Published:Updated:

முல்லை பெரியாறு: நீரியல் விதியையே மாற்றும் கேரளா...!

Vikatan Correspondent
முல்லை பெரியாறு: நீரியல் விதியையே மாற்றும் கேரளா...!
முல்லை பெரியாறு: நீரியல் விதியையே மாற்றும் கேரளா...!
முல்லை பெரியாறு: நீரியல் விதியையே மாற்றும் கேரளா...!

சென்னை: முல்லை பெரியாறு விவகாரத்தில் நீரியல் விதியையே மாற்றி கூறுகிறது கேரள அரசு.

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தமிழக விவசாயிகளை மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது. அதே நேரம் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள கேரளா முதல்வர் உம்மன் சாண்டி, 'கேரள மக்களின் பாதுகாப்பை கவனத்தில் எடுத்துக்கொள்ள நீதிமன்றம் தவறிவிட்டது' என தெரிவித்துள்ளார்.

அணை பலவீனமாக இருக்கிறது.. உடைந்தால் 20 லட்சம் மக்கள் உயிருக்கு ஆபத்து என்ற வதந்தியை கேரளா முழுக்க பரப்பிவிட்டதே கேரளா அரசியல்வாதிகள்தான்.

உண்மையில் கேரள அரசு சொல்வது போல் அணை உடையுமானால், வெள்ள நீர் முல்லை-பெரியாறு பள்ளத்தாக்கு வழியாக வழிந்தோடி இடுக்கி அணையை அடையும். இடுக்கி அணையானது, முல்லை-பெரியாறு அணையைவிட ஏழு மடங்கு பெரியது. அதேபோல கேரளா சொல்லும் 20 லட்சம் மக்களும் மேட்டுப் பகுதியில் உள்ளவர்கள். கடல் மட்டத்திலிருந்து பெரியாறு அணை 2,889 அடி உயரத்தில் உள்ளது.

ஆனால், இந்த 20 லட்சம் மக்கள் வசிப்பதாக சொல்லப்படும் குமுளி, கடல் மட்டத்திலிருந்து 3,100 அடி உயரத்திலும், வண்டிப் பெரியாறு 3,350 அடி உயரத்திலும், பாம்பனார் 3,750 அடி உயரத்திலும், ஏலப்பாறை 4,850 அடி உயரத்திலும் இருக்கின்றன. அப்படியிருக்கும்போது, முல்லை-பெரியாறு நீர், இந்தப் பகுதிகளை எப்படி பாதிக்க முடியும்? பொதுவாக, வெள்ள நீர் மேட்டிலிருந்து பள்ளத்துக்குத்தான் பாயும். ஆனால், பள்ளத்திலிருந்து மேட்டுக்குப் பாயும் என நீரியல் விதியினையே மாற்றிக் கூறுகிறது கேரள அரசு.

அணையினுள் ஏற்படும் அழுத்தத்தைக் குறைப்பதற்காக உலகில் உள்ள அனைத்து அணைகளிலும், நீர்த்தேக்கங்களிலும் அனுமதிக்கப்பட்ட நீர்க்கசிவு இருக்கும். இதற்காக ஒவ்வொரு அணைக்கும் ஒரு அளவு வரையறுக்கப்பட்டுள்ளது. அதன்படி முல்லை-பெரியாறு அணையின் அதிகபட்ச நீர்க்கசிவு... நிமிடத்துக்கு 250 லிட்டர். ஆனால், இதுநாள் வரை அணையில் பதிவு செய்யப்பட்டுள்ள அதிகபட்ச நீர்க்கசிவு நிமிடத்துக்கு 45 லிட்டர்தான்.

அணையின் நீர்மட்டம் 152 அடியாக இருந்தபோது, நீர்ப்பிடிப்பு பகுதி 8,591 ஏக்கராக இருந்தது. ஆனால், கடந்த 30 ஆண்டுகளாக அணையின் நீர் மட்டம் 136 அடியாக குறைக்கப்பட்டு விட்டதால், நீர்ப்பிடிப்பு பகுதி 4,677 ஏக்கராக சுருங்கி விட்டது. இடைப்பட்ட 3,914 ஏக்கர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, ஏராளமான மாளிகைகளும், விடுதிகளும், கட்டடங்களும் கட்டப்பட்டுள்ளன. இதன் பின்புலத்தில் இருக்கும் கேரள அரசியல்வாதிகள், அணையின் மட்டத்தை உயர்த்த முட்டுக்கட்டை போட்டு வருகிறார்கள்.

ஆர்.குமரேசன்