Published:Updated:

தொலைக்காட்சி நிருபர் மீது ராமேஸ்வரம் எஸ்.எஸ்.ஐ. தாக்குதல்!

Vikatan Correspondent
தொலைக்காட்சி நிருபர் மீது ராமேஸ்வரம் எஸ்.எஸ்.ஐ. தாக்குதல்!
தொலைக்காட்சி நிருபர் மீது ராமேஸ்வரம் எஸ்.எஸ்.ஐ. தாக்குதல்!

ராமேஸ்வரம்: போலீஸ் எஸ்.எஸ்.ஐ.யால் தாக்கப்பட்ட தொலைக்காட்சி செய்தியாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராமேஸ்வரம் வீரபத்திரசாமி கோயில் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலியின் மாவட்ட செய்தியாளராக பணியாற்றி வருகிறார். இன்று (20ஆம் தேதி) காலை ராமேஸ்வரம் மேலரத வீதியில் உள்ள தனது உறவினரின் தேனீர் கடையில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த ராமேஸ்வரம் நகர் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் முருகபூபதிக்கும், கார்த்திகேயனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தொலைக்காட்சி நிருபர் மீது ராமேஸ்வரம் எஸ்.எஸ்.ஐ. தாக்குதல்!

இதையடுத்து, கார்த்திகேயனை ஆட்டோவில் வலுக்கட்டாயமாக ஏற்றிய எஸ்.எஸ்.ஐ முருகபூபதி, அவரை நகர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளார். காவல் நிலையத்தில் வைத்து கார்திகேயனை சரமாரியாக தாக்கியுள்ளார். அப்போது கார்த்திகேயன் தன்னை செய்தியாளர் என்று கூறி தன்னிடம் இருந்த அடையாள அட்டையினையும் காட்டியுள்ளார். இதனை கண்டுகொள்ளாத முருகபூபதி, கார்த்திகேயனின் தலையை பிடித்து காவல் நிலைய சுவற்றில் மோதி காயப்படுத்தியுள்ளார். எஸ்.எஸ்.ஐ தன்னை தாக்குவது குறித்து தகவல் தெரிவிக்க கார்த்திகேயன் முயன்ற போது அவரது செல்போனை பறித்து சுவிட்ச் ஆஃப் செய்ததுடன் கார்த்திகேயனிடம் இருந்த பணம் உள்ளிட்ட பொருட்களையும் பறித்துள்ளார்.

கார்த்திகேயன் தாக்கப்பட்ட தகவல் அறிந்த ராமேஸ்வரம் செய்தியாளர்கள் நகர் காவல் நிலையத்திற்கு சென்றனர். அங்கு இருந்த கார்த்திகேயனை மீட்டு ராமேஸ்வரம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். கார்த்திகேயன் தாக்கப்பட்டது குறித்து காவல் துறை உயர் அதிகாரிகளிடம் புகார் செய்த செய்தியாளர்கள், எஸ்.எஸ்.ஐ முருகபூபதி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் உத்தரவினை தொடர்ந்து கூடுதல் எஸ்.பி. வெள்ளைத்துரை ராமேஸ்வரத்திற்கு விரைந்து வந்தார். ராமேஸ்வரம் காவல் நிலையத்தில் கூடியிருந்த செய்தியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அவர், நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார்.

அதன் அடிப்படையில் முதல் கட்ட நடவடிக்கையாக செய்தியாளரை தாக்கிய சிறப்பு எஸ்.ஐ. முருகபூபதியை உடனடியாக பணியிட மாற்றம் செய்வதாகவும், அதனை தொடர்ந்து இலாக பூர்வ நடவடிக்கை எடுப்பதாகவும் செய்தியாளர்களிடம் ஏடி.எஸ்.பி வெள்ளைதுரை தெரிவித்தார். இதையடுத்து செய்தியாளர்கள் காவல் நிலையத்திலிருந்து கலைந்து சென்றனர்.

இதனிடையே எஸ்.எஸ்.ஐ.யால் தாக்கப்பட்ட கார்த்திகேயன் மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன் மீனவர்களை போராட தூண்டியதாக தொலைகாட்சி செய்தியாளர்கள் இருவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். இந்த விவகாரம் தமிழக பத்திரிகையாளர்கள் மத்தியில் அதிர்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, ராமேஸ்வரம் போலீசாரின் நடவடிக்கை குறித்து மாநில காவல் துறை உயர் அதிகாரிகளிடம் செய்தியாளர்கள் நேரில் புகார் செய்தனர். இது தொடர்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை ராமேஸ்வரம் மற்றும் ராமநாதபுரம் செய்தியாளர்கள் சந்தித்து தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு போலீசார் அனுப்பிய நோட்டீஸை மாவட்ட காவல்துறையினர் திரும்ப பெற்றனர். இதனால் போலீசாருக்கும், செய்தியாளர்களுக்கும் இடையே நடந்த பிரச்னை முடிவுக்கு வந்த நிலையில் மீண்டும் செய்தியாளர் ஒருவரை போலீஸ் தாக்கியிருப்பது செய்தியாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

-இரா.மோகன்

படங்கள்:
உ.பாண்டி