Published:Updated:

'இது இன்னொருவித யாழ் நூலக எரிப்பன்றி வேறில்லை!'

'இது இன்னொருவித யாழ் நூலக எரிப்பன்றி வேறில்லை!'
'இது இன்னொருவித யாழ் நூலக எரிப்பன்றி வேறில்லை!'

'இது இன்னொருவித யாழ் நூலக எரிப்பன்றி வேறில்லை!'

- நா.கதிர்வேலன், ரீ.சிவகுமார், கவின் மலர்

'இது இன்னொருவித யாழ் நூலக எரிப்பன்றி வேறில்லை!'

ருணாநிதி செய்தது அத்தனையையும் மாற்ற வேண்டும் என்று முடிவெடுத்தால்... அவர் செய்த நல்லதும் தப்பாது அல்லவா? அப்படித்தான் சென்னை, கோட்டூர்புரத்தில் செயல் பட்டு வந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தையும் சிதைக்கஆரம்பித்துவிட்டார் முதல்வர் ஜெயலலிதா. நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகம் என்ற நெரிசல் மிகுந்த இடத்துக்கு அது மாற்றப்படும். கோட்டூர்புரம் நூலகம் இருந்த கட்டடத்தில் குழந்தைகள் நல மருத்துவமனை அமைக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்து இருக்கிறார். அரசியல்வாதிகளை விட, இதில் கருத்துச் சொல்ல வேண்டியவர்கள் எழுத்தாளர்கள்தான். அவர்களையே கேட்டோம்!

'இது இன்னொருவித யாழ் நூலக எரிப்பன்றி வேறில்லை!'

சா.கந்தசாமி: சிங்கப்பூரில் உள்ள தேசிய நூலகத்தை மாதிரியாகக் கொண்டு கட்டப்பட்டது இந்த நூலகம். நான் சிங்கப்பூருக்குச் சென்றிருந்தபோது, 'இப்படி தமிழ்நாட்டில் ஒரு நூலகம் இல்லையே’ என்று ஏங்கியிருக்கிறேன். அண்ணா நூலகம் தமிழகத்தின் கனவு. எங்கே காற்று வேண்டும், எங்கே வெளிச்சம் வேண்டும் என்று பார்த்துப் பார்த்து, படிப்பதற்கும் எழுதுவதற்கும் என்றே வடிவமைக்கப்பட்ட ஒரு கட்டடத்தை, எப்படி மருத்துவமனையாக்க முடியும்? மருத்துவம் அவசியம்தான். ஆனால், அது சென்னைக்கு மட்டும்தானா? வேறு எந்த நகரத்திலும் குழந்தைகள் இல்லையா?

பொன்னீலன்: மருத்துவமனை கட்ட இடமா இல்லை? இந்த அரசுக்குக் கொஞ்சமும் சகிப்புத்தன்மை இல்லை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது இந்த நடவடிக்கை. இது அறிவுல கத்துக்கு விடப்பட்டுள்ள சவால். எழுத்தாளர்களை இந்த அரசு அவமானப்படுத்தியுள்ளது. அறிவுலகத்தின் மீதான ஒடுக்குமுறை என்பது சமூக ஒடுக்குமுறைக்கான ஒத்திகை. இது மிகவும் வருத்தம் தரக்கூடியது, சகிக்க முடியாதது.

தொ.பரமசிவம்: தமிழ் அடையாளத்தை அழிப்பதே யாழ்ப்பாண நூலகத்தை அழித்ததன் நோக்கம். அண்ணா நூலகக் கட்டடத்தை மருத்துவமனை ஆக்குவதும், தமிழ் அடையாளத்தை அழிக்கும் செயல்தான்!

அசோகமித்திரன்: நன்றாகச் செயல்படும் ஒரு அமைப்பை கலைக்கக் கூடாது. படிப்பதற்குரிய உற்சாகமான ஒரு சூழலைத் தரவேண்டும் என்பதை மனதில் வைத்துக் கட்டப்பட்ட நூலகம் அது. பராமரிப் பில்லாத ஒரு அரசு மருத்துவமனையாக்குவதை விட இந்த நூல கத்தை நூலகமாகவே வைத்துக் கொள்ளலாமே.

