Published:Updated:

`முடியாத பாதாளச் சாக்கடைப் பணி'- களைகட்டுமா மயிலாடுதுறை கடைமுழுக்கு பெருவிழா..?

மயிலாடுதுறை கடைமுழுக்கு பெருவிழா ஆயத்தப் பணிகளை உடனே தொடங்க வேண்டி நாகை மாவட்ட ஆட்சியருக்கு மயிலாடுதுறை ஆன்மிக பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.

மயிலாடுதுறை காவிரி துலா கட்டம்
மயிலாடுதுறை காவிரி துலா கட்டம்

மயிலாடுதுறை ஆன்மிக பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராம.சேயோன் இன்று நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரவீன் நாயரை சந்தித்து மயிலாடுதுறை கடை முழுக்கு பெருவிழாவுக்கு வேண்டிய ஆயத்தப் பணிகளை உடனே தொடங்க உரிய துறைகளுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டுமாறு மனு கொடுத்துள்ளார்.

வழக்கறிஞர்  ராம. சேயோன்
வழக்கறிஞர் ராம. சேயோன்

வழக்கறிஞர் ராம. சேயோனிடம் பேசியபோது, ``மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி மாதம் முழுவதும் துலா உற்சவ பெருவிழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கடந்த 18-ம் தேதி வெள்ளிக்கிழமை (ஐப்பசி - 1) துலா உற்சவம் தொடங்கியது. தினந்தோறும் மயிலாடுதுறை கோயில்களிலுள்ள உற்சவ மூர்த்திகள் வீதியுலா வந்து துலாக்கட்ட காவிரி படித்துறையில் தீர்த்தவாரி கொடுத்து பக்தர்களுக்கு அருளாசி தருவது வழக்கம்.

எதிர்வரும் நவம்பர் 15-ம் தேதியன்று மயிலாடுதுறை மயூரநாதர், வள்ளலார்கோயில் வதான்யேஸ்வரர் மற்றும் பரிமள ரங்கநாதர் ஆகிய திருக்கோயில்களில் தேரோட்டம் நடைபெற உள்ளது. திருக்கோயிலைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் சரிவர பராமரிக்கப்படாத காரணத்தால் ஆங்காங்கே சாலைகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

மயிலாடுதுறை காவிரி துலா கட்டம்
மயிலாடுதுறை காவிரி துலா கட்டம்

எனவே, மேற்கண்ட திருக்கோயில்களைச் சுற்றியுள்ள நான்கு வீதி சாலைகளின் ஸ்திரத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும். மேலும், நவம்பர் 16-ம் தேதி சனிக்கிழமையன்று கடைமுழுக்கு பெருவிழா நடைபெறவுள்ளது. அன்றைய தினம் பல்லாயிரக்கணக்கான மக்கள் காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடுவார்கள். எனவே, பொதுப்பணித்துறை மூலம் காவிரியில் தொடர்ந்து தண்ணீர் வருவதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்ய பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட வேண்டும்.

அன்றைய தினம் பெருமளவு மக்கள் கூடுவதால் பல்வேறு தொற்று நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. மயிலாடுதுறையில் தற்போது நகரெங்கும் குப்பைகள் மலைபோல் குவிந்துள்ளன.

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டம்
மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டம்

குப்பைகளை அகற்றி நோய்த்தொற்று பரவாமல் நடவடிக்கை எடுக்க மயிலாடுதுறை நகராட்சிக்கு உத்தரவிட வேண்டும். கடைமுழுக்கு திருவிழா ஏற்பாடுகளை இப்போதே தொடங்கிட அனைத்து துறைகளுக்கும் உரிய உத்தரவுகள் பிறப்பித்து விழா சிறக்க உதவிட வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் ஆன்மிக பேரவை சார்பில் மனு கொடுத்துள்ளோம்" என்றார்.