Published:Updated:

அ.தி.மு.க. வெற்றி பெற தொண்டர்களிடம் ஐடியா கேட்ட செங்கோட்டையன்!

அ.தி.மு.க. வெற்றி பெற தொண்டர்களிடம் ஐடியா கேட்ட செங்கோட்டையன்!
அ.தி.மு.க. வெற்றி பெற தொண்டர்களிடம் ஐடியா கேட்ட செங்கோட்டையன்!
அ.தி.மு.க. வெற்றி பெற தொண்டர்களிடம் ஐடியா கேட்ட செங்கோட்டையன்!

அரியலூர்: சிதம்பரம் தொகுதியில் அ.தி.மு.க. வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்? என்று தொண்டர்களிடம் செங்கோட்டையன் கருத்து கேட்டார்.

சிதம்பரம் நாடளுமன்ற தொகுதியின் அ.தி.மு.க. பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள செங்கோட்டையன், அந்த தொகுதியை கைப்பற்ற வேண்டும் என்று பல யுக்திகளை கையாண்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக, இந்த தொகுதியில் அ.தி.மு.க.வின் நிலை எப்படியுள்ளது என்று தெரிந்துக்கொள்ள  செங்கோட்டையன் ஒரு  குழுவை நியமித்துள்ளார்.

அந்த குழு சேகரித்த புள்ளிவிவரத்தில், அ.தி.மு.க.வைவிட, பா.ம.க. 15 சதவிகிதத்திற்கு மேல் ஓட்டு வாங்கும் என்றும், அ.தி.மு.க.காரர்களே பா.ம.க.விற்க்குத்தான் ஓட்டு போடுவார்கள் என்றும் தெரிய வந்திருக்கிறது. இதில் அதிர்ச்சி அடைந்த செங்கோட்டையன், உடனே பல கிராமங்களில் இருந்து அ.தி.மு.க.வின் அடிமட்ட தொண்டர்களை அழைத்து  கருத்து கேட்பு கூட்டம் நடத்தி வருகிறார்.

அப்படி நேற்று செந்துறையில் நடத்தப்பட்ட கூட்டத்தில், அ.தி.மு.க.வை சேர்ந்த 70  வயது தொண்டர் ஒருவர், ''முன்பு இந்த பகுதியில் பா.ம.க.வை விட அதிக வாக்குகள் வைத்திருந்தது அ.தி.மு.க.தான். இங்கு, முன்னாள் மாவட்ட செயலாளர் கவிதா ராஜேந்திரன், ஜாதி உணர்வோட செயல்பட்டு  கூட்டுறவு சங்க தேர்தலில் 70 சதவிகிதத்திற்கு மேல் வன்னியர்களுக்கு விட்டுக்கொடுத்தார். பல டெண்டர்களை அவரது ஜாதிகாரர்களுக்கு ஒதுக்கி, திட்டமிட்டே அவரது ஜாதிகாரர்களை வளர்த்துவிட்டார்.

அதேபோல், ஒன்றிய செயலாளர் ஜமால் முகமது, அம்மா பேரவை கார்த்தி ஆகியோர் அ.தி.மு.க. அலுவலகத்தில் இருக்கும் நேரத்தைவிட பா.ம.க. அலுவலகத்தில்தான் அதிக நேரம் இருப்பார்கள். இவர்கள், நம் கட்சி தொண்டர்களை கொஞ்சம் கூட மதிப்பதில்லை.  இங்குள்ள நம் கட்சிக்காரர்களின் கஷ்டங்களை கூட கேட்க யாருமில்லை. கட்சியை பலப்படுத்தவும்  இவர்கள் எந்த விதத்திலும் முனைப்பு காட்டவில்லை.  இப்படி இருந்தால் எப்படி கட்சியை வளர்ப்பது?"  என்று தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்திருக்கிறார்.

அதனைக்கேட்ட செங்கோட்டையன், "தேர்தல் முடியட்டும் இவர்களை நான் பார்த்துக்கொள்கிறேன். இப்போது வெற்றி பெற என்ன செய்யலாம்?"  என்று கூட்டத்தில் கேட்க, "மக்களிடம் திண்ணை பிரசாரம் தொடங்குவோம். நடிகர், நடிகைகளை வரவழைத்து பொது மக்களின்  வீட்டுகளுக்கு சென்று அ.தி.மு.க.வின் சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்போம். இதனால், மக்களின் மனநிலை மாறும் என்று சொல்லி இருக்கிறார்கள். உடனே அதற்க்கு ஏற்பாடு செய்கிறேன்" என்று செங்கோட்டையன் கூறியிருக்கிறார்.

செய்தி, படங்கள்:
எம்.திலீபன்