Published:Updated:

வட்டி விகிதத்தை உயர்த்தியது ரிசர்வ் வங்கி: வீடு, கார் கடன் வாங்கியவர்கள் கலக்கம்!

வட்டி விகிதத்தை உயர்த்தியது ரிசர்வ் வங்கி: வீடு, கார் கடன் வாங்கியவர்கள் கலக்கம்!
வட்டி விகிதத்தை உயர்த்தியது ரிசர்வ் வங்கி: வீடு, கார் கடன் வாங்கியவர்கள் கலக்கம்!

- சி.சரவணன்

செப்.16,2011

வட்டி விகிதத்தை உயர்த்தியது ரிசர்வ் வங்கி: வீடு, கார் கடன் வாங்கியவர்கள் கலக்கம்!

இந்தியாவில் பணவீக்க விகிதம் என்பது பெரும் பிரச்னையாக இருக்கிறது. இதை கட்டுக்குள் கொண்டு வர நாட்டின் ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தை உயர்த்திக் கொண்டே வருகிறது.

கடந்த 18 மாதங்களில் இது வரை ஒரு டஜனுக்கும் மேற்பட்ட தடவை முக்கிய வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டிருக்கின்றன. கடைசியாக இன்று (செப்.16) முக்கிய வட்டி விகிதங்களான ரெப்போ விகிதம் மற்றும் ரிவர்ஸ் ரெப்போ விகிதம் தலா 0.25% அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

இந்த அதிகரிப்பு இன்னும் ஒரு முறை அதிகரிக்கபட இருக்கிறது என்கிறார்கள், நிபுணர்கள்.
காரணம், அண்மையில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் ஒரு முறை உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனால், லாரி உள்ளிட்ட சரக்கு போக்குவரத்து செலவு அதிகரிக்கும். இதனால், காய்கறி தொடங்கி பருப்பு வகைகள் விலை உயரும். விலைவாசி உயரும். கூடவே பணவீக்க விகிதம் உயரும். அப்போது மீண்டும் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் என்கிறார்கள், அந்த நிபுணர்கள். 

இந்த வட்டி விகித உயர்வு, இந்திய தொழில்துறையை பெரிதும் பாத்திருக்கிறது. பல நிறுவனங்கள் விரிவாக்கப்பணியை நிறுத்தி வைத்திருப்பதோடு, பல நிறுவனங்கள் திட்டங்களையே கைவிட்டுள்ளன. இதனால், நாட்டில் உற்பத்தி குறைந்து மேலும் விலை வாசி உயரத்தான் வாய்ப்பு இருக்கிறது.

இந்த வட்டி உயர்வு தனிமனிதர்களை மிகவும் பாதித்துள்ளது. வீட்டுக் கடனில் அசலில் ஒரு லட்ச ரூபாய், வட்டியில் 1.5 லட்ச ரூபாய் வரிச் சலுகை கிடைக்கிறது. கூடவே குடியிருக்க வீடு, சொத்து விலை உயர்வு என கடனில் வீடு வாங்கியவர்கள் இப்போது விழி பிதுங்கி நிற்கிறார்கள்.
கடந்த ஓராண்டு கடத்தில் மட்டும் வீட்டுக் கடன் 2.5% அதிகரித்துள்ளது. அதாவது, சுமார் 8.5 சதவிகித்தில் வீட்டுக் கடன் வாங்கியவர்கள் இப்போது 10.5% கட்டி வருகிறார்கள்.

 

ரெப்போ விகிதம் - ரிசர்வ் வங்கியிடமிருந்து குறுகிய கால அடிப்படையில், வங்கிகள் வாங்கும் கடனுக்கான வட்டி விகிதம்.

ரிவர்ஸ் ரெப்போ விகிதம் - வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி குறுகிய கால அடிப்படையில் பெறும் கடனுக்கு வட்டி விகிதம்

ஃப்ளோட்டிங் விகிதம் - கடன் சந்தையில் வட்டி விகித ஏற்ற இறக்கத்துக்கு ஏற்ப மாறும் வட்டி விகிதம்.

இந்தியாவில் வீட்டுக் கடன் வாங்கியவர்களில் சுமார் 85 சதவிகிதம் பேர் ஃப்ளோட்டிங் என்கிற மாறுபடும் வட்டி விகிதத்தில்தான் வாங்கி இருக்கிறார்கள் என்பதால் பாதிப்பு மிக அதிகமாக இருக்கிறது.
 
வட்டி விகித உயர்வால், அதிகமானவர்கள் அவர்களின் பணிக் காலத்துக்கு பிறகும் வீட்டுக் கடனை கட்டும் நிலை உருவாகி இருக்கிறது.

ஒருவர் ஆண்டுக்கு 9 சதவிகித வட்டியில் ரூ.50 லட்சம் வீட்டுக் கடனை 20 ஆண்டுகளில் திரும்ப செலுத்தும் விதமாக வாங்கி இருக்கிறார் என்று வைத்துக் கொள்வொம். அவர் செலுத்த வேண்டிய மாத தவணை தொகை ரூ.44,985. தற்போது வட்டி விகிதம் 10.5% ஐ தாண்டி இருக்கிறது. எனவே அவர் செலுத்த வேண்டிய மாதத் தவணை ரூ.49,920 ஆக உயர்ந்துவிடும். மாத தவணை தொகையை ரூ.44,985 ஆக அப்படியே வைத்து இருந்தால், அவர் கடனை திரும்ப செலுத்த வேண்டிய காலம் 20 ஆண்டுகளிலிருந்து 34.5 ஆண்டுகளாக உயர்ந்துவிடும். இது கிட்டத்தட்ட அவரது பணிக் காலத்தை தாண்டிவிடுவதாக இருக்கும்.

இப்போது மீண்டும் வட்டி உயர்த்தப்பட்டிருப்பதால் அவர்கள் ஆயுளுக்கும் வீட்டுக் கடனை கட்டிக் கொண்டுதான் இருக்க வேண்டும் போலிருக்கிறது. இதிலிருந்து தப்பிக்க கையில் பணம் இருக்கும்பட்சத்தில் கட்டி அசலை குறைத்துக் கொள்வதுதான் புத்திதாலிதனம். அல்லது மாதத் தவணையை எவ்வளவு அதிகமாக கட்ட முடியுமோ அதை செய்வது நல்லது.

இதே போல், கார் கடன் வாங்கியவர்களும் சிக்கலில் இருக்கிறார்கள். ஓராண்டுக்கு முன் 10-12% ஆக இருந்தது. இப்போது 11.5-13% ஆக அதிகரித்து இருக்கிறது. இதனால், சுமார் மூன்றாண்டுகளில் முடிய வேண்டிய கடனை கூடுதலாக 8-10 மாதங்கள் கட்ட வேண்டி வரும். இந்த அளவுக்கு கூடுதல் தொகை இருந்தால்தான் நிலைமையை சமாளிக்க முடியும். இல்லை என்றால் பிரச்னைதான்.