Published:Updated:

நல விரும்பியாகவும் இருப்பேன்: ஆளுநர் ரோசய்யா

Vikatan Correspondent
நல விரும்பியாகவும் இருப்பேன்: ஆளுநர் ரோசய்யா
நல விரும்பியாகவும் இருப்பேன்: ஆளுநர் ரோசய்யா
நல விரும்பியாகவும் இருப்பேன்: ஆளுநர் ரோசய்யா

சென்னை, செப்.01,11: தமிழகத்துக்கு ஒரு ஆலோசகராகவும், நல விரும்பியாகவும் இருப்பேன் என்று புதிய ஆளுநராக பதவி ஏற்ற ரோசய்யா கூறியுள்ளார்

தமிழகத்தின் புதிய ஆளுநராக ரோசய்யா நேற்று பதவி ஏற்றார். அவருக்கு தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவி ஏற்ற ரோசய்யாவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்தார்.

கவர்னர் மாளிகையில் புதிய ஆளுநராக பதவி ஏற்ற ரோசய்யா நிருபர்களுக்கு  பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உங்கள் எல்லோருக்கும் வணக்கம். தமிழக கவர்னராக பொறுப்பேற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். 1953-ம் ஆண்டு தமிழ்நாட்டுக்கும், ஆந்திராவுக்கும் சென்னைதான் தலைநகராக இருந்தது. அப்போதே எனது அரசியல் பிரவேசம் தொடங்கி விட்டது. அன்றிருந்த மூத்த அரசியல் கட்சி தலைவர்கள் எனக்கு ஊக்கம் அளித்தனர்.

தமிழ்நாடு ஒரு பெரிய மாநிலம். இந்த மாநிலத்தின் கவர்னராக பொறுப்பேற்றதை எனது அதிர்ஷ்டம் என்றே நினைக்கிறேன். தமிழ் மக்களுக்கு விநாயகர் சதுர்த்தி பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழக மக்களுக்கு ஆதரவாக இருந்து வருகிறார். நான் எப்போதும் அனைவருக்கும் உதவியாக இருப்பேன்.

நேற்று வரை தீவிர அரசியல்வாதியாக இருந்தேன். இன்று அரசியல்வாதியாக இல்லாமல் தமிழக கவர்னராகிவிட்டேன். தமிழ்நாடு மாநிலத்திற்கு ஒரு ஆலோசகராகவும், நல விரும்பியாகவும் இருப்பேன். அரசியலைமைப்பு சட்டப்படி தமிழக அரசு செயல்படுவதை உறுதி செய்வதே எனது பணியாகும். தமிழக கவர்னர் என்கிற முறையில் எனது கடமையை சட்டப்படி சரிவர செய்வேன்.

1952-ம் ஆண்டு முதல் இன்று வரை பத்திரிகையாளர்களுடன் நட்புடன் இருந்து வருகிறேன். அப்போதெல்லாம் தினமும் 4 முதல் 5 பத்திரிகைகள் வரை படித்தேன். இப்போது தினமும் 10 பத்திரிகைகள் படிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறேன். தமிழ் கொஞ்சம், கொஞ்சம் தெரியும். இனிமேல் தமிழ் கற்றுக் கொள்வேன். அதன் பிறகு உங்களுடன் நன்றாக தமிழ் பேச முயற்சி செய்வேன். தேவைப்படும் போதெல்லாம் உங்களை அழைத்து கலந்துரையாடுவேன். மீண்டும் உங்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு கூறினார்.