துறை அண்மைக் காலமாக சமூக விரோதிகளின் புகழிடமாக மாறி வருகிறது. சொத்துக்களை அபகரித்தல், சொத்துக்காக ஆளையே போட்டுத் தள்ளுதல், ஒரே இடத்தை பலபேருக்கு பத்திரம் முடித்தல், சொத்துக்கு சொந்தக்காரருக்கு தெரியாமலேயே போலி பத்திரங்கள் மூலம் சொத்துக்களை விற்றுவிட்டு எஸ்கேப் ஆதல். இவை அனைத்தும் இப்போது ரியல் எஸ்டேட் தொழிலில் சர்வ சாதாரணம். பத்திரங்கள் பத்திரமாய் இல்லாததால், இப்போது யாருமே சொத்து வாங்கப் பயப்படுகிறார்கள். சொத்துக்களை வைத்திருப்பவர்கள் பருவம் வந்த பெண்ணை படிக்க அனுப்பிய படபடப்பிலேயே இருக்கிறார்கள். ரியல் எஸ்டேட் தொழில் இப்படி ட்ரையல் எஸ்டேட் தொழிலாக மாறிப் போனதற்கு மோசடி பேர்வழிகள் மட்டும் காரணமல்ல, அவர்களுக்கு உடந்தையாக உள்ள அரசு அதிகாரிகளும் தான் காரணம். இப்போது சிக்கி இருக்கும் பக்கிரிசாமியும் அந்த ரகம் தான்!

தஞ்சாவூர் தாலுக்கா அலுவலகத்தில் வருவாய் சரக நில அளவராக பணியாற்றியவர் பக்கிரிசாமி. நுணுக்கமாக வேலை பார்ப்பதில் கில்லாடியான இவருக்கு நிலம் சம்பந்தப்பட்ட நம்பர் டூ வேலைகள் அனைத்தும் கைவந்தகலை. நிலம் அளப்பது, கூட்டுப் பட்டாக்களை பிரித்து தனிப்பட்டா வழங்குவது உள்ளிட்ட வேலைகளும் பக்கிரிசாமிக்கு அத்துப்படி. இவருக்கு சீனியர், ஜூனியராக வேலை பார்த்தவர்களெல்லாம் இவரிடம் தான் சந்தேகம் கேட்பார்களாம். கடந்த 2008ல் இவர் ஓய்வு பெற்றிருக்கிறார். அதன் பிறகும் தாலுக்கா அலுவலகத்திற்கு வரும் நிலம் அளப்பது தொடர்பான மனுக்களை பக்கிரிசாமியிடம் கொடுத்து அளக்க சொல்லி, சைடு டிராக்கில் பணம் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள் அங்கு பணியில் இருப்பவர்கள்.
 

தாலுக்கா ஆவணங்களை திருடி போலி பட்டா கொடுத்த முன்னாள் சர்வேயர் - தஞ்சை திடுக்!

இவரின் தகிடுதத்தம் அறிந்த நில புரோக்கர்களும், நில விற்பனையாளர்களும் தாங்கள் விற்கும் வீட்டுமனைகளுக்கு கூட்டுப்பட்டாவிலிருந்து தனிப்பட்டாவாக மாற்ற இவரையே நேரடியாக அணுக தொடங்கி இருக்கிறார்கள். கிரவுடு அதிகமானதும் தனது சர்வீஸுக்கு என தனி அலுவலகம் போடும் அளவிற்கு அசுரவளர்ச்சி அடைந்திருக்கிறார் பக்கிரிசாமி. தனி ஆளாக வேலை செய்ய முடியாத அவர் தாலுக்கா அலுவலகத்தில் பணியாற்றிய சோமசுந்தரம், ஆறுமுகம் ஆகியோரை தனக்கு உதவியாளர்களாக நியமித்திருக்கிறார். ஒரு கட்டத்தில், தனிப்பட்டா வாங்க அரசு அதிகாரிகளை ஏன் சந்திக்க வேண்டும் என நினைத்தாரோ என்னவோ, பட்டா வழங்கும் அதிகாரியின் கையெழுத்தை இவரே போட்டு பட்டாக்களை வாரி வழங்கியிருக்கிறார்.

