Published:Updated:

கூர்க்காலாந்து பிராந்திய நிர்வாகத்துக்காக ஒப்பந்தம்!

விகடன் விமர்சனக்குழு

கொல்கத்தா, ஜூலை 19,2011

மேற்கு வங்கத்தில் கூர்க்காலாந்து பிராந்திய நிர்வாகம் அமைப்பதற்கான முத்தரப்பு ஒப்பந்தம் திங்கட்கிழமை கையெழுத்தானது. ##~~##

டார்ஜிலிங் கூர்க்கா மலை கவுன்சிலுக்கு மாற்றாக, கூர்க்காலாந்து பிராந்திய நிர்வாகம் அமைக்க இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.

மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி, டார்ஜிலிங் தொகுதி பிஜேபி எம்.பி. ஜஸ்வந்த் சிங், கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா தலைவர் பிமல் குருங் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த முத்தரப்பு ஒப்பந்தத்தில் மத்திய அரசு சார்பில் மத்திய உள்துறை இணை செயலாளர் கே.கே.பதக், மாநில அரசு சார்பில் மாநில உள்துறை செயலாளர் கவுதமா, கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா சார்பில் ரோஷன் கிரி ஆகியோர் கையெழுத்திட்டார்கள்.

இந்நிகழ்ச்சியை வரலாற்று சிறப்புமிக்கது என்று கூறிய ப.சிதம்பரம், கூர்க்காலாந்து பிராந்திய நிர்வாகத்துக்கு மத்திய, மாநில அரசுகள் முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று உறுதி அளித்தார்.

இதனிடையே, டார்ஜிலிங் மாவட்டத்தில் சமவெளி பகுதிகளான சிலிகுரி, ஜபல்குரி ஆகியவற்றைச் சேர்ந்த பழங்குடியின மக்கள், இந்த ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 48 மணி நேர முழு அடைப்பு போராட்டத்தை தொடங்கினர். இதனால் அப்பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

பின்னணி..

மேற்கு வங்த்தில் மலைப்பகுதியான டார்ஜிலிங் உள்ளிட்ட பகுதிகளை பிரித்து கூர்க்காலாந்து தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று நீண்ட காலமாக போராட்டம் நடந்து வருகிறது. இதையொட்டி, வன்முறை சம்பவங்களும் அரங்கேறின.

இதனால், முந்தைய இடதுசாரி கூட்டணி அரசு, டார்ஜிலிங் கூர்க்கா மலை கவுன்சில் அமைத்தது. இருப்பினும் அமைதி திரும்பவில்லை.

இதையடுத்து, புதிதாக பதவி ஏற்ற மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசுக்கு, கூர்க்காலாந்து பிரச்னை பெரும் தலைவலியாக உருவெடுத்தது.

இதையடுத்து, மம்தா பானர்ஜியின் முயற்சியால், இப்பிரச்னையில் சுமூக தீர்வு காணும் வவகையி இந்த முத்தரப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.