மேலாண்மை பொன்னுசாமி: முந்தைய அரசின் சாதனைகளை முறியடிப்பது என்பது சரி. ஆனால், அவற்றை ஒழித்துக் கட்டக்கூடாது. இது மிகவும் தவறான அணுகுமுறை. ஷாஜஹானுக்குப் பிந்தைய மன்னன் அப்படி நினைத்திருந்தால் இன்றைக்கு தாஜ்மஹால் இருந்திருக்காது. ராஜராஜசோழனுக்கு அடுத்து வந்த மன்னன் நினைத்திருந்தால்... தஞ்சை பெரிய கோயில் இருந்திருக்காது. கரிகால சோழனைத் தொடர்ந்தவன் அப்படி நினைத்திருந்தால் கல்லணை இருந்திருக்காது.

'இது இன்னொருவித யாழ் நூலக எரிப்பன்றி வேறில்லை!'

கீரனூர் ஜாகீர் ராஜா:  நூலகம் திறக்கப்படுகிறபோது, 'ஒரு சிறைச் சாலையின் கதவு மூடப்படுகிறது’ என்று சொல்வார்கள். ஆனால், தமிழகத்தில் நடக்கிற கதை வேறு. ஏற்கெனவே, வாசிப்பில் பின்தங்கி உள்ள சமூகமாகவே தமிழ் சமூகம் மதிக்கப்படுகிறது. அரசின் இதுபோன்ற அதிரடியான செயல்பாடுகள் அதற்கு ஒரு மறைமுகக் காரணியாக அமைந்துவிடக் கூடாது.

சல்மா: மரணப்படுக்கையில் இருந்தபோதுகூட, அண்ணா படிப் பதில் ஈடுபாட்டோடு இருந்தார் என்பது வரலாறு. அப்படிப்பட்ட வரின் பெயரில் அமைந்துள்ள நூலகத்தை இடமாறுதல் செய்வது அநீதியானது. அரசியல் விரோதம் அறிவை விருத்தி செய்யும் விஷயத்தில் தலையிடக் கூடாது.

வண்ணதாசன்: இது இன்னொருவித 'யாழ் நூலக’ எரிப்பன்றி வேறில்லை. உயர் மருத்துவம் உடனடி யாகத் தேவைப்படுவது குழந்தைகளுக்கு அல்ல; இந்த அரசுக்குத்தான். அசுரப் பெரும்பான்மை என்பது, சொல்லுக்கு சொல் உணரப்படுகிறது; பிணம் தின்னல் தொடர்கிறது.

கலாப்ரியா: நூலகத்தை மாற்றிவிட்டு குழந்தைகள் மருத்துவமனை அமைப்பதை 'கெட்டிக்காரத்தன மான’ செயலாக நினைக்கலாம் முதல்வர். ஆனால், நல்ல செயல் இல்லை. கெட்டிக்காரராக இருப்பது சுலபம், நல்லவராக இருப்பது கடினம். இது தப்பு, தவறு இல்லை. ''தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும். தப்பு செய்தவன் வருந்தியாகணும்..'' நான் சொல்லவில்லை எம்.ஜி.ஆர். சொன்னது.

சிவகாமி: நூலகமாக இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு கட்டடத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டிய நிர்பந்தம் இப்போது அரசுக்கு என்ன? கருணாநிதி காலத்தில் கட்டப்பட்டது என்கிற ஒரு காரணத்தைத் தவிர வேறெந்தக் காரணத்தையாவது அரசால் சொல்ல முடியுமா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசின் முதல்வர் இந்தள வுக்கு அராஜகமாகவும், தான் தோன்றித்தனமாகவும் நடந்து கொள்வதைத் தடுப்பதற்கு என்னதான் வழி?

'இது இன்னொருவித யாழ் நூலக எரிப்பன்றி வேறில்லை!'

நாஞ்சில் நாடன்: நூலகம் சமுதாயத்தின் அத்தியா வசியமான ஓர் உறுப்பு. நம் மக்களுக்கு அதை பயன் படுத்தத் தெரியவில்லை என்பது உண்மை. அதனால் வாசிப்புப் பழக்கத்தை அதிக ரிக்க என்ன செய்யலாம் என்றுதான் ஒரு அரசாங்கம் யோசிக்கவேண்டும். அதை விட்டு, நூலகத்தை மாற்ற அரசு நடவடிக்கை எடுப்பது ஒரு சமூக அவலம்

ஆ.சிவசுப்பிரமணியன்: நூலகம், மருத்துவமனை இரண்டின் உள்கட்டமைப்பு களும் வெவ்வேறு மாதிரி யானவை. ஒரு நூலகம் எளிதில் சென்றடையக்கூடிய இடத்தில் இருந்தால் மட்டும் போதாது, அங்கு அமைதியான சூழல் வேண்டும். மேலும் புத்தகங்கள் என்பவை சிமென்ட் மூட்டைகளோ, வெங்காய மூட்டைகளோ அல்ல... நினைத்தால் இடம் மாற்றி விடுவதற்கு. எல்லா விஷயங்களையும் அரசியல் நோக்கத்துடனேயே பார்ப்பதும் அணுகுவதும் ஆபத்தானவை.

சு.வெங்கடேசன்: இது முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்பு உணர்வில் எடுக்கப்பட்ட முடிவு. சாதாரண மனிதர்களுக்கு இருக்கும் சகிப்புத்தன்மை கூட ஆட்சியாளர்களுக்கு இல்லாதது வருந்தத்தக்கது. டி.பி.ஐ. வளாகத்தில் இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்குக் கூட போதுமான இடங்கள் இல்லை. எப்படி லட்சக் கணக்கான புத்தகங்களைப் பராமரிக்கப் போகிறார்கள்?

'இது இன்னொருவித யாழ் நூலக எரிப்பன்றி வேறில்லை!'

வ.கீதா:மன்னர் ஆட்சிக் காலங்களில் கூட, ஒரு மன்னன் வெற்றி பெற்ற பிறகு, பழைய அரசனின் கட்டடங்களை உடைக்கவில்லை. ஆனால், ஜனநாயகம் என்ற பெயரில் ஜெயலலிதா, முடியாட்சியை விட மோசமாக நடந்துகொள் கிறார்.

அழகிய பெரியவன்: ஏற்கெனவே தமிழ்ச்சூழலில் வாசிப்பு குறைந்திருக்கிறது என்கிற ஆதங்கம் உண்டு. மொழி, கலை, இலக்கியம், பண்பாடு சார்ந்த குறைபாடுகளுக்கு ஒரே மருந்து புத்தகங்கள்தான். ஆனால், தான் ஆட்சி செய்யும் மக்கள் அறிவுமயப் படுத்தப்பட்ட சமூகமாக மாறி விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறது அ.தி.மு.க அரசு. இருக்கிற மருத்துவமனைகளையே இன்னும் சிறப் பாகப் பராமரிக்காத தமிழக அரசு, மேலும் மருத்துவமனைகளை உருவாக்கப் போவதாகச் சொல்வது அரசியல் காழ்ப்பு உணர்ச்சியுடன் கூடிய அபத்தம்.

புனிதபாண்டியன்: சட்டசபைக் கட்டடத்தையும் தலைமைச் செயலகத்தையும் தன் ஆணவப் போக்கினால் மாற்றினார் ஜெயலலிதா. ஆனால், அப்போது 'இது ஏதோ கருணாநிதியின் சொந்தப் பிரச்னை’ என்பதைப் போலப் பலரும் மௌனமாக இருந்ததால், இப்போது அண்ணா நூற்றாண்டு நூலகத்திலும் கை வைக்கிறார். சமச்சீர்க்கல்வி, அறிவை விரிவு செய்யும் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம், தை முதல்நாள் தமிழ்ப்புத்தாண்டை மாற்றுவது போன்ற தமிழர்களின் அறிவு மற்றும் பண்பாடு சார்ந்த விஷயங்களைச் சீர்குலைப்பது ஆகியவை ஜெயலலிதாவின் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகள்தான்!

- ஜூனியர் விகடன்

அடுத்த கட்டுரைக்கு