இது குறித்து நம்மிடம் பேசிய வருவாய் துறை வட்டத்தினர், ''ஒரு கூட்டுப்பட்டாவில் இருக்கும் நிலத்தை தனிப்பட்டாவாக மாற்ற குறைந்தது ஒரு மாதமாவது ஆகும். ஆனால், அந்த வேலையை பக்கிரிசாமியிடம் கொடுத்தால் ஒரு வாரத்தில் முடித்துக் கொடுத்து விடுவார். தன்னிடம் வருபவர்களிடம் அவ்வளவு எளிதில் பிடிகொடுக்க மாட்டார். பணம் அதிகம் வாங்க வேண்டும் என்பதற்காக ரொம்பவே பிகு பண்ணிக் கொள்வார். 'பணத்தை குறைத்துக் கொள்ளுங்கள்" என்று யாராவது சொன்னால், ''எனக்கு நிறைய வேலை இருக்கு ரெண்டு மாசம் கழிச்சு வாங்க" என்று சொல்லி திருப்பி அனுப்பி விடுவார்.

தஞ்சாவூரில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் செங்கிப்பட்டிக்கு அருகில் உள்ள நிலங்களை மனைகளாக மாற்றியிருக்கிறார்கள். 'உங்கள் நிலத்திற்கான தனிப்பட்டாவை நாங்கள் வாங்கி தருகிறோம். அதற்கான பணத்தையும் சேர்த்துத் தாருங்கள் என்று புரமோட்டர்களே கஸ்டமர்களிடம் கேட்டு வாங்கி விடுகிறார்கள். அந்த வேலையை எல்லாம் பக்கிரிசாமி தான் செய்து கொடுத்தார். வருவாய்த்துறை அமைச்சருடைய உதவியாளர் ஒருவரின் நண்பர் தஞ்சாவூரில் இருக்கிறார். டாக்டராக இருக்கும் அவர் சமீபத்தில் தனக்கு ஒரு மனை வாங்கி இருக்கிறார். அந்த மனைக்கான தனிப்பட்டா வாங்க பக்கிரிசாமியை அணுகி இருக்கிறார்கள். அமைச்சர் பி.ஏ.வின் நண்பர் என்பதால் பணம் தரமாட்டார்கள் என நினைத்த பக்கிரிசாமி ஒரு மாதம் இழுத்தடித்திருக்கிறார். இந்த விவரம் அமைச்சரின்  உதவியாளருக்கு தெரிந்து அவரே, பக்கிரிசாமியை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். 'சார் நீங்க மந்திரி பி.ஏ.வாக இருக்கலாம். இங்கு இருக்கிற அதிகாரிகள் பணம் தராமல் வேலை செய்ய மாட்டார்கள். எனவே ஒரு ஐயாயிரம் மட்டும் தந்து விடுங்கள் ஒருவாரத்தில் தனிப்பட்டா மாற்றி தருகிறேன் என்றிருக்கிறார். அமைச்சர் உதவியாளரும் சென்னையில் இருந்து பக்கிரிசாமியின் வங்கிக் கணக்கில் பணத்தை போட்டிருக்கிறார். சொன்ன மாதிரியே வேலையை முடித்துக் கொடுத்திருக்கிறார் பக்கிரி" என்கிறார்கள்.
 

தாலுக்கா ஆவணங்களை திருடி போலி பட்டா கொடுத்த முன்னாள் சர்வேயர் - தஞ்சை திடுக்!

பக்கிரிசாமியின் ஆட்டத்தை தாங்க முடியாத வருவாய்துறை அதிகாரிகள் சிலர், கலெக்டர் காதில் விஷயத்தை போட்டிருக்கிறார்கள். உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதோடு, தானே நேரில் சென்றும் ஆய்வும் செய்திருக்கிறார் கலெக்டர். அப்போது தான் இன்னொரு அதிர்ச்சியான தகவலும் சிக்கி இருக்கிறது.  பக்கிரிசாமி சர்வீஸில் இருந்த போதோ, அல்லது அதற்கு பிறகோ, தாலுக்கா அலுவலகத்தில் இருந்த கிராம புலப்பட சுவடி, கிராம கூட்டு வரைபடங்கள், கிராமக் கணக்குகள் அத்தனையையும் சுருட்டிக்கொண்டு போயிருக்கிறார். கலெக்டரின் புகாரை அடுத்து பக்கிரிசாமியும் அவரது கூட்டாளிகள் மூன்று பேரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். பக்கிரிசாமியிடம் இருந்து தாலுக்கா ஆபீஸ் நில ஆவணங்களையும் கைப்பற்றி இருக்கிறார்கள். இந்த ஒரிஜினல் ஆவணங்களை வைத்துக் கொண்டு அதில் உள்ள பெயர்களை மாற்றி போலியான பெயர்களுக்கு பட்டா கொடுத்திருக்கிறது இந்தக் கும்பல். தஞ்சை கலெக்டர் பாஸ்கரனிடம் பக்கிரிசாமி விவகாரம் குறித்துப் பேசினோம். ''முழுமையான விசாரணை நடந்து வருகிறது. விசாரணை முடிந்தால் தான் இதில் நடந்திருக்கும் முறைகேடுகள் முழுமையாக தெரியவரும். இதில் இன்னும் யார் யார் சம்பந்தப்பட்டிருந்தாலும் அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை இருக்கும்" என்றார்.

##~~##
கைதாகி இருக்கும் பக்கிரிசாமியின் கூட்டாளிகளில் ஒருவர். 'நான் அமைச்சர் வைத்திலிங்கத்துக்கு சொந்தக்காரன் என அடிக்கடி உதார் விட்டிருக்கிறார். இதை உண்மை என்று நம்பி அதிகாரிகளும் இவர்களது தில்லு முல்லு விவகாரங்களை கண்டும் காணாமல் இருந்திருக்கிறார்கள். இந்தக் கும்பல் தஞ்சை மாவட்டத்தில் மட்டுமில்லாமல் பக்கத்து மாவட்டங்களிலும் தங்களது கைவரிசையை காட்டி இருப்பதாக சொல்கிறார்கள். பக்கிரிசாமி கொடுத்திருக்கும் தனிப்பட்டாக்களில் எது ஒரிஜினல், எது போலி என தற்போது தான் ஆய்வுகள் தொடங்கி இருக்கிறது. இரண்டுக்கும் துளி கூட வித்தியாசம் இல்லாத அளவிற்கு அவ்வளவு நேர்த்தியாக இருக்கிறதாம் பக்கிரியின் பலே கை வண்ணம். அமைச்சரின் உதவியாளருக்கு போனது அசலா நகலா என தெரியவில்லை என கமென் ட் அடிக்கும் வருவாய்துறை அலுவலர்கள், ''இங்கு மட்டுமல்ல, தமிழகம் முழுக்கவே முன்னாள் வருவாய் துறை ஊழியர்கள் பலர் இதுபோன்ற நம்பர் டூ வேலைகளைச் செய்து ரியல் எஸ்டேட் புள்ளிகளிடம் வகையாய் பணம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதுகுறித்து தமிழக அரசு முழுமையாக ஒரு விசாரணை நடத்தினால் பல அதிர்ச்சிகரமான உண்மைகள் அம்பலத்திற்கு வரும்" என்று திகில் கிளப்புகிறார்கள்.
வீ.மாணிக்கவாசகம்

படங்கள்:
கே.குணசீலன்