Published:Updated:

தமிழகத்தில் வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா ஆரம்பமாகியுள்ளது: பொன்.ராதாகிருஷ்ணன்

Vikatan Correspondent
தமிழகத்தில் வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா ஆரம்பமாகியுள்ளது: பொன்.ராதாகிருஷ்ணன்

நாகர்கோவில்: தமிழகத்தில் வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா ஆரம்பமாகியுள்ளது என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளரும் பா.ஜ.க. மாநில தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தபோது, ''பாரதிய ஜனதா தேர்தல் அறிக்கை நாளை வெளியிடப்படுகிறது. தமிழகத்திற்கென்று தனியாக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படவில்லை. ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதிக்கு ஏற்ப தனி தனியே தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும்.

தமிழகத்தில் பிரசாரத்திற்கு நரேந்திரமோடி வருவது உறுதியாகிவிட்டது. அதற்கான தேதி, இடம் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும். சுஷ்மா சுவராஜ் மற்றும் தலைவர்கள் பலரும் பிரசாரத்திற்கு வருகை தர உள்ளனர்.

வீடு வீடாகச் சென்று இரவு 10 மணிக்கு பின்னரும் வாக்கு சேகரிக்கலாம். வாக்காளர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. யார் விரும்புகிறார்கள், யார் விரும்பவில்லை என்று வீடு வீடாகச் சென்று கேட்டு பிரசாரம் செய்யும் நிலையில் எந்த வேட்பாளரும் இருக்க முடியாது.

ஒரு இடத்தில் பிரசாரம் செய்யும்போது வேட்பாளர் பெயரை சொல்லக்கூடாது என்று தேர்தல் ஆணையம் கூறி இருப்பதை எந்த கணக்கில் எடுப்பது? இதெல்லாம் குழப்ப நிலையை ஏற்படுத்தும். இது குறித்து தேர்தல் ஆணையம் தெளிவுப்படுத்த வேண்டும்.

பணம் பட்டுவாடா மற்றும் தேர்தலை தவறாக அணுகுபவர்களுக்கு மட்டும் 10 மணிக்கு மேல் நடக்கும் பிரசாரம் பயனுள்ளதாக இருக்கும். இரவு நேரங்களில் தனி தனியாகவும் குழுவாகவும் சென்று வாக்கு சேகரிக்க அனுமதிக்கக் கூடாது. பணம் பட்டுவாடா பல இடங்களில் ஆரம்பமாகி உள்ளது. பணம் பட்டுவாடா செய்பவர்களை கைது செய்து ஜாமீனில் வெளியே வர முடியாத அளவிற்கு தண்டனை வழங்க வேண்டும்" என்றார்.