Published:Updated:

கோவிந்தய்யா..!

கோவிந்தய்யா..!
கோவிந்தய்யா..!

கோவிந்தய்யா..!

போரூர், மவுலிவாக்கத்தில் இடிந்து விழுந்த கட்டடப் பகுதியில் இருந்து வெளியில் வந்து, இரு சக்கர வாகனத்தை எடுப்பதற்காக போரூர் ரவுண்டானாவை நோக்கி நடந்து கொண்டிருந்தேன்.

கோவிந்தய்யா..!

‘‘போரூர் ரவுண்டானாவுக்கு எப்படிப் போகணும்?’’ என்று தெலுங்கு கலந்த தமிழில் கேட்டார் ஒரு வயதானவர். எப்படியும் அவருக்கு வயது 60க்கு மேல் இருக்கும். ‘‘இப்படிப் போகணும்’’ என்று கை காட்டினேன். அவர் விடுவிடுவென எனக்கு முன்பாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

நான் வண்டியை எடுத்துக்கொண்டு போரூரை நோக்கி செல்ல... ஒருவர் லிப்ட் கேட்டு கையை அசைத்தார். அதே தெலுங்கு பெரியவர்தான். அங்கிருந்து போரூர் ரவுண்டானா சென்று சேரும் வரையிலான இடைப்பட்ட நேரத்தில் அவர் பகிர்ந்துகொண்டவை குறைவுதான். ஆனால் அதுதான், தமிழ்நாட்டில் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்களின் அவல வாழ்க்கை குறித்த குறுக்குவெட்டு சித்திரம்.

‘‘இடிஞ்ச பில்டிங்ல உங்களுக்கு வேண்டியவங்க யாரும் சிக்கியிருக்காங்களா?’’

‘‘இல்லை... எனக்கு இந்தக் கட்டடத்தோட மேஸ்திரி பழக்கம். அதான் பார்க்க வந்தேன். ஆளைக் காணலை.

கோவிந்தய்யா..!

செல்போன் ஆஃப் ஆகியிருக்கு. அவரும் உள்ளே சிக்கியிருக்காரான்னு தெரியலை. காலையிலேர்ந்து நின்னுப் பார்த்தேன். எந்த விவரமும் கிடைக்கலை. போரூர் ராமச்சந்திரா ஆஸ்பத்திரியில கொஞ்ச பேரை சேர்த்திருக்கிறதா சொல்றாங்க. அதான் அங்கேப் போய்கிட்டிருகேன்’’

‘‘நீங்க என்ன வேலைப் பார்க்குறீங்க?’’

‘‘கட்டட வேலைதான். நான் அடையார்ல வேலைப் பார்க்குறேன். இன்னைக்கு ஞாயித்திக்கிழமை லீவு. அதான் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்’’

‘‘எவ்வளவு சம்பளம் உங்களுக்கு?’’

‘‘இப்போ ஒரு நாளைக்கு 270 ரூபாய் தர்றாங்க. வாரத்துக்கு ஆறு நாள் வேலை. சனிக்கிழமை சாயுங்காலமா சம்பளம். டீ, காபி, பாக்கு செலவு போக வாரத்துக்கு 1,500 ரூபாய் கிடைக்கும். அந்தக் காசுலதான் அரிசி வாங்கி சமைச்சுக்கனும். ரேஷன் அரிசி கிலோ 5 ரூபாய்ன்னு விற்குறாங்க. அதை வாங்கிக்குவோம். புருஷன், பொண்டாட்டி ரெண்டு பேரும் வேலை செஞ்சா வாரத்துக்கு 2000, 2500 மிச்சம் பிடிக்கலாம். மாசத்துக்கு 10 ஆயிரத்துக்குக் குறையாம கிடைக்கும்’’

‘‘பணத்தை என்ன பண்ணுவீங்க?’’

‘‘மேஸ்திரி நல்ல ஆளா இருந்தா ஊருக்குப் போகும்போது வாங்கிக்கலாம்னு அவர்கிட்டயே கொடுத்து வைப்போம். ஏமாத்துற ஆளுன்னு தெரிஞ்சுதுன்னா அப்பப்போ வாங்கிக்குவோம். ஊர்ல என் பையன்ங்க ரெண்டு பேரும் படிக்கிறாங்க. முன்னாடி மணி ஆர்டர்ல அனுப்பிக்கிட்டு இருந்தேன். இப்போ பேங்க் அக்கவுண்ட்ல போட்டிருவேன்’’

‘‘ஊருக்குப் போறதுக்கு லீவு உண்டா?’’

‘‘லீவு எடுத்துக்கலாம். வேலைக்குப் போனா சம்பளம். வேலைக்கு போகாட்டி சம்பளம் இல்லை, அவ்வளவுதான்’’

‘‘சென்னையில எங்கே தங்கியிருக்கீங்க?’’

‘‘வேலை நடக்குற பில்டிங்லயே தங்கிக்குவோம். நான் மெட்ராஸுக்கு வேலைக்கு வந்து 17 வருஷம் ஆகுது. இத்தனை வருஷமா குடும்பத்தோட அப்படித்தான் தங்கியிருகேன்’’

‘‘மகன்களை படிக்க வைச்சிருக்கீங்களா?’’

‘‘ஒரு பையன் எம்.சி.ஏ. முடிச்சுட்டான். இன்னொரு பையன் ப்ளஸ் டூ படிச்சுக்கிட்டிருக்கான். இப்போ ஆந்திராவை பிரிச்சுட்டாங்கல்ல... ஏற்கெனவே இருந்த கெவர்மென்ட் ஆபீஸ் எல்லாம் தெலுங்கானாவுக்குப் போச்சு. சந்திரபாபு நாயுடு ஆந்திராவுக்கு புதுசா பில்டிங் கட்டப்போறதா சொல்லியிருக்கார். அந்த வேலை ஆரம்பிச்சாச்சுன்னா எப்படியும் 10, 15 வருஷம் நடக்கும். அதுக்குப் பிறகு நான் அங்கே வேலைக்குப் போயிடுவேன்’’

17 ஆண்டு கால உழைப்பிற்குப் பிறகு இந்த முதிய வயதிலும் அடுத்த பதினைந்து ஆண்டுகளுக்கு உழைக்க முடியும் என்ற நம்பிக்கை அவருக்கு இருக்கிறது. அவரது ரத்த சொந்தங்களோ, உறவினர்களோ யாரும் இடிந்த கட்டடத்திற்குள் சிக்கியிருக்கவில்லை. இருந்தாலும் கிடைத்த ஒரு நாள் விடுமுறையில் ஓய்வு எடுக்காமல், தன் சக தொழிலாளர்களின் உயிருக்காகப் பதறித் துடித்து வந்திருக்கிறார். இதோ... இந்த மதிய நேரத்து வெயிலில் தேய்ந்த செருப்புடன் 65 வயது கோவிந்தய்யா என் முன்னே நடந்து சென்று கொண்டிருக்கிறார்...!

- பாரதி தம்பி

அடுத்த கட்டுரைக்கு