Published:Updated:

இந்திய கம்யூ. மூத்த தலைவர் பார்வதி கிருஷ்ணன் மறைவு!

இந்திய கம்யூ. மூத்த தலைவர் பார்வதி கிருஷ்ணன் மறைவு!
இந்திய கம்யூ. மூத்த தலைவர் பார்வதி கிருஷ்ணன் மறைவு!
இந்திய கம்யூ. மூத்த தலைவர் பார்வதி கிருஷ்ணன் மறைவு!

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் கோவை நாடாளுமன்ற உறுப்பினராக 4 முறை பணியாற்றியவருமான 95 வயது பார்வதி கிருஷ்ணன் இன்று காலமானார்.

கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை அவர் இயற்கை எய்தினார். இதனையடுத்து அவரது உடல் தனியார் மருத்துவமனையில் குளிர்பதன கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.

இவரது மகள் மருத்துவர் இந்திரா பிரியதர்சினி, அமெரிக்காவில் மருத்துவ தொழில் புரிந்துவருகிறார். தாயார் இறந்த தகவல் அவருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் இந்தியா வந்தபின் இறுதி சடங்குகள் செய்யப்படுகிறது.

இந்நிலையில் பார்வதி கிருஷ்ணன் மறைவை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிகள் அரைகம்பத்தில் மாநிலம் முழுவதும் பறக்கவிடப்பட்டுள்ளது. வரும் ஞாயிற்று கிழமை காலை 8 மணி முதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பாக அவரது உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் எனவும், அதன்பின் பாப்பநாயக்கன் பாளையம் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படும் எனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 1919 ஆம் ஆண்டு சுப்பராயன், ராதாபாய் தம்பதியினருக்கு இவர் மகளாக பிறந்தார். இவரது தந்தை சுப்பராயன் சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்தவர். இவரது தாயார் ராதாபாய் இந்தியாவின் முதல் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். 1936 ஆம் ஆண்டு இங்கிலாந்து ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, மேற்கு வங்க முன்னாள் முதல்வர்  ஜோதிபாசு ஆகியோருடன் பயின்றார்.

அதன்பின், கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவரான கிருஷ்ணணை திருமணம் செய்து கொண்டவர், 1954 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து 1957, 1973, 1977 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு கோவை தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டார்.

மேலும், கோவையில் தேசிய பஞ்சாலை கழகம் அமைய காரணமானவர்களில் பார்வதி கிருஷ்ணன் முக்கியமானவர். ஏ.ஐ.டி.யூ.சி. அமைப்பின் அகில இந்திய பொருளாளராகவும், துணை செயலாளராகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பல்வேறு முக்கிய பொறுப்புகளையும் இவர் வகித்துள்ளார்.

ச.ஜெ.ரவி