Published:Updated:

`ஐந்து நிமிடத்துக்கு ஒரு லாரி வருது, கழிவுநீரைக் கொட்டுது!'- திருவேற்காட்டில் நடக்கும் அதிர்ச்சி

`ஐந்து நிமிடத்துக்கு ஒரு லாரி வருது, கழிவுநீரைக் கொட்டுது!'- திருவேற்காட்டில் நடக்கும் அதிர்ச்சி
`ஐந்து நிமிடத்துக்கு ஒரு லாரி வருது, கழிவுநீரைக் கொட்டுது!'- திருவேற்காட்டில் நடக்கும் அதிர்ச்சி

திருவேற்காடு பஸ் டிப்போவுக்கு எதிரே உள்ள நகராட்சிக்கு உட்பட்ட கூவம் ஆற்றில், சட்டவிரோதமாகக் கழிவுநீர் கொட்டப்படுகின்றன என வீடியோக்களை விகடன் வாசகர் ஒருவர் நமக்கு அனுப்பியிருந்தார். அந்த வீடியோவில், ஐந்து நிமிடத்துக்கு ஒரு லாரி குடியிருப்புகளுக்கு அருகே உள்ள ஓடையில் கழிவுகளைக் கொட்டிச்செல்கிறது. வீடியோ எடுப்பது தெரிந்ததும், கழிவு நீர் கொட்டுவதை நிறுத்துகின்றனர். பின்னர், வீடியோ எடுப்பவரிடம் விவாதம் செய்கின்றனர். இதுதொடர்பாக அங்கு என்ன நடந்தது என அந்த வாசகரைத் தொடர்புகொண்டு விசாரித்தோம். ``திருவேற்காடு பஸ் டிப்போவுக்கு எதிரே உள்ள நகராட்சிக்கு உட்பட்ட கூவம் ஆறு இருக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இருந்தே புழங்கப்பட்ட ஆறுதான் இது. கர்நாடகாவில் இருந்து மரங்களைக் கொண்டுவருவதற்காக இந்த ஆறு அப்போதே பயன்பட்டது. ஆனால், நிலைமை அப்படியல்ல. திருவேற்காடு நகராட்சியைச் சுற்றி இருக்கும் தொழிற்சாலைகள், கல்லூரிகள், நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து  வெளியேற்றப்படும் மனிதக் கழிவுகளைத் தினமும் லாரிகளில் எடுத்துவந்து இந்தக் கூவம் ஆற்றில் கொட்டிவிடுகின்றனர். 

`ஐந்து நிமிடத்துக்கு ஒரு லாரி வருது, கழிவுநீரைக் கொட்டுது!'- திருவேற்காட்டில் நடக்கும் அதிர்ச்சி

5 நிமிடத்துக்கு ஒரு வண்டி எனத் தினமும் நூற்றுக்கணக்கான லாரிகள் இந்த ஆற்றில் கழிவு நீரைக் கொட்டுகின்றன. ஒருகாலத்தில் இந்தப் பகுதியின் குடிநீர் ஆதாரமாக இந்த ஆறு இருந்தது. இப்போது, இது வெறும் கழிவு கொட்டும் குப்பைத்தொட்டியாக மாறிப் போனது. இதைச் செய்பவர்கள் யார் எனக் கேட்டால்... எல்லாம் அரசியல்வாதிகள்தான். ஆளுங்கட்சிப் பிரமுகர்கள், அவர்களது உறவினர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் என எந்தவித பாகுபாடும் இல்லாமல் இந்த விவகாரத்தில் கூட்டாகச் செயல்படுகிறார்கள்.  ஆவடியில் இருந்து மதுரவாயல் வரை இருக்கும் கிராமங்கள்தான் இவர்களுக்கு குறி. இந்த ஏரியாக்களில் இருக்கும் கூவம் ஆற்றின் கரையோரத்தில் கழிவுகளைக் கொட்டிவிடுகின்றனர். 

