Published:Updated:

சென்னையில் கத்தியுடன் இரு கல்லூரி மாணவர்கள் மோதல்!

விகடன் விமர்சனக்குழு
சென்னையில் கத்தியுடன் இரு கல்லூரி மாணவர்கள் மோதல்!
சென்னையில் கத்தியுடன் இரு கல்லூரி மாணவர்கள் மோதல்!
சென்னையில் கத்தியுடன் இரு கல்லூரி மாணவர்கள் மோதல்!

சென்னை: சென்னை, அண்ணா சாலையில் கத்தியுடன் இரண்டு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னையில், கல்லூரி மாணவர்களுக்கிடையேயான மோதல் சம்பவங்கள் நடைபெறுவது வாடிக்கையாகி வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் மோதல் சம்பவங்கள் தொடர்பாக 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்பு கீழ்ப்பாக்கம் பச்சையப்பா கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் மோதலில் ஈடுபட்டு சக மாணவரை வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் இன்று (22ஆம் தேதி) பிற்பகலில், சென்னை, அண்ணாசாலை கேசினோ தியேட்டர் அருகில் பிளாக்கர்ஸ் ரோடு சந்திப்பில் நந்தனம் கலைக்கல்லூரி மாணவர்கள் சிலர் ‘18 கே’ மாநகர பஸ்சில் வந்து இறங்கினர். சிறிது நேரத்தில் மாநில கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் ‘27எல்’ மாநகர பஸ்சில் அங்கு வந்து இறங்கினர். அப்போது இரு தரப்பு மாணவர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

திடீரென நந்தனம் கலைக்கல்லூரி மாணவர்கள் 7 பேர் கத்தியை எடுத்துக்கொண்டு, மாநிலக் கல்லூரி மாணவர்களை விரட்டினர். பரபரப்பான அண்ணாசாலையில் நடைபெற்ற இச்சம்பவத்தை கண்டு பொதுமக்கள் அச்சத்தில் உறைந்து போய் நின்றனர்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு விரைந்து வந்த ரோந்து போலீசார் குணசேகரன், தெய்வீகன் ஆகியோர் மாணவர்களை விரட்டிச் சென்றனர். போலீசார் விரட்டுவதை பார்த்ததும் நந்தனம் கல்லூரி மாணவர்கள் ஆளுக்கொரு திசையாக பிரிந்து சென்றனர். இருப்பினும், போலீசார் விரட்டி சென்று பார்த்தசாரதி (19) என்ற மாணவரை மடக்கி பிடித்தனர். எம்.கே.பி. நகரை சேர்ந்த அந்த மாணவர், நந்தனம் கலைக்கல்லூரியில் பி.ஏ. 2ஆம் ஆண்டு படித்து வருகிறார்.

அவரிடம் இருந்து 2 அடி நீள கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. இவரின் நணபர்களான மணி, சுதர்சன், திவாகர், குரு, பிரவீன் ஆகிய 5 மாணவர்கள் அடையாளம் தெரிந்துள்ளது. தலைமறைவான அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.