Published:Updated:

வரதட்சணை கொடுமை: கணவர் வீட்டு முன்பு இளம்பெண் தர்ணா!

Vikatan Correspondent
வரதட்சணை கொடுமை: கணவர் வீட்டு முன்பு இளம்பெண் தர்ணா!
வரதட்சணை கொடுமை: கணவர் வீட்டு முன்பு இளம்பெண் தர்ணா!
வரதட்சணை கொடுமை: கணவர் வீட்டு முன்பு இளம்பெண் தர்ணா!

சென்னை: வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்தியதாக, கணவர் வீட்டு முன்பு சென்னையைச் சேர்ந்த இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

சென்னை, அரும்பாக்கத்தை சேர்ந்தவர் வைதேகி. இவருக்கும், அயனாவரம் பி.இ. கோயில் தெருவை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியர் ஜெகதீசுக்கும் கடந்த 2010ல் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 47 சவரன் நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டது.

கூடுதலாக 15 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டு ஜெகதீஷ், அவரது தந்தை ஆறுமுகம், அம்மா சந்திரா ஆகியோர் வைதேகியை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அவர் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்நிலையில், தொடர்ந்து வரதட்சணை கொடுமை செய்ததாக கணவர், மாமனார், மாமியார் மீது அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த மார்ச் 12ஆம் தேதி வைதேகி புகார் கொடுத்தார். ஆனால் காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

வைதேகி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததும், அவரது கணவர் ஜெகதீஷ் முன்ஜாமீன் கேட்டு சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மேலும், விவகாரத்து கேட்டும் வைதேகிக்கு நோட்டீஸ் அனுப்பினார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த வைதேகி, அயனாவரம் காவல்துறையினரிடம் விபரத்தை சொல்லி, வரதட்சணை கேட்டு கொடுமையப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தெரிவித்தார். ஆனால், அதை காவல்துறையினர் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் ஜெகதீஷின் முன்ஜாமீன் மனு கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.

வரட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியவர்களை கைது செய்யக்கோரியும், நடவடிக்கை எடுக்காத காவல்துறையினரை கண்டித்தும், வைதேகி கணவர் வீட்டு முன்பு நேற்றிரவு 10 மணி முதல் உண்ணாவிரத போராட்டதை தொடங்கினார். வைதேகிக்கு ஆதரவாக அவரது அண்ணன் விஸ்வநாதனும் உடனிருக்கிறார்.

போராட்டத்தை வைதேகி கையில் எடுத்ததால் ஜெகதீஷ் மற்றும் அவரது பெற்றோர் வீட்டை பூட்டி விட்டு சென்று விட்டனர். இருப்பினும் பூட்டிய வீட்டின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதுகுறித்து தகவலறிந்ததும் அயனாவரம் காவல்துறை இன்ஸ்பெக்டர் கனகராஜ் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து வைதேகியுடன் சமரச பேச்சுவார்ததை நடத்தினர். அப்போது வரதட்சணை கொடுமைப்படுத்திய கணவர் மற்றும் அவரது பெற்றோரை கைது செய்யும் வரை எனது போராட்டம் தொடரும் என்று வைதேகி பிடிவாதமாக தெரிவித்தார். இதனால் வேறுவழியின்றி காவல்துறையினர் அங்கு இருந்து திரும்பி சென்று விட்டனர். வைதேகியின் பாதுகாப்புக்காக 2 காவலர்கள் மட்டும் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

போராட்டம் குறித்து வைதேகி கூறுகையில், "வரதட்சணை கேட்டு எனது கணவர், அவரது பெற்றோர் என்னை கொடுமைப்படுத்தினர். மேலும் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைத்து சென்று எனது கர்ப்பத்தையும் கலைத்து விட்டனர். எனக்கு நடந்த கொடுமைகள் குறித்து அயனாவரம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்து 4 மாதங்களாகியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனது கணவர் குடும்பத்தினருக்கு ஆதரவாக காவல்துறையினர் நடந்து கொள்கின்றனர். காவல்துறையில் புகார் கொடுத்ததால் எனக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள். இந்த பிரச்னையில் நியாயம் கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டேன்" என்றார்.

எஸ்.மகேஷ்