Published:Updated:

`என்.சி.சி-யில் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்' - தலைமை இயக்குநர் உறுதி!

`என்.சி.சி-யில் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்' - தலைமை இயக்குநர் உறுதி!
`என்.சி.சி-யில் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்' - தலைமை இயக்குநர் உறுதி!

``நாடு முழுவதும் என்.சி.சி-யில் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்'' என என்.சி.சி. தலைமை இயக்குநர் உறுதி அளித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 35-ம் ஆண்டு மாணவிகளுக்கான அகில இந்திய என்.சி.சி. மலையேற்றப் பயிற்சி தொடங்கியது. மலை மாவட்டமான நீலகிரியில் ஆண்டுதோறும் பள்ளி கல்லூரி மாணவிகளுக்கான அகில இந்திய என்.சி.சி., மலையேற்ற பயிற்சி நடைபெறுகிறது. கடந்த 34 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் , கடந்த ஆண்டு மார்ச் மாதம்  தேனி மாவட்டம் குரங்கணி வனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மலையேற்றப் பயிற்சிக்காகச் சென்றிருந்த 36 பேர் தீயில் சிக்கி அதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர், தீ விபத்தில் சிக்கி காயமடைந்த 27 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அதில் சிகிச்சைப் பலனின்றி 22 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மலையேற்றப் பயிற்சிக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

தற்போது இந்த ஆண்டு அனுமதி வழங்கப்பட்டு மாணவியர்களின் 35-ம் ஆண்டு மலையேற்ற பயிற்சி முகாமின் முதல் குழுவின் மலையேற்ற முகாம் இன்று ஊட்டியில் தொடங்கியது. தமிழ்நாடு, கேரளா, கோவா, கர்நாடகா, ஆந்திரா, அந்தமான் நிகோபர், ஒடிசா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலத்தைச் சேர்ந்த 500 பள்ளி, கல்லூரி என்.சி.சி. மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.

இவர்கள் ஊட்டி அருகேயுள்ள நஞ்சநாடு அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் இருந்து காலை 8 மணியளவில்  வானியல் ஆய்வு மையத்துக்கு நடைப்பயணம் மேற்கொண்டனர். இதை நீலகிரி என்.சி.சி. கமாண்டர் லெப்டினென்ட் கர்னல் தேப் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். வானிலை மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் அகில இந்திய என்.சி.சி., தலைமை இயக்குநர் லெப்டினென்ட் ஜெனரல் ராஜீவ் சோப்ரா பங்கேற்று மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

பின்னர் மாணவிகள் மத்தியில் பேசுகையில், ``என்.சி.சி., மாணவ, மாணவியர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் சார்பிலும் ராணுவம் சார்பிலும் எல்லா விதமான சலுகைகளும் தந்து பயிற்சி அளிக்கப்படுகிறது. அதோடு உங்களுடைய உடற்பயிற்சியை ஊக்கப்படுத்துதல், தலைமைப் பண்பை மேம்படுத்துதல், தன்னார்வத்தைத் தூண்டுதல் போன்றவற்றைச் செய்வதுடன் வாழ்வில் உயர் பதவிகளை அடைய வழிவகை செய்கிறது. வரும் ஆண்டு முதல் நாடு முழுவதும் என்.சி.சி-யில் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். என்.சி.சி-யில் உள்ளவர்கள் ராணுவத்தில் சேரவும் முன்னுரிமை அளிக்கப்படும்” என்றார். முதல் குழுவின் முகாம் வரும் 4-ம் தேதியுடன் நிறைவடைகிறது. 2வது குழுவின் முகாம் வரும் மே 6-ம் தேதி தொடங்கி 13-ம் தேதி நிறைவடைகிறது.

அடுத்த கட்டுரைக்கு