Published:Updated:

விவசாய பட்டறிவை பகிர்ந்துகொண்ட விவசாயிகள்!

விவசாய பட்டறிவை பகிர்ந்துகொண்ட விவசாயிகள்!
விவசாய பட்டறிவை பகிர்ந்துகொண்ட விவசாயிகள்!

கடலூர் மாவட்டம், ராமநத்தம் கிராமத்தில் உள்ள ‘தமிழ்க்காடு’ பண்ணையில் ‘உழவே தலை’ என்கிற பெயரில் வட்டார உழவர்களின் பட்டறிவு பகிர்தல்  நிகழ்ச்சி நடைபெற்றது. பெரம்பலூர், கடலூர் மாவட்ட  விவசாயிகள் பலர் தங்கள் விவசாயத்தில் கற்ற பட்டறிவை இந்நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டனர்.

விவசாய பட்டறிவை பகிர்ந்துகொண்ட விவசாயிகள்!

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் படத்திற்கு காய்கறிகள் படையலிட்டு துவங்கிய நிகழ்ச்சி, முழுக்க முழுக்க இயற்கையை நேசிக்கும் நிகழ்வாகவே அமைந்திருந்தது. விவசாயிகள் களைப்பாற்றிக் கொள்ள எலுமிச்சை- பனை வெல்லச்சாறும், நொறுக்குத் தீனிக்கு பதிலாக காய்கறிகள் தீனியும், வெங்கலப் பாத்திரத்தில் மழை நீரையே குடிநீராகவும் வைத்திருந்தனர்.

மதிய உணவாக மர நிழலில் கம்மங்கூழும், கேழ்வரகு கூழும் குடித்தபடியே நிகழ்வில் பங்கேற்கும் விதமாக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது வயலில் உழைத்து, களைத்து வந்திருந்த விவசாயிகளை ஈர்க்கும் விதமாக இருந்தது. தமிழகம் முழுக்க உள்ள முன்னோடி விவசாயிகளை அழைக்காமல், அந்த பகுதிகளிலே தங்களுக்கு தெரிந்தவர்களை, இயற்கை விவசாயம் செய்து வருகிற நபர்களை ஒருங்கிணைக்கின்ற நிகழ்வாக இருந்தது.

விவசாய பட்டறிவை பகிர்ந்துகொண்ட விவசாயிகள்!

பல இயற்கை விவசாயிகள் இந்த பகுதியிலே இருந்தாலும், வட்டாரத்துக்கு ஏற்றவாறு விவசாயத்திற்கான அறிவுரை வழங்கவும், அவர்களின் நிலங்களுக்கு சென்று பார்வையிட்டு நமது விவசாய அறிவை பெருக்கிக்கொள்ளவும் வழி தெரியாமலேயே இருந்தோம். இந்த பகுதிக்கான விவசாயத்தில் முன்னோடிகளை ஒருங்கிணைத்து அவர்களின் அறிவை பகிந்துகொள்ளவும், இயற்கை விவசாய பொருட்களை விற்பனை செய்வதற்கு விவசாயிகளுக்குள் தொடர்புகளை வலுப்படுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி இருந்தது.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட படிப்பறிவில் குறைவான விவசாயிகள்கூட நம்மாழ்வாரையும், பாலேக்கரை பற்றி பேசியதோடு பசுமை விகடனை மேற்கொள்காட்டி பஞ்சகவ்யா தயாரிப்பு, அமிர்த கரைசல், மண்புழு உரம் தயாரித்தல் குறித்து விவசாயிகள் தங்களது கருத்தை பகிர்ந்து கொண்டனர்.

இந்த மண்ணை மாசில்லாமல் பொக்கிஷமாக பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு தரவேண்டும். அதற்காகவே இயற்கை விவசாய முறையை செய்து வருகின்றோம் என பேசினார்கள் முன்னோடி விவசாயிகள்.

சி. ஆனந்தகுமார்

படங்கள்:
பா.கந்தகுமார்