Published:Updated:

`தனித் தொகுதியாக ஒதுக்கியும் பலனில்லை!’- பா.ம.க மாநில இளைஞரணி துணைத் தலைவரால் கலங்கிய வேட்பாளர்கள்

பழனியம்மாள் வெற்றி பெற்றதை தான் வெற்றி பெற்றதைப் போல வாக்கு எண்ணும் மையத்திலிருந்து மேள வாத்தியத்தோடு மாலையும் கழுத்துமாகப் போகிறார் தங்கராஜ்.

``ஊரக உள்ளாட்சித் தேர்தலில் எங்க ஊராட்சியைத் தனித் தொகுதியாக ஒதுக்கியதில் எந்த பிரயோஜனமும் இல்லை. பட்டியலின மக்கள் நாங்கள் ஏமாளிகளாக நின்று வேடிக்கை பார்க்கிறோம்'' என்று சேலம் பாகல்பட்டி ஊராட்சித் தலைவருக்குப் போட்டியிட்ட 7 வேட்பாளர்களில் 5 வேட்பாளர்கள் சேலம் கலெக்டரைச் சந்தித்து மனு கொடுத்திருக்கிறார்கள்.

வேட்பாளர்கள்
வேட்பாளர்கள்
எம்.விஜயகுமார்

இதுபற்றி கலெக்டரிடம் மனு கொடுத்த தனம் வெங்கடேஷன், ``1995ம் வருடம் கட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நான் ஒன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அந்தப் பள்ளியில் பட்டியலினச் சிறுமிகள் பொதுக் குடத்தில் தண்ணீர் குடிக்கக் கூடாது. கைகளை ஒட்டிக் குடிக்க வேண்டும். தண்ணீர் தாகம் தாங்க முடியாமல் பொதுக் குடத்தில் தண்ணீர் குடித்து விட்டேன். அதனால் தலைமை ஆசிரியர் சுப்பிரமணி என்னை மூங்கில் தடியில் அடித்ததில் கண்ணில்பட்டு ஒரு கண் பார்வை இழந்தேன். அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் எனக்கு உதவியதோடு ஊக்கமும் கொடுத்தார்.

நான் ஒன்றாம் வகுப்பு படிக்கும் போது இருந்த தீண்டாமை இன்றும் நவீன முறையில் இருந்துகொண்டே இருக்கிறது. எங்களுடைய பாகல்பட்டி ஊராட்சித் தலைவராக கடந்த முறைப் பா.ம.க மாநில இளைஞரணி துணைத் தலைவர் தங்கராஜ் இருந்தார். இந்த முறை தனித் தொகுதியாக அறிவிக்கப்பட்டதால் பட்டியலினத்தைச் சேர்ந்த நான், அம்சவேணி, கமலா, அங்கம்மாள், வளர்மதி போட்டியிட்டோம்.

நோட்டீஸ்
நோட்டீஸ்
எம். விஜயகுமார்

தங்கராஜும், பா.ம.க கட்சியின் விசுவாசியான ஊராட்சி மன்றச் செயலாளர் பாண்டியனும் சேர்ந்து பட்டியலினத்தைச் சேர்ந்த, மற்ற மக்கள் யாரும் பாகல்பட்டி ஊராட்சி மன்றத் தலைவராக வந்து விடக் கூடாது என்பதற்காக தங்கராஜ் தோட்டத்தில் பணிசெய்யும் படிப்பறிவு இல்லாத 65 வயது ஆதரவற்ற மூதாட்டி பழனியம்மாளை தனக்கு பினாமியாக நிற்க வைத்தார். பழனியம்மாள் அய்யம்பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர். ஊராட்சி செயலாளர் பாண்டியனின் உதவியோடு பழனியம்மாளின் முகவரியை பாகல்பட்டி ஊராட்சிக்கு மாற்றி வாக்காளர் அடையாள அட்டை பெற்று தேர்தலில் நிற்க வைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பழனியம்மாள் வெற்றி பெற்றதை தான் வெற்றி பெற்றதைப் போல வாக்கு எண்ணும் மையத்திலிருந்து மேள வாத்தியத்தோடு மாலையும் கழுத்துமாகப் போகிறார் தங்கராஜ். பழனியம்மாள் வெற்றி, தோல்வி தெரியாமல் அப்பாவியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். இதுதான் பட்டியலின மக்களின் நிலைமையாக இருக்கிறது. வன்கொடுமை சட்டத்தை நீக்க வேண்டும் எனப் பேசும் பா.ம.க தலைவர் ராமதாஸ் தன் கட்சியில் மாநிலப் பொறுப்பில் உள்ள ஒருவர் பட்டியலின மக்களின் உரிமையைப் பறிக்கக் கூடாது என்று சொல்லித் தர வேண்டும். மாவட்ட ஆட்சியர் நேரடியாகப் பார்வையிட்டு பட்டியலின உரிமைகளைப் பறித்த தங்கராஜைத் தண்டிப்பதோடு இந்த ஊராட்சியில் மறு தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

தனம்
தனம்
எம். விஜயகுமார்

இதுபற்றி பா.ம.க மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தங்கராஜ், ``எங்க ஊராட்சி கடந்த முறை பெண்கள் தொகுதியாக இருந்தது. அதனால் எங்கம்மாவை நிற்க வைத்து வெற்றி பெறச் செய்தேன். இந்த முறை எங்க ஊராட்சி தனித் தொகுதியாக மாறியதால் என் தோட்டத்தில் வேலை செய்யும் பழனியம்மாளை நிறுத்தினேன். அந்தம்மாவிற்குக் குடும்பம், கணவர், குழந்தைகள் யாரும் இல்லை. அதனால் ஆதரவு கொடுத்து வெற்றி பெறச் செய்தேன். பாகல்பட்டி ஊராட்சியில்தான் பழனியம்மாள் பிறந்து வளர்ந்தது'' என்றார்.

இதுபற்றி பாகல்பட்டி ஊராட்சி செயலாளர் பாண்டியன், ``பழனியம்மா அய்யம்பெருமாள்பட்டியில் இருந்தார்கள். 4 ஆண்டுகளுக்கு முன்பு ஓட்டுரிமையை இந்த ஊராட்சிக்கு மாற்றிட்டு வந்து விட்டார் மற்றபடி நான் யாருடைய விசுவாசியும் இல்லை'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு