Published:Updated:

தென் சென்னை அ.தி.மு.க. வேட்பாளர் ஜெ.ஜெயவர்தன் தீவிர வாக்கு சேகரிப்பு!

Vikatan Correspondent
தென் சென்னை அ.தி.மு.க. வேட்பாளர் ஜெ.ஜெயவர்தன் தீவிர வாக்கு சேகரிப்பு!
தென் சென்னை அ.தி.மு.க. வேட்பாளர் ஜெ.ஜெயவர்தன் தீவிர வாக்கு சேகரிப்பு!

சென்னை: தென்சென்னையில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ஜெ.ஜெயவர்தன் இன்று (12ஆம் தேதி) தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வாக்குசேகரிப்பை கொட்டிவாக்கம் எம்.ஜி.ஆர். நகரில் காலையில் அமைச்சர் பா.வளர்மதி  தொடங்கி வைத்து, பொதுமக்களிடம் சென்று இரட்டை இலைக்கு வாக்கு கேட்டு துண்டுபிரசுரங்களை வழங்கினார்.

தென் சென்னை அ.தி.மு.க. வேட்பாளர் ஜெ.ஜெயவர்தன் தீவிர வாக்கு சேகரிப்பு!

முன்னதாக மைக்கில் வேட்பாளர் ஜெ.ஜெயவர்தன் பேசுகையில், ‘‘அம்மா அவர்களுக்கு இவ்வளவு சொத்து எப்படி வந்தது என்று கருணாநிதி கேட்கிறார். திருக்குவளையிலிருந்து கள்ள ரயில் ஏறி வந்தவர்தான் இந்த கருணாநிதி, சினிமாவில் ஐம்பது ரூபாய் சம்பளத்துக்கு கதை வசனம் எழுதிக் கொடுத்த அவர் வறுமை காரணமாக கோபாலபுரம் வீட்டை அடகு வைத்தவர்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், அம்மாவும் சேர்ந்து முரசொலிமாறனின் மேகலா பிக்சர்ஸுக்கு ‘எங்கள் தங்கம்’ படம் நடித்து கொடுத்து அதில் கிடைத்த வருமானத்தில் வீட்டை மீட்டவர் கருணாநிதி. பிறந்ததிலிருந்தே வசதி படைத்த அம்மாவைக் கேட்பதற்கு இவருக்கு என்ன தகுதி இருக்கிறது’’ என்று முன்னாள் முதல்வர் கருணாநிதியை ஒரு பிடிபிடித்தார்.

இதையடுத்து வேட்பாளர் ஜெ.ஜெயவர்தன், சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ. கேபி.கந்தன், 14வது மண்டலக்குழுத் தலைவர் ராஜாராம், கொட்டிவாக்கம் பகுதிக் கழக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் திறந்த ஜீப்பில் எம்.ஜி.ஆர்.நகர், வெங்கடேஷ்வரா நகர், இளங்கோ நகர், கே.பி.கே. நகர், ஏ.ஜி.எஸ்.காலனி, கொட்டிவாக்கம் குப்பம் பகுதிகளில் பிற்பகல் வரை வாக்குச் சேகரித்தனர்.

செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், சால்வை அணிவித்தும் ஜெ.ஜெயவர்தனுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். வேட்பாளரின் வாகனத்துக்கு முன்னும் பின்னும் இருசக்கர வாகனத்தில் அ.தி.மு.க.வினர் உற்சாகமாக வாக்கு கேட்டபடி ஊர்வலம் சென்றனர். மாலையில் பாலவாக்கம் பகுதியில் வாக்கு சேகரித்தனர்.

-எம்.செய்யது முகம்மது ஆஸாத்