Published:Updated:

மதுக்கடையை அகற்றக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்!

விகடன் விமர்சனக்குழு
மதுக்கடையை அகற்றக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்!
மதுக்கடையை அகற்றக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்!

நெல்லை: டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக்கோரி 8 கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை மாவட்டம், கங்கைகொண்டான் அருகேயுள்ள ஆலடிப்பட்டி கிராமத்தில் டாஸ்மாக் மதுபானக் கடை உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் குப்பக்குறிச்சி கிராமத்தில் இருந்த மதுக்கடையை பொதுமக்களின் எதிர்ப்பால் அகற்றிய அதிகாரிகள், ஆலடிப்பட்டி கிராமத்தில் திறந்தனர்.

மதுக்கடையை அகற்றக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்!

இந்நிலையில், இந்தக் கடையால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி குப்பக்குறிச்சி, ஆலடிப்பட்டி, சிங்கிலிப்பட்டி, கங்கைகொண்டான் உள்ளிட்ட 8 கிராமங்களைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவினர் இன்று (13ஆம் தேதி) நெல்லை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அப்போது, ''டாஸ்மாக் மதுபானக் கடையில் மதுவை வாங்கி வந்து, பேருந்து நிலையத்தின் அருகில் அமர்ந்து குடிக்கும் இளைஞர்களும், ஆண்களும் பொது இடத்தில் நிதானம் இழந்து உடைகள் களைந்த நிலையில், அருவருக்கத்தக்க வகையில் விழுந்து கிடக்கின்றனர்.

ஒருசிலர், போதை ஏறிய நிலையில் சாலைகளில் தள்ளாடி நடமாடுகின்றனர். இதனால், பள்ளிக்கு செல்லும் சிறுமிகளும், வேலைக்கு செல்லும் பெண்களும் மிகுந்த அச்சத்துடனேயே சென்று வரவேண்டிய நிலை உள்ளது. அதனால், அந்தப் பகுதியில் உள்ள மதுக்கடையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கலெக்டரிடம் வலியுறுத்தினர்.

இதுகுறித்து, விரைவில் நடவடிக்கை எடுப்பதாக, மகளிர் குழுவினரிடம் கலெக்டர் கருணாகரன் உறுதி அளித்தார்.

ஆண்டனி ராஜ்

படம்: எல். ராஜேந்திரன்