Published:Updated:

உ.பி.யில் நடப்பது மாபியா ஆட்சி: ராகுல் சாடல்

உ.பி.யில் நடப்பது மாபியா ஆட்சி: ராகுல் சாடல்
உ.பி.யில் நடப்பது மாபியா ஆட்சி: ராகுல் சாடல்
உ.பி.யில் நடப்பது மாபியா ஆட்சி: ராகுல் சாடல்

புல்பூர்: உத்தர பிரதேசத்தில் 'மாபியா' ஆட்சி நடந்து வருவதாக காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் காந்தி கடுமையான தாக்கிப் பேசினார்.

அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள உத்தர பிரதேசத்தில் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

மறைந்த பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்த நாளான குழந்தைகள் தினத்தை குறிக்கும் வகையில், உத்தர பிரதேசத்தில் நேருவின் தொகுதியான புல்பூரில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் ராகுல் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர், பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும் முதல்வருமான மாயாவதிக்கு எதிராக ராகுல் கடும் தாக்குதல் தொடுத்தார்.

ராகுல் காந்தி பேசுகையில், "உத்தர பிரதேசத்தில் எந்தவித வளர்ச்சியும் இல்லை. எனது 7 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் நான் இந்த மாநிலத்தில் இருந்துதான் அதிகமாக கற்றுக்கொண்டேன்.

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்காக ஒதுக்கும் கோடிக்கணக்கான ரூபாய்களை மாயாவதி அரசு வீணாக்கி வருகிறது. பந்தல்காண்ட் பகுதியில் சிறப்பு ஒதுக்கீடு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ரூ.7 ஆயிரம் கோடி ஏழை மக்களைப் போய்ச் சேரவில்லை.

கிராமப்புற வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ஒவ்வொருவருக்கும் வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். ஆனால், இங்கு யாருக்கும் வேலை வழங்கப்படவில்லை. பட்டா பார்சல் பகுதியில் விவசாயிகள் போலீசாரால் சுடப்படுகிறார்கள். விவசாயிகளின் நிலம் பறிக்கப்பட்டதுடன் அந்த பகுதியில் நடந்த போராட்டத்தின்போது பெண்கள் தாக்கப்பட்டனர்.

உத்தர பிரதேசத்தில் எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்ற நிலை உள்ளது. போலீசில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்குக் கூட லஞ்சம் கொடுக்க வேண்டியது உள்ளது. அலிகாரில் நெசவாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.3 ஆயிரம் கோடியும் அவர்களைப் போய் சேரவில்லை. அதைத் தொடர்ந்து வங்கிக் கணக்குகள் மூலம் அந்த நிதி அவர்களைப்போய்ச் சேருவதற்கு ஏற்பாடு செய்தோம்.

மதிய உணவு திட்டம் மற்றும் தேசிய கிராமப்புற சுகாதார திட்டத்திலும் பெரிய அளவில் ஊழல் நடந்து உள்ளது. உணவு பாதுகாப்பு சட்டம், ஊழலை ஒழிப்பதற்காக லோக்பால் சட்டம் ஆகிய மசோதாக்களை வருகிற பாராளுமன்ற குளிர் கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய இருக்கிறோம்.

மாயாவதி கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்கள் 'மாபியா' குழுவைப்போல் செயல்பட்டு வருகிறார்கள். அந்த கட்சியின் எம்.பி.க்களும் இந்த பிரிவில்தான் உள்ளனர்.

உத்தர பிரதேசம் வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைக்க வேண்டும் என்றால் உங்கள் மன நிலையில், குறிப்பாக இளைஞர்கள் புதிய மாற்றத்தை கொண்டு வர வாக்களிக்க வேண்டும்," என்றார் ராகுல் காந்தி.