இந்தக் கழிவுகளை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கொண்டுபோய் கொட்டலாம். ஆனால், அங்கு கொண்டு செல்வதற்கு முறையான அனுமதி வாங்க வேண்டும். மேலும், ஒவ்வொரு லாரிக்கும் கட்டணம் விதிக்கப்படும். இப்படிச் செய்யாமல் முறைகேடாக இங்குக் கொட்டிவருகிறார்கள். ஏன் இங்கு கழிவுகளைக் கொட்டுகிறீர்கள் எனக் கேட்டால் ``நீதான் நல்லா படிச்சிருக்க. உனக்கு ஏன் இந்த வேலை. போய் படிப்புக்கு தகுந்த வேலையைப் பாரு. தேவை இல்லாத விஷயத்துல தலையிடாத" என மிரட்டுகிறார்கள். இது தொடர்பாகப் பல முறை போலீஸில் புகார் தெரிவித்துவிட்டேன். ஆனால், ``எங்களால் எதுவும் பண்ண முடியவில்லை. நீங்கள் வேறு வழியைப் பார்த்துக்கொள்ளுங்கள்" என அரசியல்வாதிகளுக்குப் பயந்துகொண்டு போலீஸும் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார்கள். 

`ஐந்து நிமிடத்துக்கு ஒரு லாரி வருது, கழிவுநீரைக் கொட்டுது!'- திருவேற்காட்டில் நடக்கும் அதிர்ச்சி

சரி என இந்த ஏரியாவின் சுகாதாரத்துறை அதிகாரியைத் தொடர்புகொண்டு விவரத்தைச் சொன்னால், அவர் சம்பவ இடத்துக்கு வந்து `இங்கே கழிவுகளைக் கொட்ட வேண்டாம்' எனச் சொல்லுவார்கள். அவர்கள் சென்றபிறகு, வழக்கம் போல மீண்டும் செய்யத் தொடங்கிவிடுவார்கள். இதில் கொடுமை என்னவென்றால், கடந்த மாதம் இந்திய அளவில் திருவேற்காடு நகராட்சியை சிறந்த நகராட்சியாகத் தேர்வுசெய்து விருது அளித்தார்கள். இப்படி ஒரு சிறந்த நகராட்சியில், திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது. கழிவு மேலாண்மைக்கு என நிதி, திட்டங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால், இங்கு முழுமையாகச் சென்று சேரவில்லை. 

`ஐந்து நிமிடத்துக்கு ஒரு லாரி வருது, கழிவுநீரைக் கொட்டுது!'- திருவேற்காட்டில் நடக்கும் அதிர்ச்சி

எனக்கு பூர்விகமே இந்த ஊர்தான். நான் குழந்தையாக இருக்கும்போது இந்த ஆற்றில் இருந்துதான் குளிப்பதற்கு, வீட்டு புழக்கத்திற்கு தண்ணீர் எடுத்துச்செல்வார்கள். ஆனால், இப்போது எங்கு பார்த்தாலும் குப்பை, கழிவு எனத் தங்கள் சுயநலன்களுக்காக ஆற்றை அப்படியே குப்பைக்கிடங்காக மாற்றிவிட்டார்கள்" என்று வேதனை தெரிவித்தார். இந்தப் புகார் தொடர்பாக திருவேற்காடு நகராட்சியின் துப்புரவு ஆய்வாளர் சாமுவேலைத் தொடர்புகொண்டு பேசினோம். ``கழிவு நீர் கொட்டப்படுவது உண்மைதான். நான் இங்கு பணிக்குச் சேர்ந்து 6 மாதம் ஆகிறது. இந்த ஆறு மாதத்தில் இந்த விவகாரத்தில் இதுவரைக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக அபராதம் விதித்த நகராட்சி திருவேற்காடுதான். இதுவரைக்கும் ரூ.3,65,000 வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

`ஐந்து நிமிடத்துக்கு ஒரு லாரி வருது, கழிவுநீரைக் கொட்டுது!'- திருவேற்காட்டில் நடக்கும் அதிர்ச்சி

இந்த விவகாரத்தில், தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. இதனால், போன வாரம் கலெக்டர் தலைமையில் மீட்டிங் நடந்தது. அதில் கமிட்டி ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஆர்.டி.ஓ, காவல் துறை, வருவாய்த் துறை, நகராட்சி ஆகிய துறை அதிகாரிகளில் யார் முறைகேடாக இப்படிக் கழிவுகளைக் கொட்டுவதைப் பார்த்தாலும் அவர்களை உடனடியாகக் கைதுசெய்யவும், அபராதம் விதிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் இந்த நடவடிக்கை தீவிரமாகும். அதனால், இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறுவது தவறு" என விளக்கம் அளித்துள்ளார்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு