Published:Updated:

புதிய அணையின் நிர்வாகத்துக்கான கூட்டுக் குழுவுக்கு கேரளா தயார்: உம்மன் சாண்டி

Vikatan Correspondent
புதிய அணையின் நிர்வாகத்துக்கான கூட்டுக் குழுவுக்கு கேரளா தயார்: உம்மன் சாண்டி
புதிய அணையின் நிர்வாகத்துக்கான கூட்டுக் குழுவுக்கு கேரளா தயார்: உம்மன் சாண்டி
புதிய அணையின் நிர்வாகத்துக்கான கூட்டுக் குழுவுக்கு கேரளா தயார்: உம்மன் சாண்டி

திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறில் கட்டப்பட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ள புதிய அணையை நிர்வகிப்பதற்கான கூட்டுக் குழுவுக்கு கேரள அரசு தயாராக இருப்பதாக, அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்தார்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிபதி ஆனந்த் தலைமையிலான அதிகாரமளிக்கப்பட்ட ஐவர் குழுவின் அண்மைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக, திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் இன்று பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், "சிறுவாணி நீர் பங்கீடு ஒப்பந்தத்தைப் போலவே, முல்லைப் பெரியாறில் புதிய அணையின் நிர்வாகத்துக்கு தமிழகம், கேரளா மற்றும் மத்திய அரசு ஆகிய மூன்று தரப்புகளையும் உள்ளடக்கிய கூட்டுக் குழு அமைக்கவும், அதன்படி செயல்படவும் தயாராக இருக்கிறோம். இந்த விஷயத்தில் வெளிப்படைத் தன்மையுடன் இருக்கிறோம்," என்றார் உம்மன் சாண்டி.

புதிய அணையில் இருந்து நீரை கேரளா எடுத்துக்கொள்ள முயற்சிக்காது. தமிழ்நாட்டுக்கு முழு தண்ணீரை வழங்க கேரள அரசு தயாராக இருக்கிறது.

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் வாழ்பவர்களுக்கு ஒவ்வொரு கணமும் பாதுகாப்பு முக்கியம். அதேவேளையில், அண்டை மாநில மக்களுக்கு தண்ணீர் வேண்டும். நாங்கள் தமிழத்துடன் விவாதிக்க திறந்த மனதுடன் இருக்கிறோம். இதில் ஏதாவது பிரச்னை இருந்தால், உச்ச நீதிமன்றத்தை தமிழகம் நாடலாம்," என்றார் உம்மன் சாண்டி.

புதிய அணை கட்டப்பட்டால் தண்ணீர் பங்கீடு, பாதுகாப்பு ஏற்பாடு, அணை நிர்வாகம் செய்வது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக இரு மாநிலங்களும் தங்களது பதில்களை வெள்ளிக்கிழமைக்குள் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதி ஆனந்த் தலைமையிலான குழு உத்தரவிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய கேரள முதல்வர் உம்மன் சாண்டி, "முல்லைப் பெரியாறில் புதிய அணை தேவை என்ற கேரளாவின் கோரிக்கை, முதல் முறையாக தேசிய அளவில் ஏற்கப்பட்டுள்ளது," என்றார் அவர்.