Published:Updated:

சேலம்: இளைஞர்கள் மீது போலீஸ் தடியடிக்கு கண்டனம்

சேலம்: இளைஞர்கள் மீது போலீஸ் தடியடிக்கு கண்டனம்
சேலம்: இளைஞர்கள் மீது போலீஸ் தடியடிக்கு கண்டனம்

சென்னை, செப்.16,2011

சேலம்: இளைஞர்கள் மீது போலீஸ் தடியடிக்கு கண்டனம்

சேலம் நகரில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை தொடர்ந்து செயல்படச் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்திய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மீது போலீஸார் இன்று தடியடி சம்பவத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ##~~##

இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், "சேலம்  மாநகரத்தில் கடந்த ஆண்டு திறக்கப்பட்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி அரசு மருத்துவமனை இந்த ஆண்டு ஜூன் வரை செயல்பட்டு வந்தது. தற்போது  செயல்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மக்களுக்கு பயன்படும் வகையில் செயல்படுத்திட வேண்டும் என வலியுறுத்தி பிரச்சாரம் செய்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமான தடியடித் தாக்குதலை நடத்தியுள்ளது.

இந்த தடியடித் தாக்குதலில் பலர் படுகாயமடைந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையின் இந்த தடியடித் தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

செயல்படாமல் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி அரசு மருத்துவமனையை செயல்படுத்திட தமிழக அரசை வலியுறுத்தி  பிரசாரம் - ஆர்ப்பாட்டத்துக்கு  ஒரு வாரத்திற்கு முன்னரே காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திடீரென ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி இல்லை என்று சொல்லி சேலம் பள்ளப்பட்டி காவல்துறை ஆய்வாளர் சந்தோஷ்குமார் தலைமையில் காவல்துறை இந்த தடியடித் தாக்குதலை நடத்தியுள்ளது.

மேலும், கைது செய்யப்பட்டு காவல்நிலையத்திற்குள் கொண்டு சென்ற பின்னரும் வாலிபர் சங்கத்தலைவர்கள் மீது ஆய்வாளர் சந்தோஷ்குமார் தொடர்ந்து தாக்குதலை நடத்தியுள்ளார். அவர்களிடம் இருந்த செல்போன்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து வாலிபர் சங்கத் தலைவர்களை கிரிமினல் குற்றவாளிகளைப்போல் நடத்தியுள்ளார்.

எனவே, வாலிபர்  சங்கத்தினர் மீது ஜனநாயக நடைமுறைகளுக்கு எதிராக அராஜகத் தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், பள்ளப்பட்டி காவல்துறை ஆய்வாளர் சந்தோஷ் குமாரை இடைநீக்கம் செய்து விசாரணை நடத்திட வேண்டுமென்றும், அரசு மருத்துவமனையை சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு பயனளிக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட செய்திட வேண்டுமென்றும்,

கைது செய்யப்பட்டுள்ள வாலிபர் சங்கத்தினரை விடுதலை செய்திட வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது என்று ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.