Published:Updated:

செய்திச் சுருக்கம்: ஜூலை 30, 2011

Vikatan Correspondent

முன்னாள் துணை முதல்வரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை திருவாரூர் அருகே காவல்துறையால் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார். ##~~##

சமச்சீர் கல்வியை உடனடியாக அமல்படுத்தக் கோரி, பள்ளி மாணவர்களை வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்தியதாக, திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணனை காவல்துறை கைது செய்ய இருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டதால், மு.க.ஸ்டாலின் உள்பட திமுகவினர் 300 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

ஸ்டாலின் கைது செய்யப்பட்டதாக தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுகவினர் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

*
ஆகஸ்ட் 1-ம் தேதி நடைபெறவுள்ள திமுகவின் மாநிலம் தழுவிய போராட்டத்தை நசுக்கும் வகையிலேயே கைது நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது என மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

*
மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டது ஓர் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையே என்று குற்றம்சாட்டிய திமுக தலைவர் கருணாநிதி, அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக, ஆகஸ்டு 1 ஆம் தேதி திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.

*
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் குற்றம்சாட்டப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசா நீதிமன்றத்தில் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் குறித்து இருவரும் விளக்கம் அளிக்க வேண்டும் என அதிமுக வலியுறுத்தியுள்ளது.

மேலும், முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டும் கேரள அரசின் திட்டத்தை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 25 தீர்மானங்கள், சென்னையில் நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

*
நில அபகரிப்பு வழக்கில், சேப்பாக்கம் / திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாவட்டச் செயலாளருமான  ஜெ.அன்பழகன் சனிக்கிழமை காலை கைது செய்யப்பட்டார்.

இதனிடையே சேலத்தில் மேலும் ஒரு நில அபகரிப்பு வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

*
கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மதியம் ராஜினாமா செய்யவுள்ளதாக எடியூரப்பா அறிவித்துள்ளார்.

சட்டவிரோத சுரங்க தொழில் தொடர்பான லோக் ஆயுக்தா விசாரணை அறிக்கையில் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. அதையடுத்து அவரை பதவி விலகுமாறு பிஜேபி மேலிடம் கட்டளையிட்டது குறிப்பிடத்தக்கது.

*
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 4 அணைகள், கேரளாவின் கட்டுப்பாட்டுக்கு சென்றுவிடுவதை தடுக்கும் வகையில், அணை பாதுகாப்பு சட்ட மசோதாவில் உரிய திருத்தங்களையும், சேர்க்கைகளையும் மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அமைச்சகத்துக்கு உத்தரவுகள் வழங்குமாறு கோரிக்கை விடுத்து, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமருக்கு அவர் எழுதிய மற்றொரு கடிதத்தில், படுகர் இன மக்களை, பழங்குடி இன மக்கள் பட்டியலில் விரைவில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.

*
அமெரிக்க தூதராக பொறுப்பேற்கவுள்ள நிலையில், மூன்று நாள் பயணமாக இலங்கை சென்ற இந்திய வெளியுறவுச் செயலர் நிரூபமா ராவ், அந்நாட்டு அதிபர் ராஜபக்ஷே அளித்த பிரிவு உபசார விருந்தில் கலந்துகொண்டார்.

*
சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2,201 ரூபாயாக இருந்தது.

*
இந்தியா - இங்கிலாந்து இடையே நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியின் போது, நடுவர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இந்திய வேகப் பந்துவீச்சாளர் பிரவீன் குஆருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.