Published:Updated:

ஹரியானாவில் தீவிரவாத சதிதிட்டம் முறியடிப்பு

Vikatan Correspondent

அம்பாலா, அக்.13,2011

ஹரியானா மாநிலம் அம்பாலாவில் ரயில் நிலையத்தை தகர்க்க தீவிரவாதிகள் சதிதிட்டம் தீட்டியதை போலீஸார் முறியடித்துள்ளனர்.

அம்பாலா கண்டோன்மென்ட் பகுதியின் ரயில் நிலையம் அருகே  வெடிபொருட்களோடு கார் ஒன்று நிறுத்தப்பட்டிருப்பதாக டெல்லி போலீஸுக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து டெல்லி மற்றும் ஹரியானா மாநில போலீஸார் நேற்றிரவு அந்த இடத்துக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, ரயில் நிலையம் அருகே நீல நிற கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அந்த காரை கண்காணித்த போலீஸார் பின்னர் அதனை நெருங்கி சோதனை செய்தனர்.

அப்போது, காரில் இரண்டு டைமர் சாதனங்கள்,  வெடிமருந்து குச்சிகள் மற்றும் இரண்டு பைகளில்  5 கிலோவுக்கும் மேலான எடைகொண்ட வெடிப்பொருட்கள் இருப்பதை பார்த்தனர். இதனையடுத்து குண்டுவெடிப்பு நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குண்டுவெடிப்பு நிபுணர்கள் அந்த பொருட்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர்.

இதனையடுத்து, கார் குண்டு மூலம் ரயில் நிலையத்தை தகர்க்க தீட்டப்பட்டிருந்த சதி திட்டம் முறியடிக்கப்பட்டது. காரில் ஒரு ஸ்வீட் பாக்ஸ் இருந்தது. அது ஜம்மு - காஷ்மீரில் வாங்கப்பட்டிருந்தது. மேலும் காரின் எண் போலியானது என்று தெரிய வந்துள்ளது.

டெல்லி குண்டுவெடிப்புக்கும், இந்த சதி திட்டத்துக்கும் தொடர்பு இருக்குமா என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைப்பற்றப்பட்ட வெடிப்பொருட்கள் சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த கார் குண்டுகள் டெல்லி நகரை தகர்க்க பயன்படுத்தப்பட இருந்தனவா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சம்பவம் நடைபெற்ற இடம் கண்டோன்மென்ட் பகுதி என்பதால் ராணுவத்துக்கு எதிராக தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியிருந்தனரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.