Published:Updated:

`இடுகாட்டைக்கூட விட்டு வைக்க மாட்டீர்களா?!’- மயிலாடுதுறையில் ஆக்கிரமிப்பால் கொதித்த கிராமத்தினர்

காலப்போக்கில் பல குடும்பத்தினர் ஊரைக் காலி செய்துவிட்டு நகரத்தில் குடிபுகுந்தனர். எஞ்சிய 200 குடும்பங்கள் மட்டும் அங்கே வாழ்ந்து வருகின்றனர்.

இடுகாட்டு
இடுகாட்டு

கிராம மக்கள் பயன்படுத்தும் இடுகாட்டு இடத்தை தரைமட்டமாக்கிய பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இடுகாட்டு
இடுகாட்டு

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கங்கணம்புத்தூர் பகுதியில் உள்ள துணை மின்நிலையம் அருகில் சுமார் 24,000 சதுர அடியில் மயானம் என்று அரசுப் பதிவில் பொது சுடுகாடு ஒன்று உள்ளது. இதை இப்பகுதி மக்கள் காலம் காலமாக இறந்தவர்களை எரிப்பதற்கோ அல்லது புதைப்பதற்கோ உபயோகப்படுத்தி வருகின்றனர். கங்கணம்புத்தூர் மேலத்தெரு, வெள்ளாளத்தெரு, குடியானத்தெரு போன்றவற்றில் 500-க்கும் மேற்பட்ட பல்வேறு பிரிவைச் சேர்ந்த குடும்பத்தினர் வாழ்ந்து வந்தனர். காலப்போக்கில் பல குடும்பத்தினர் ஊரைக் காலி செய்துவிட்டு நகரத்தில் குடிபுகுந்தனர். எஞ்சிய 200 குடும்பங்கள் மட்டும் அங்கே வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், கங்கணம்புத்தூரில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மயானத்தை ஒட்டி தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்று கட்டப்பட்டது. மயானத்தை ஒட்டி பள்ளிக் கட்டடம் கட்டப்பட்டதால் பள்ளிக்கூடம் செல்பவர்களுக்கு மயானத்தின் வழியாகச் செல்ல கிராமத்தினர் அனுமதித்திருந்தனர். மயானத்தை ஒட்டிச்செல்லும் கணபதி ஆற்றின் மீது பாலம் கட்டும்போது மயானத்தின் நடுவே சாலை அமைக்கவும் இடம் அளித்துள்ளனர். இதற்கிடையில், கடந்த வாரம் கங்கணம்புத்தூர் முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் கலியமூர்த்தி மனைவி வைரத்தம்மாள் என்பவர் இறந்துவிட்டார் அவரது உடலை மயானத்தின் மேற்புறத்தில் வைத்து தகனம் செய்துள்ளனர்.

கிராமத்தினர்
கிராமத்தினர்

இந்த நிலையில், பள்ளி வளாகத்தில் வரும் 25 -ம் தேதி நடைபெறப்போகும் விழாவுக்காக பள்ளி வளாகத்தின் சுவரையொட்டி வாகனங்கள் நிறுத்துவதற்காக ஒட்டுமொத்த மயானத்தையும் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் தரைமட்டமாக்கியுள்ளதாக கிராமத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். சமீபத்தில் அடக்கம் செய்யப்பட்ட வைரத்தம்மாள் உடல் எரியூட்டப்பட்ட இடத்தை மட்டும் விட்டுள்ளனர். இதையறிந்த கிராம மக்கள் இன்று ஒன்றுதிரண்டு பள்ளி வளாகத்தின் முன்பாக கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்செய்தியை கேள்விப்பட்ட மயிலாடுதுறை மண்டல துணை வட்டாட்சியர் வைத்தியநாதன், காவல்துறை ஆய்வாளர் சிங்காரவேல் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இறுதியில் ஓரிரு தினங்களில் மயான இடத்தை அளந்து அதற்கான எல்லைக் கற்கள் போட்டு தரப்படும் என்றும், ஆக்ரமிப்பு இருந்தால் அவற்றை மீட்டுத்தரப்படும் என்றும் அதிகாரிகள் உத்தரவாதம் அளித்ததும் அப்பகுதி மக்கள் அதை ஏற்றுக்கொண்டு போராட்டத்தை விலக்கிக்கொண்டனர்.