Published:Updated:

`ரூ.10 லட்சம் பேரம்... அ.ம.மு.க ஆதரவு யாருக்கு?' - தேனி ஒன்றியங்களைக் கைப்பற்றுமா அ.தி.மு.க?

தேனியில் வென்றவர்கள்
தேனியில் வென்றவர்கள்

அ.தி.மு.க, தி.மு.க ஆகிய கட்சிகள் சுயேச்சைகள் மற்றும் அ.ம.மு.க கவுன்சிலர்களை வளைப்பதில் தீவிரமாக உள்ளனர்.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்து முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றியக் கவுன்சிலர்கள் பதவியேற்க உள்ளனர். இந்நிலையில், வரும் 11-ம் தேதி நடைபெற உள்ள ஊராட்சி ஒன்றியத் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கான தேர்தலில் வெற்றிபெற, எதிரணியில் உள்ள ஒன்றியக் கவுன்சிலர்களைத் தங்கள் பக்கம் இழுக்கும் வேலைகளைத் தொடங்கியுள்ளன அரசியல் கட்சிகள்.

உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை
உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை

தேனி மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் 10 மாவட்டக் கவுன்சிலர்கள், 98 ஒன்றியக் கவுன்சிலர்களுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதில், மாவட்ட கவுன்சிலர்களில் 8 இடங்களை ஆளும் அ.தி.மு.க-வும், 2 இடங்களை தி.மு.க-வும் கைப்பற்றின.

இதேபோல, ஒன்றியக் கவுன்சிலர்களில் 49 இடங்களை அ.தி.மு.க-வும், 42 இடங்களை தி.மு.க-வும், 5 இடங்களை அ.ம.மு.க-வும், இரண்டு இடங்களை சுயேச்சைகளும் கைப்பற்றினர். 8 ஊராட்சி ஒன்றியங்களில் ஆண்டிபட்டி, கம்பம், போடி, பாளையம் ஆகிய 4 ஒன்றியங்களில் அ.தி.மு.க பெரும்பான்மையான இடங்களிலும் தேனி, சின்னமனூர், பெரியகுளம் ஆகிய 3 ஒன்றியங்களில் தி.மு.க பெரும்பான்மையான இடங்களிலும் வெற்றி பெற்றன. கடமலை மயிலை ஒன்றியத்தில் இரு கட்சிகளும் சம அளவு இருப்பதால், இழுபறியில் உள்ளது.

இவையெல்லாம் ஒருபுறம் என்றால், அ.தி.மு.க பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றிய ஆண்டிபட்டி, போடி, கம்பம், பாளையம் ஆகிய ஒன்றியங்களில், போடி ஒன்றியத்தில் மட்டும், மொத்தம் உள்ள 13 வார்டுகளில் அ.தி.மு.க வசம் 6 வார்டுகளும், தி.மு.க வசம் 5 வார்டுகளும் அ.ம.மு.க மற்றும் சுயேச்சை ஆகியோர் ஒரு வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளதால், அ.ம.மு.க மற்றும், சுயேச்சை ஆதரவு யாருக்கு என்பதைப் பொறுத்தே போடி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தெடுக்கப்படுவர்.

தேர்தலில் வென்றவர்கள்
தேர்தலில் வென்றவர்கள்

இதேபோல, தி.மு.க பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றிய தேனி, சின்னமனூர், பெரியகுளம் ஆகிய மூன்று ஒன்றியங்களில், பெரியகுளம் ஒன்றியத்தில் மட்டும், மொத்தம் உள்ள 16 வார்டுகளில் அ.தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 7 வார்டுகளிலும் தி.மு.க 8 வார்டுகளிலும், அ.ம.மு.க ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளதால், பெரியகுளம் ஒன்றியத்தை தி.மு.க பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், கடமலை மயிலை ஒன்றியத்திலும் இழுபறி நீடிக்கிறது.

மேற்கண்ட போடி, பெரியகுளம், கடமலை மயிலை ஆகிய ஒன்றியங்களில் அ.தி.மு.க, தி.மு.க ஆகிய கட்சிகள், சுயேச்சை மற்றும் அ.ம.மு.க கவுன்சிலர்களை வளைப்பதில் தீவிரமாக உள்ளன. யார் யாருக்கு ஆதரவு கொடுக்கப்போகின்றனர் என்பதைப் பொறுத்தே ஒன்றியத் தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தெடுக்கப்பட உள்ளனர்.

தேர்தலில் வென்றவர்கள்
தேர்தலில் வென்றவர்கள்

இதுகுறித்து அ.ம.மு.க நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். ``எங்கள் ஆதரவு யாருக்கு என்பது தலைமை கூறும் பதிலில்தான் உள்ளது. பெரும்பாலும் தி.மு.க-வுக்கு ஆதரவு கொடுக்க வாய்ப்பில்லை'' என்றார்.

சுயேச்சைகளுக்கு அதிகமாகப் பணம் கொடுத்து தங்கள் பக்கம் இழுப்பதற்கு இரு கட்சிகளும் போட்டிபோட்டுக் கொண்டிருக்கின்றன. இதனால், உற்சாகத்தில் உள்ளனர் சுயேச்சைகள். ஒரு ஒன்றியக் கவுன்சிலருக்கு 10 லட்சம் முதல் பேரம் தொடங்கியுள்ளதாகவும் சொல்கின்றனர்.

தேனி மாவட்டத்தில் அதிக ஒன்றியங்களைக் கைப்பற்றும் நோக்கத்தில் களமிறங்கியுள்ளது அ.தி.மு.க.

அடுத்த கட்டுரைக்கு