Published:Updated:

`தாத்தா இறந்து 50 வருடம் கழித்தும் இவ்ளோ செல்வாக்கு' - காருக்குறிச்சி அருணாசலம் மனைவி மறைவு!

`தாத்தா இறந்து 50 வருடம் கழித்தும் இவ்ளோ செல்வாக்கு' - காருக்குறிச்சி அருணாசலம் மனைவி மறைவு!
`தாத்தா இறந்து 50 வருடம் கழித்தும் இவ்ளோ செல்வாக்கு' - காருக்குறிச்சி அருணாசலம் மனைவி மறைவு!

தமிழ் இசை மரபில் தவிர்க்கவியலாத ஒரு பெரும் ஆளுமையாகத் திகழ்ந்தவர் நாகஸ்வர வித்வான் காருக்குறிச்சி அருணாசலம்  (1907-1964). தமிழகம் முழுவதும் பல்வேறு இசைக் கச்சேரிகளின் வழியாகப் பெரும் புகழை அடைந்தவர் அவர். திரைத்துறையிலும் அவரது இசை ஒலித்தது. `கொஞ்சம் சலங்கை' திரைப்படத்தில் வெளிவந்த `சிங்கார வேலனே' பாடலில் இவர் வாசித்த நாகஸ்வர இசை இன்றும் பிரபலமாக உள்ளது. அத்தனை சிறப்புகளைக் கொண்ட காருக்குறிச்சி அருணாசலத்தின் மனைவி ராமலட்சுமி தன் 96-வது வயதில் நேற்றுமுன்தினம் இயற்கை எய்தினார். காருக்குறிச்சி அருணாசலத்தைப் பற்றியும் அவரின் மனைவியைப் பற்றியும் அவர்களின் குடும்பத்தாரிடம் பேசினோம்.

காருக்குறிச்சி அருணாசலத்தின் மருமகன் பிச்சையன் நம்மிடம் தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். அதில், `காருக்குறிச்சியாருக்கு மொத்தம் மூணு மனைவிங்க. அதுல மூத்த மனைவி ராமலட்சுமி அம்மையார்தான் இப்போ நம்மள விட்டுப் பிரிஞ்சிருக்காங்க. மத்த இரண்டு மனைவிகளும் முன்னாடியே தவறிட்டாங்க. ராமலட்சுமி அம்மாவுக்குக் குழந்தைங்க இல்ல. அதனால அவங்களே காருக்குறிச்சியாருக்கு வேற பொண்ணைப் பார்த்துக் கல்யாணம் பண்ணி வெச்சாங்க. இரண்டாவது மனைவிக்கு ஐந்து பொண்ணுங்களும் ஒரு பையனும் பொறந்தாங்க.

மூணாவது மனைவிக்கு மூணு பசங்க, ரெண்டு பொண்ணுங்க. காருக்குறிச்சியார் 1964களிலேயே தவறிட்டாரு. அதுக்கப்புறம் இத்தன பேரையும் பார்த்துக்கிட்டு ஆளாக்கினது ராமலட்சுமி அம்மாதான். மூணு மனைவிகளும் ஒண்ணா ஒரே வீட்ல கூட்டுக் குடும்பமாதான் வாழ்ந்தாங்க. எல்லாரையும் ஒட்டுமொத்தமா அரவணைச்சுப் போனது இந்த அம்மாதான்" என்றார். காருக்குறிச்சி அருணாசலத்தின் கொள்ளுப் பேரன் தீபக் நம்மிடம் கூறியது, ``பாட்டி ரொம்ப வருஷமா இங்க சென்னைல மைலாப்பூர் வீட்ல எங்க எல்லார் கூடவும்தான் இருந்தாங்க. ஒரு வருசத்துக்கு முன்னாடி அவங்க பிறந்து வளர்ந்த திருநெல்வேலி மண்ணுல இருக்கணும்னு ஆசப்பட்டு அங்க கொஞ்ச நாள் இருந்தாங்க. சின்ன வயசுல அவங்களும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் ஒரே ஊர்லதான் இருந்திருக்காங்க. எங்க தாத்தா மேல இருந்த மரியாதை காரணமா தமிழ்நாட்டுல நிறைய முக்கியமான படைப்பாளிங்க எல்லாரும் எங்க பாட்டியை அடிக்கடி சந்திச்சாங்க.

எங்க தாத்தா இறந்து ஐம்பது வருஷம் கழிச்சும் கூட பாட்டிக்கு இவ்ளோ செல்வாக்கு இருக்குறது எங்களுக்கெல்லாம் வியப்பா இருக்கும். எங்க தாத்தாவோட இசைக்கு அவ்வளவு மதிப்பு இருக்கு. சினிமா எடிட்டர் லெனின் சார் அடிக்கடி பாட்டியை நேர்ல வந்து பார்த்துட்டுப் போவாங்க. அவர் எங்க பாட்டியை அம்மா ஸ்தானத்துல வெச்சிப் பார்த்தாரு. பாட்டிக்கு அந்தக் காலத்துலயே நிறைய சொத்து பத்தெல்லாம் இருந்துச்சு. அவங்களுக்குக் குழந்தைங்க இல்லாததாலவோ என்னவோ, தன்னோட சொத்து, நகையெல்லாம் வெச்சி மத்தவங்களுக்கு நிறைய உதவிகள் பண்ணிருக்காங்க" என்றார். மாபெரும் இசையாளுமையின் மனைவியின் மறைவுக்காக நம் இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்வோம்.