Published:Updated:

குடிநீர் கேட்ட பொதுமக்களை அடித்த அ.தி.மு.க.வினர்!

Vikatan Correspondent
குடிநீர் கேட்ட பொதுமக்களை அடித்த அ.தி.மு.க.வினர்!
குடிநீர் கேட்ட பொதுமக்களை அடித்த அ.தி.மு.க.வினர்!
குடிநீர் கேட்ட பொதுமக்களை அடித்த அ.தி.மு.க.வினர்!

நாகை: வேதாரண்யம் பகுதியில் குடிநீர் கேட்டவர்களை அடித்து துவம்சம் செய்திருக்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.

வேதாரண்யம் நகரத்திற்குட்பட்ட கைலவனம்பேட்டை பகுதிக்கு நீண்ட காலமாக அடிப்படை வசதிகள் எதுவுமே செய்து தருவதில்லை. பல முறை கோரிக்கை வைத்தும் எந்த அரசியல்வாதிகளும் கண்டுகொள்ளாமலே இருந்து வந்திருக்கிறார்கள். அத்தியாவசிய தேவையான குடிநீரே இங்கு இல்லாததால் பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்த பகுதியில் ஒரு குடீநீர்த் தொட்டி கட்டியிருக்கிறார்கள். ஆனாலும், இதுவரை அந்த தொட்டி பயண்பாட்டிற்கு வரவில்லை.

கடந்த மாதம் தொகுதியின் அ.தி.மு.க எம்.எல்.ஏ.வான காமராஜை சந்தித்த அந்த பகுதி மக்கள் குடிநீர் தொட்டிக்கு கொள்ளிடம் குடிநீரை கொடுக்குமாறு வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள். அதற்கு, தேர்தலுக்காக உங்கள் பகுதியில் ஓட்டு கேட்டு வருவதற்குள் கோரிக்கையை நிறைவேற்றி தருகிறோம் என பதிலளித்திருக்கிறார் எம்.எல்.ஏ.

இந்நிலையில், கடந்த 4 ஆம் தேதி இரவு எம்.எல்.ஏ. காமராஜ், தொகுதியின் வேட்பாளரான டாக்டர் கோபால், மற்றும் அந்த பகுதியின் அ.தி.மு.க. பிரபலங்கள், கைலவனம் பேட்டைக்கு ஓட்டு கேட்க போயிருக்கிறார்கள். அப்போது, குடிநீர் தந்துவிட்டு ஓட்டு கேட்க வருகிறோம் என சொல்லிவிட்டு இப்படி வருகிறீர்களே என அந்த பகுதி மக்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

இதில் கோபமான எம்.எல்.ஏ காமராஜோடு வந்த சுமார் இருநூறு பேரும், கேள்வி கேட்ட பொதுமக்களை தாக்கத் தொடங்கி இருக்கிறார்கள். இதில், மாதவன் என்பவருக்கு காயம் பட்டதோடு அவர் கழுத்தில் போட்டிருந்த ஒருபவுன் செயினும் காணாமல் போயிருக்கிறது. அதேபோல் தனலெட்சுமி, குப்பம்மாள் ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டிருக்கிறது. தற்போது மூவரும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.

இவ்வளவு களேபரங்கள் நடந்தும் எதுவுமே நடக்காதது போல் காவல்துறை செயல்படுகிறது. அடித்தவர்கள் மீது நடவடிக்கை இல்லை என்று கூறி அந்த பகுதியினர் சாலை மறியலில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதை அறிந்து தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வான எஸ்.கே.வேதரத்தினம் அந்த பகுதிக்கு சென்று, வரும் திங்கட்கிழமைக்குள் பொதுமக்களை தாக்கியவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காவிட்டால் நானே மறியலில் ஈடுபடுவேன் கூறியிருக்கிறார்.

இதேபோல் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு முத்துப்பேட்டை அருகிலிருக்கும் தொண்டியக்காடு பகுதிக்கு போன வேட்பாளர் கோபாலிடம் அப்பகுதி மக்கள் தண்ணீர் பிரச்னை பற்றி கூறியிருக்கிறார்கள். அப்போது, அங்கும் இதே போல் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. மொத்தத்தில் அ.தி.மு.க.விற்கு நாகப்பட்டிணம் தொகுதியில் பாடம் கற்பிக்க காத்திருக்கிறார்கள் கடலோரத்தில் வசிக்கும் குடிநீர் கிடைக்காத பொதுமக்கள்.

வீ.மாணிக்கவாசகம்