Published:Updated:

காது வால் நரம்பு அறுவை சிகிச்சை குழந்தைகளுக்கு கருவி: ஜெயலலிதா வழங்கினார்

Vikatan Correspondent
காது வால் நரம்பு அறுவை சிகிச்சை குழந்தைகளுக்கு கருவி: ஜெயலலிதா வழங்கினார்
காது வால் நரம்பு அறுவை சிகிச்சை குழந்தைகளுக்கு கருவி: ஜெயலலிதா வழங்கினார்
காது வால் நரம்பு அறுவை சிகிச்சை குழந்தைகளுக்கு கருவி: ஜெயலலிதா வழங்கினார்

சென்னை: சிறப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்ட காது கேளாத வாய் பேச முடியாத குழந்தைகளுக்கு காது வால் நரம்பு அறுவை சிகிச்சைக்குப்பின் பொருத்தப்படும் கருவிக்கான கூடுதல் மின்கலன்களை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "முதலமைச்சரின் தனிப் பிரிவிற்கு வாய் பேச முடியாத காது கேளாத குழந்தைகளின் பெற்றோர்கள் அளித்த மனுவில், தங்கள் குழந்தைகளுக்கு 6 வயதிற்குள் ஒரு சிறப்பு அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் அவர்கள் காது கேட்கவும், வாய் பேசவும் இயலும் என்றும், அதற்கு 7 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என்றும் தெரிவித்திருந்தார்கள்.

மேலும், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் ரூபாய் வரை மட்டுமே உதவி பெற முடியும் என்பதால், ஒரு சிறப்பு இனமாக கருதி இந்த அறுவை சிகிச்சைக்கு 7 லட்சம் ரூபாய் வரை நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். அக்கோரிக்கையை பரிசீலித்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறவிலேயே பேச முடியாமலும், தாயின் குரலைக் கூட கேட்க முடியாமலும் பரிதவித்த குழந்தைகளுக்கு சிறப்பு காது வால் நரம்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ள நபர் ஒருவருக்கு 7 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் வரை முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிறப்பு தொகுப்பு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்ய ஆணையிட்டார்.

அதன்படி, கடந்த 11 மாதங்களில் 692 குழந்தைகளுக்கு 53 கோடியே 56 லட்சம் ரூபாய் செலவில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிறப்பு தொகுப்பு நிதியிலிருந்து காது வால் நரம்பு அறுவை சிகிச்சை (Cochlear Implantation)செய்யப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை மூலம் பிறவிலேயே காது கேளாத குழந்தைகள் மற்றக் குழந்தைகள் போல இயல்பான கேட்கும் திறனையும் பேசும் திறனையும் பெறுவர். காது வால் நரம்பு அறுவை சிகிச்சை முடிந்த குழந்தைகளின் பயன்பாட்டிற்காக ஏற்கெனவே காது வால் நரம்பு அறுவை சிகிச்சைக்குப்பின் பொருத்தப்படும் கருவியும் அதற்கான மின்கலனும் (Battery Power) வழங்கப்பட்டுள்ளது.

காது வால் நரம்பு அறுவை சிகிச்சை முடிந்த குழந்தைகளின் பயன்பாட்டிற்காக ஏற்கெனவே வழங்கப்பட்ட கருவியின் மின்கலன் சக்தி (Battery) 9 முதல் 12 மாதங்கள் வரை என்பதால், அக்குழந்தைகள் தொடர்ந்து அந்த கருவியை தடையில்லாமல் பயன்படுத்திட ஏதுவாக கூடுதல் மின்கலன்களை விலையில்லாமல் வழங்குவதன் அடையாளமாக நான்கு குழந்தைகளுக்கு காது வால் நரம்பு அறுவை சிகிச்சை கருவிக்கான கூடுதல் மின்கலன்களை முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்" என்று கூறப்பட்டுள்ளது.