Published:Updated:

நீதிமன்ற உத்தரவைமீறி அமைச்சர் சரோஜா கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பிளக்ஸ் - கண்டுகொள்ளாத போலீஸ்!

அமைச்சர் வி.சரோஜாவை வரவேற்று சுமார் 10 அடி உயரமும் 15 அடி நீளமும் கொண்ட பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிளக்ஸ் போர்டு
பிளக்ஸ் போர்டு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தாலிக்குத் தங்கம் மற்றும் திருமண உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத் திட்டம் வழங்கும் நிகழ்ச்சி சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் வி.சரோஜா தலைமையில் நடந்தது. இதில் 3500 பயனாளிகளுக்குத் தாலிக்குத் தங்கம் மற்றும் உதவித்தொகை வழங்கப்பட்டது.

நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் சரோஜா
நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் சரோஜா

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த அமைச்சர் சரோஜாவை வரவேற்று கே.பி.ரோடு முதல் நிகழ்ச்சி நடைபெற்ற திருமண மண்டபம் வரை பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டிருந்தன.

சென்னையில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் போர்டு காற்றில் பறந்து விழுந்ததில் சுபஸ்ரீ என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து பிளக்ஸ் பேனர்கள் வைக்கமாட்டோம் என அரசியல் கட்சியினர் அறிக்கை விட்டனர்.

அமைச்சர் சரோஜாவை வரவேற்று வைக்கப்பட்ட பிளக்ஸ் போர்டு
அமைச்சர் சரோஜாவை வரவேற்று வைக்கப்பட்ட பிளக்ஸ் போர்டு

அதுமட்டுமல்லாது விதிகளை மீறி பேனர் வைப்பவர்கள் மீது அந்தந்த மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாகர்கோவிலில் தாலிக்குத் தங்கம் மற்றும் திருமண உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அமைச்சர் வி.சரோஜாவை வரவேற்று சுமார் 10 அடி உயரமும் 15 அடி நீளமும் கொண்ட பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை அதிகாரிகள் அந்த நிகழ்ச்சிக்குப் பாதுகாப்பு அளித்தபடி கண்டும் காணாமல் இருந்ததுதான் வேதனை.