Published:Updated:

லஞ்சம் கேட்கும் அதிகாரிகளுக்கு அபராதம்: லோக்சத்தா உறுதி!

Vikatan Correspondent
லஞ்சம் கேட்கும் அதிகாரிகளுக்கு அபராதம்: லோக்சத்தா உறுதி!
லஞ்சம் கேட்கும் அதிகாரிகளுக்கு அபராதம்: லோக்சத்தா உறுதி!

சென்னை: லஞ்சம் கேட்கும் அதிகாரிகளுக்கு அபராதம் போடும் சட்டத்தை கொண்டு வருவதை உறுதிமொழியாகக் கொண்டு தேர்தலை சந்திக்கிறது லோக்சத்தா கட்சி.

லஞ்சம் கேட்கும் அதிகாரிகளுக்கு அபராதம்: லோக்சத்தா உறுதி!

நாடாளுமன்ற தேர்தலில் தென் சென்னைத் தொகுதியில் வீதி, வீதியாக தங்கள் கட்சி சின்னமான விசிலை ஊதியபடி வாக்குச் சேகரித்து வருகிறது லோக்சத்தா கட்சி. அந்தக் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் ஆ.ஜெய்கணேஷ், தென் சென்னை தொகுதியின் வேட்பாளராக போட்டியிடுகிறார். தொகுதி முழுவதுமே இருசக்கர வாகனத்தில் மைக் மூலம் பிரசாரம் செய்தபடி கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஜெகதீஸ்வரனும் மற்றும் சில நிர்வாகிகளும் வேட்பாளருடன் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மாநில பொதுச்செயலாளர் ஜெகதீஷ்வரனிடம் பேசினோம். ''தமிழகத்தில் பழனிகுமார் ஆண்டியப்பன் தலைமையில் லோக்சத்தா கட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. சென்னையில் ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்தது, டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டம் என்று பல்வேறு பொதுநல போராட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த போராட்டங்கள் மக்கள் மத்தியில் எங்களை நிலை நிறுத்தியுள்ளது.

லஞ்சம் கேட்கும் அதிகாரிகளுக்கு அபராதம்: லோக்சத்தா உறுதி!

அந்த அடிப்படையில் மாற்றத்தை எதிர்நோக்கும், முதன்முறையாக வாக்களிக்க இருக்கும் புதிய வாக்காளர்களான இளைஞர்களை மனதில் கொண்டே இந்தத் தேர்தலில் களமிறங்கி இருக்கிறோம். ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் நிலையில் நாங்கள் பொதுமக்களிடமிருந்து முறையாக நன்கொடை பெற்று அந்த பணத்தில் வேட்பாளர்களுக்கு செலவு செய்கிறோம். அதிகபட்சம் ஒரு வேட்பாளருக்கு ரூ.3 லட்சம் செலவு செய்ய உள்ளோம்.

நமது அடிப்படைத் தேவைகளைச் செய்ய லஞ்சம் கேட்கும் அரசு அதிகாரிகளுக்கு அபராதம் போடும் வகையிலான சேவை பெறும் உரிமை சட்டத்தை கொண்டு வருவதை தேசிய அளவிலான உறுதிமொழியாகத் தருகிறோம். தமிழகத்தைப் பொறுத்தவரையில் மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத்தீர்வு என்பது ஆழ்கடல் மீன்பிடிப்புதான். கச்சத்தீவை மீட்பதால் நமக்கு பயன் ஒன்றும் இல்லை. ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு மானியம் அளித்து ஊக்குவித்தாலே மீனவர்கள் எல்லை தாண்டும் பிரச்னை முடிவுக்கு வரும். அவர்களை காக்கும் வகையில் இந்திய கடற்படைக்கு அதிநவீன ரோந்து கப்பல்கள், வானூர்திகள் வாங்கப்படவேண்டும்.

தென்சென்னை தொகுதியில் பெருகிவரும் போக்குவரத்து பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண்பது, திருச்சியை தலைநகரமாக உருவாக்கி மக்களின் போக்குவரத்தை குறைப்பது போன்றவற்றை தேர்தல் அறிக்கையாக வைத்துள்ளோம்’’ என்றவர், மாற்றத்திற்கு நாங்கள் தயார், மாற்றுவதற்கு நீங்கள் தயாரா’ என்று விசிலடித்தபடியே வாக்காளர்களை நோக்கி பயணித்தார்.

அதிரடி அரசியல் கட்சிகளின் ஸ்பீக்கர் சப்தத்தில் விசில் சப்தம் மக்கள் செவிகளில் விழுமா?

- செய்யது