Published:Updated:

அண்ணாவுக்கு ஆதரவாக சென்னையில் போராட்டம்

சென்னை, ஆக.17,2011

அண்ணா ஹஜாரேவுக்கு ஆதரவாக சென்னையில் பழம்பெரும் சுதந்திர போராட்ட தியாகி லட்சுமி காந்தன் பாரதி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினர். ##~~##

ஊழலுக்கு எதிரான வலுவான லோக்பால் மசோதா கோரி போராட்டம் மேற்கொண்டுள்ள அண்ணா ஹஜாரே குழுவுக்கு ஆதரவாக நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

சென்னையிலும் பல்வேறு அமைப்புகள் அண்ணாவுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளன.

85 வயதான  தியாகி லட்சுமி காந்தன் பாரதி தலைமையில், சென்னை - திருவான்மியூரில் செவ்வாஃய்க்கிழமை காலை உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கப்பட்டது.

இதுகுறித்து அண்ணாவின் இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் சென்னை கிளை நிர்வாகிகள் கூறுகையில், பொது இடத்தில் உண்ணாவிரதம் இருப்பதற்கு காவல்துறை அனுமதி தராததால், தனியார் கட்டத்தில் உண்ணாவிரதம் இருப்பதாக தெரிவித்தனர்.

இந்த உண்ணாவிரதத்தை தொடங்கிவைத்து லட்சுமி காந்தன் பாரதி, "அண்ணா ஹஜாரே தொடங்கியிருப்பது சுதந்திரப் போராட்டத்தின் தொடர்ச்சி என்று தான் சொல்லவேண்டும்.

நாட்டில் புரையோடிப்போயுள்ள லஞ்சம் ஊழலை, இளைஞர்களால்தான் ஒழிக்க முடியும், இந்த போராட்டத்தில், இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்க முன்வரவேண்டும்," என்று அழைப்பு விடுத்தார்.

அண்ணா கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை அடையாறு பேருந்து நிலையம் அருகே தர்ணா போராட்டம் நடத்த முயன்ற 25-க்கும் மேற்பட்ட இளைஞர்களையும், இளம் பெண்களையும் போலீஸார் கைது செய்தனர்.

ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பில், சென்னை பூங்கா நகர் தபால் நிலையம் எதிரே மெமோரியல் ஹால் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதில், இந்த இயக்கத்தின் நிர்வாகிகள் வி.சி.சந்திரன், ரகுபதி, எல்.எஸ்.ஜெகநாதன், வி.டி.ராங்கநாதன், ஏ.வீரப்பன், நபீஸ் அகமது உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

அடுத்த கட்டுரைக்கு